
தஞ்சாவூர் அருகே மின்சாரம் பாய்ந்து கணவன்-மனைவி பலியான சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
தஞ்சாவூர் மாவட்டம் கள்ளப்பெரம்பூரை சேர்ந்தவர் விவசாயி சுப்ரமணியன் (53). விவசாயி. இவரது மனைவி ராமாயி (47). இவர்களுக்கு சொந்தமான வயல் கள்ளப்பெரம்பூர் - பூதலூர் சாலையில் உட்புறமாக அமைந்துள்ளது.
தஞ்சை மற்றும் சுற்றுப் பகுதிகளில் கடந்த இரண்டு நாள்களாக கனமழை மற்றும் பலத்த காற்று வீசி வருகிறது. சனிக்கிழமை இரவு சித்திரக்குடி, கள்ளப்பெரம்பூர், ஆலக்குடி, வல்லம் பூதலூர் பகுதிகளில் பலத்த காற்றுடன் மழை பெய்தது. இதனால் தாங்கள் சாகுபடி செய்துள்ள பயிர்கள் நன்றாக உள்ளதா என்பதை பார்ப்பதற்காக சுப்பிரமணியன் மற்றும் ராமாயி இருவரும் தங்கள் நிலத்திற்குச் சென்றுள்ளனர்.
இவர்கள் வயலுக்கு செல்லும் வழியில் உள்ள மற்றொருவரின் வயலில் ஆடு, மாடுகள் மேயாமல் இருப்பதற்காக கம்பி வேலி அமைக்கப்பட்டு உள்ளது. இந்த கம்பி வேலியின் மீது சனிக்கிழமை அடித்த பலத்த காற்றினால் மின்சாரக் கம்பி அறுந்து விழுந்துள்ளது.
இதனை கவனிக்காமல் சுப்பிரமணியன் மற்றும் ராமாயி இரும்பு வேலி மீது கை வைத்துள்ளனர். அப்போது மின்சாரம் பாய்ந்து கணவன்-மனைவி இருவரும் சம்பவ இடத்திலேயே பலியாகினர்.
இது குறித்து தகவல் அறிந்த கள்ளப்பெரம்பூர் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று இருவரது உடலையும் மீட்டு தஞ்சாவூர் மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு உடல்கூறாய்வுக்காக அனுப்பி வைத்தனர்.
மேலும், இது குறித்த புகாரின் பேரில் கள்ளப்பெரம்பூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.