
உடல்நலிவுற்று மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் தகைசால் தமிழர் நல்லகண்ணு உடல்நலன் குறித்து முத்தரசனிடமும், தமிழக மருத்துவத்துறை அமைச்சர் மா. சுப்பிரமணியனிடம் தொடர்ந்து நலன் விசாரித்து வருகிறேன். நல்லகண்ணு விரைந்து நலம்பெற விழைகிறேன் என முதல்வர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவா் ஆா்.நல்லகண்ணு (100) வெள்ளிக்கிழமை(ஆக.22) வீட்டில் கீழே விழுந்ததில் தலையில் காயம் ஏற்பட்டு, நந்தனத்தில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டாா். அவருக்கு ஸ்கேன் உள்ளிட்ட பரிசோதனைகள் செய்யப்பட்டன. தலையில் தையல் போடப்பட்டு, தீவிர சிகிச்சைப் பிரிவில் சிறப்பு சிகிச்சைகள் வழங்கப்பட்டன.
அவரது உடல்நிலை முன்னேற்றம் அடைந்த நிலையில், திடீர் மூச்சுத்திணறல் ஏற்பட்டதன் காரணமாக சென்னை ராஜீவ் காந்தி அரசு மருத்துவமனைக்கு மாற்றப்பட்டார்.
ராஜீவ் காந்தி அரசு மருத்துவமனையின் சிறப்பு அவசர சிகிச்சைப் பிரிவில் நல்லகண்ணுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகின்றது.
இந்நிலையில், தகைசால் தமிழர் நல்லகண்ணு உடல்நிலை குறித்து இந்திய கம்யூனிஸ்ட் கட்சி மாநிலச் செயலாளா் முத்தரசனிடமும், தமிழக மருத்துவத்துறை அமைச்சர் மா. சுப்பிரமணியனிடம் தொடர்ந்து நலன் விசாரித்து வருகிறேன் என முதல்வர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
விரைந்து நலம்பெற விழைகிறேன்
இது தொடர்பாக முதல்வர் ஸ்டாலின் எக்ஸ் பக்கத்தில் பதிவிட்டிருப்பதாவது:
உடல்நலிவுற்று மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் தகைசால் தமிழர் நல்லகண்ணு அய்யா உடல்நலன் குறித்து தோழர் முத்தரசனிடமும், அமைச்சர் மா.சுப்பிரமணியனிடமும் தொடர்ந்து நலன் விசாரித்து வருகிறேன். நல்லகண்ணு அய்யா விரைந்து நலம்பெற விழைகிறேன் என தெரிவித்துள்ளார்.
இதனிடையே, சென்னை ராஜீவ் காந்தி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள நல்லகண்ணுவை நேரில் பார்வையிட்டு அவரது உடல்நலம் குறித்து மருத்துவர்களுடன் அமைச்சர் மா. சுப்பிரமணியன் ஆலோசனை நடத்தினார்.
பின்னர் அவர் செய்தியாளர்களுடன் பேசுகையில், கடந்த 48 மணிநேரத்தில் அவரது உடல்நிலை நல்ல முன்னேற்றம் அடைந்த நிலையில், செயற்கை சுவாசம் அகற்றப்பட்டது. உறவினர்களை அடையாளம் காணும் நிலையில் முன்னேற்றம் அடைந்திருந்தார்.
இதனிடையே உணவுக் குழாயில் அடைப்பு ஏற்பட்டதால் மீண்டும் மூச்சுத் திணறல் ஏற்பட்டதை அடுத்து மீண்டும் செயற்கை சுவாசம் அளிக்கப்பட்டு வருகிறது.
தீவிர கண்காணிப்பில் இருக்கும் அவரது உடல்நிலை குறித்து மக்கள் மற்றும் கட்சியினருக்கு தகவல் அளிப்பதற்காக தனி மருத்துவக் குழு அமைக்கப்பட்டுள்ளது. அவரை காண்பதற்கு நேரில் யாரும் வர வேண்டாம் என கூறினார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.