
சத்தீஸ்கர் மாநிலம் துர்க் ரயில் நிலையத்தில் கடத்தப்பட்ட ஒன்றரை வயது ஆண் குழந்தையை 13 நாள்களுக்குப் பின் திருவிடைமருதூர் அருகே திருநீலக்குடியில் சத்தீஸ்கர் மாநில போலீஸார் மீட்டனர். குழந்தையை மீட்ட போலீஸார் குழந்தையை கடத்தியவரையும் கைது செய்து சத்தீஸ்கர் அழைத்துச் சென்றனர்.
சத்தீஸ்கர் மாநிலம் துர்க் ரயில் நிலையத்தில் கடந்த ஜூன் மாதம் 27 ஆம் தேதி சூர்யா தாகூர் - சோனு திவாரி தம்பதியினரின் 18 மாத ஆண் குழந்தையுன் இருந்துள்ளனர்.
குழந்தையை ரயில் நிலையத்தில் வைத்து விட்டு அருகில் இருந்த தேநீர் கடைக்கு தாயும் தந்தையும் சென்றுள்ளனர் .
திரும்பி வந்து பார்க்கும் போது குழந்தை அங்கு இல்லை. உடனடியாக அருகில் இருந்த காவல் நிலையத்தில் புகார் தெரிவிக்கப்பட்டது.
இதனைத் தொடர்ந்து அங்கிருந்த சிசிடிவி கேமராவில் பதிவான காட்சிகளின் உதவியுடன் குழந்தையை கடத்திய நபரை காவல்துறையினர் தேட ஆரம்பித்தனர்.
கண்காணிப்பு கேமராவில் குழந்தையுடன் ஒரு நபர் டிக்கெட் கவுண்டரில் டிக்கெட் வாங்குவது தெரிந்தது. டிக்கெட் கவுண்டரில் காவல்துறையினர் விசாரணை மேற்கொண்னர்.
அப்போது, குழந்தையை கடத்திய நபர் தமிழ்நாடு செல்ல முன்பதிவு செய்திருந்ததும் முன்பதிவு சீட்டில் அவரது பெயர், முகவரி, தொலைபேசி எண்கள் இருந்தது.
இதனைக் கொண்டு குழந்தை கடத்திய ஆறுமுகத்தை சத்தீஸ்கர் மாநில போலீசார் தேடி வந்தனர்.
குழந்தை கடத்திய ஆறுமுகத்தின் செல்போன் திருவிடைமருதூர் அருகே திருநீலக்குடியில் இருப்பது தெரியவந்தது .
இதையடுத்து சத்தீஸ்கர் மாநில போலீஸார் குழந்தையின் பெற்றோர்களுடன் புதன்கிழமை திருவிடைமருதுாருக்கு வந்தனர்.
திருவிடைமருதூர் காவல்துறையினர் உதவியுடன் ஆறுமுகத்தின் முகவரியை சத்தீஸ்கர் மாநில போலீஸார் தேடினர்.
முன்பதிவு சீட்டில் ஆறுமுகத்தின் இருப்பிடம் திருநீலக்குடி அருகே சாத்தனூர் சந்திரன் தெரு என குறிப்பிடப்பட்டிருந்தது.
அந்த முகவரியில் தேடிய போது அங்கு ஆறுமுகம் இல்லை. ஆறுமுகம் சீர்காழியில் உள்ள உறவினர் வீட்டில் இருப்பது தெரியவந்தது.
உடனடியாக சீர்காழி காவல் நிலையம் மற்றும் ஆறுமுகத்தின் உறவினர்கள் உதவியுடன் ஆறுமுகத்தையும் கடத்தப்பட்ட குழந்தையும் திருநீலக்குடி காவல் நிலையத்திற்கு அழைத்து வரப்பட்டனர் .
அங்கு அவர்கள் வந்ததும் குழந்தையை மீட்ட சத்தீஸ்கர் மாநில காவல்துறையினர் குழந்தையை கடத்திய ஆறுமுகத்தை கைது செய்தனர்.
இதனைத் தொடர்ந்து வியாழக்கிழமை இரவு ரயில் மூலம் கும்பகோணத்தில் இருந்து சத்தீஸ்கர் மாநில போலீஸார் மற்றும் குழந்தை கடத்திய ஆறுமுகம், குழந்தை மற்றும் பெற்றோர்கள் சத்தீஸ்கர் புறப்பட்டனர்.
மேலும், குழந்தை கடத்திய ஆறுமுகம் காவல்துறையினரிடம் கூறும் போது, குழந்தையை மிகவும் பிடித்திருந்ததால் கடத்தியதாகவும், இந்த குழந்தை உங்களிடம் திரும்ப கிடைத்தது அதிர்ஷ்டம். குழந்தையை யாருக்கும் அதிக தொகைக்கு கொடுக்காமல் வைத்திருந்தது அந்த குழந்தையின் அதிர்ஷ்டம் என்று கூறினான்.
ஆறுமுகம் கடத்தி வந்த குழந்தையுடன் அவரின் உறவினர் வீட்டுக்கு செல்லும்போது உறவினர்கள் அனைவரும் இவரை அனுமதிக்காமல் குழந்தையை விட்டு வாருங்கள் என கூறியுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.
இந்த சம்பவம் திருநீலக்குடி பகுதி மட்டுமல்லது கும்பகோணம் பகுதியில் பரபரப்பாக பேசப்பட்டது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.