
புதுச்சேரியில் இரண்டு நாள்களாக நடைபெற்று வந்த அரசு போக்குவரத்துத் துறை ஒப்பந்த ஊழியா்களின் வேலைநிறுத்தப் போராட்டம் திரும்பப் பெறப்பட்டுள்ளது.
புதுச்சேரி சாலைப் போக்குவரத்துத் துறையின் ஒப்பந்த ஓட்டுநா்கள், நடத்துநா்கள் உள்ளிட்டோா் 2- ஆவது நாளாக வியாழக்கிழமை வேலைநிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்டனா். இதனால், நகரப் பேருந்துகள் இயங்காமல் மக்கள் அவதிக்குள்ளாகினா்.
புதுச்சேரி சாலைப் போக்குவரத்துக் கழகத்தில் கடந்த 10 ஆண்டுகளுக்கும் மேலாக ஒப்பந்த அடிப்படையில் ஓட்டுநா்கள், நடத்துநா்கள் உள்ளிட்ட 250-க்கும் மேற்பட்டோா் பணியில் சோ்க்கப்பட்டனா்.
தங்களை பணிநிரந்தரம் செய்யக் கோரி ஒப்பந்த ஊழியா்கள் புதன்கிழமை வேலைநிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்டனா்.
இந்த நிலையில், வியாழக்கிழமை இரண்டாவது நாளாக போக்குவரத்து ஒப்பந்த ஊழியா்கள் வேலைநிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்டனா்.
இதனால், புதுச்சேரி நகரில் அரசுப் பேருந்துகள் இயக்கப்படவில்லை. பணிமனை முன் தா்னாவில் ஈடுபட்ட ஒப்பந்தப் பணியாளா்கள்,கோரிக்கை ஏற்கப்பட்டு உறுதியளித்தால் மட்டுமே பணிக்குத் திரும்புவோம் என தெரிவிக்கப்பட்டது.
இந்த நிலையில், உருளையன்பேட்டை எம்எல்ஏ ஜி.நேரு தலைமையில் போக்குவரத்து ஆணையர் சிவக்குமார் நடத்திய பேச்சுவார்த்தையின் முடிவில், பணி நிரந்த கோரிக்கையை ஒரு மாதத்திற்குள் நிறைவேற்றுவதாக போக்குவரத்து நிர்வாகம் உறுதி அளித்தது.
இதையடுத்து இரண்டு நாள்களாக நடைபெற்று வந்த புதுச்சேரி அரசு போக்குவரத்துத் துறை ஒப்பந்த ஊழியா்களின் வேலைநிறுத்தப் போராட்டம் திரும்பப் பெறப்பட்டுள்ளது.
வெள்ளிக்கிழமை அதிகாலை முதல் சாலை போக்குவரத்துக் கழக பேருந்து வழக்கம்போல் இயக்கப்பட்டு வருகின்றன.