
சென்னை: நீதிமன்ற தீர்ப்பின் அடிப்படையில் தூய்மைப் பணியாளர்கள் கலைந்து செல்ல வேண்டும்; மாநகராட்சி வளாகம் போராட்டம் நடத்துவதற்கான இடம் இல்லை என சென்னை மாநகராட்சி மேயர் பிரியா தெரிவித்தார்.
சென்னை மாநகராட்சி வாளாகத்தில் செய்தியாளர்களுடன் அவர் பேசியதாவது:
தூய்மைப் பணியாளர்களுடன் பல்வேறு கட்ட பேச்சுவார்த்தைகள் நடைபெற்றது. ஒவ்வொரு முறையும் ஒவ்வொரு விதமான கோரிக்கைகளை முன்வைத்தனர். அவர்களின் முக்கியமான கோரிக்கையாக பணி நிரந்தரம், பணி பாதுகாப்பு, ஊதிய உயர்வை முன்வைத்தனர். அவர்கள் தரப்பிலும் நீதிமன்றம் சென்றிருக்கிறார்கள். மாநகராட்சி தரப்பிலும் நீதிமன்றம் சென்றிருக்கிறோம்.
மாநகராட்சி வாளாகம் போராட்டம் நடத்துவதற்கான இடம் இல்லை
மாநகராட்சி வாளாகம் போராட்டம் நடத்துவதற்கான இடம் இல்லை என நீதிமன்றம் தெரிவித்துள்ளது. அங்கிருந்து அவர்களை வெளியேற்ற உத்தரவிட்டுள்ளது.
சென்னையில் போராட்டம் நடத்துவதற்கு என்று சில இடங்கள் உள்ளது. காவல் துறையினரின் அனுமதி பெற்று அந்த இடத்தில் போராட்டத்தை மேற்கொள்ளலாம். ஆனால் மாநகராட்சி போராட்டம் நடத்துவதற்கான இடம் இல்லை. அந்த வகையில் தான் தீர்ப்பு வழங்கப்பட்டுள்ளது. அந்தத் தீர்ப்பின் அடிப்படையில் தூய்மைப் பணியாளர்கள் கலைந்து செல்லுமாறு கேட்டுக்கொள்கிறோம்.
ஆகஸ்ட் 31 வரை கால அவகாசம்
ஏற்கனவே பணியாற்றி இருந்த தூய்மைப் பணியாளர்கள் தனியாருடன் இணைந்து பணியாற்றுவதற்கு ஆகஸ்ட் 31 ஆம் தேதி வரை கால அவகாசம் கொடுக்கப்பட்டுள்ளது. எனவே, ஆகஸ்ட் 31-க்குள் தூய்மைப் பணியாளர்கள் பணிக்கு திரும்புமாறு கேட்டுக்கொள்கிறோம். நீதிமன்ற தீர்ப்பின் அடிப்படையில் தூய்மைப் பணியாளர்கள் மாநகராட்சிக்கு ஒத்துழைப்பு தர வேண்டும். முன் எப்போதும் இல்லாத வகையில் பணியில் பாதுகாப்பு இருக்கிறது. பல்வேறு சலுகைகளும் வழங்கப்பட்டுள்ளன. தூய்மைப் பணியாளர்களுக்கு என்றைக்குமே பணி பாதுகாப்பு இருக்கும் என்று மாநகராட்சி சார்பில் தெரிவித்துக் கொள்கிறோம்.
ஏற்கனவே இருக்கக்கூடிய தூய்மைப் பணியாளர்களுக்கு பி.எஃப், ஹெல்த் இன்சூரன்ஸ், அவர்களுடைய குழந்தைகளுக்கான கல்வி ஊக்கத்தொகை, போனஸ், பண்டிகை காலங்களில் சிறப்பு பரிசுகள் என பல்வேறு வகைகளில் சலுகைகள் வழங்கப்படுகிறது. இந்த சலுகைகளில் ஒரு சிலதுதான் கடந்த காலங்களில் கொடுக்கப்பட்டது. ஆனால் தற்போது முழுமையாக கொடுக்கப்படுகிறது. எனவே தூய்மைப் பணியாளர்கள் நம்பிக்கையோடு பணிக்கு திரும்பலாம் எனக் கேட்டுக்கொள்கிறோம்.
மாநகராட்சியிடம் தான் உரிமை
தனியாரிடம் ஒப்படைத்தாலும் அதனுடைய உரிமை மாநகராட்சியிடம் தான் இருக்கும்.
ஊதியம் உள்ளிட்ட பிற கோரிக்கைகள் குறித்து ஒரே நாளில் எடுக்கக்கூடிய முடிவல்ல. அவர்கள் பணிக்கு வந்து சேரட்டும், அதன் பிறகு தொடர்ந்து பேச்சுவார்த்தை நடத்தி முடிவு எடுக்கலாம்.
பேச்சுவார்த்தை தோல்வி என்று குறிப்பிட முடியாது
போராட்டம் நடத்தி வரும் தூய்மைப் பணியாளர்களுடன் அமைச்சர் சேகர் பாபு, அமைச்சர் கே.என்.நேரு, மேயர் பிரியா என 8 கட்டமாக பேச்சுவார்த்தை நடத்தப்பட்டது. இதில் உடன்பாடு எதுவும் எட்டப்படவில்லை. அதனால் பேச்சுவார்த்தை தோல்வி என்று குறிப்பிட முடியாது. இதுதொடர்பான இன்னொரு வழக்கு உயர்நீதிமன்றத்தில் விசாரணையில் உள்ளது. அதன் தீர்ப்பு அடிப்படையில் அடுத்த கட்ட நடவடிக்கைகள் எடுக்கப்படும் என கூறினார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.