
நடிகர் பிரதீப் ரங்கநாதனின் ‘டிராகன்’ திரைப்படம் வெளியாகி வெற்றிகரமாக 50 நாள்களை நிறைவு செய்துள்ளது.
‘ஓ மை கடவுளே’ திரைப்படம் மூலம் அறிமுகமான இயக்குநர் அஷ்வத் மாரிமுத்துவின் இயக்கத்தில், ‘கோமாளி’ மற்றும் ‘லவ் டுடே’ ஆகிய படங்களின் இயக்குநரும் நடிகருமான பிரதீப் ரங்கநாதன் கதாநாயகனாக நடித்து உருவான ‘டிராகன்’ திரைப்படம் கடந்த பிப்ரவரி 21 ஆம் தேதி திரையரங்குகளில் வெளியானது.
பிரதீப் மற்றும் அஷ்வத் இணைந்து எழுதி அவர்களது காம்போவில் ரூ.37 கோடியில் உருவான இந்தப் படம் வெளியான 10 நாள்களில் ரூ.100 கோடி வசூல் செய்து மிகப் பெரியளவிலான வெற்றியடைந்தது.
ஏ.ஜி.எஸ் நிறுவனம் தயாரித்த இந்தத் திரைப்படத்திற்கு லியோன் ஜேம்ஸ் இசையமைத்திருந்தார். மேலும், கயாடு லோஹர், அனுபமா பரமேஸ்வரன், இயக்குநர் கே.எஸ்.ரவிக்குமார், யூடியூப் பிரபலங்களான விஜே சித்து மற்றும் ஹர்ஷத் கான் ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்திருந்தனர்.
இந்நிலையில், கடந்த மார்ச்.21 ஆம் தேதி நெட்பிளிக்ஸ் ஓடிடி தளத்தில் ‘டிராகன்’ வெளியான போதிலும் திரையரங்குகளில் வெற்றிகரமாக 50-வது நாளை இன்று (ஏப்.11) நிறைவு செய்துள்ளதாக ஏஜிஎஸ் நிறுவனம் தனது எக்ஸ் தளத்தில் தெரிவித்துள்ளது.
முன்னதாக, ‘டிராகன்’ இளம் சமூதாயத்தினர் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்ற நிலையில் பலரும் அதில் வரும் கதாபாத்திரங்கள் மற்றும் காட்சிகளைத் தங்களது வாழ்வோடு ஒப்பிட்டு சமூக வலைதளங்களில் பகிர்ந்து வந்தனர்.