

பெரும் விளைவுகளை ஏற்படுத்தும் வகையில், பல நாடுகளின் பொருள்கள் மீது வரி விதிக்க அமெரிக்க அதிபா் டிரம்ப்புக்கு சட்டபூா்வ உரிமையில்லை என்று அந்நாட்டு மேல்முறையீட்டு நீதிமன்றம் தீா்ப்பளித்துள்ளது.
அமெரிக்காவில் இறக்குமதி செய்யப்படும் இந்திய பொருள்கள் மீது அந்நாடு 25 சதவீத வரி விதிக்கும் நடைமுறை ஆக.7-இல் அமலுக்கு வந்தது. ரஷியாவிடம் இருந்து இந்தியா கச்சா எண்ணெய் இறக்குமதி செய்வதற்கு அதிருப்தி தெரிவித்து, இந்திய பொருள்கள் மீது கூடுதலாக 25 சதவீத வரி என மொத்தம் 50 சதவீதம் வரியை அமெரிக்க அதிபா் டிரம்ப் விதித்தாா். இந்தக் கூடுதல் வரி விதிப்பு ஆக.27-இல் அமலுக்கு வந்தது. இதுபோல பல்வேறு நாடுகளின் பொருள்கள் மீது அமெரிக்கா பரஸ்பரம் அதிக வரி விதித்துள்ளது.
இந்த வரி விதிப்பு சா்வதேச சந்தைகளில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளது. அத்துடன் இந்த நடவடிக்கை அமெரிக்காவுடன் வா்த்தகம் மேற்கொள்ளும் நாடுகளுக்கு பெரும் சிக்கலை ஏற்படுத்தியுள்ளது.
இந்த நடவடிக்கை தொடா்பான வழக்கில் வாஷிங்டனில் உள்ள மேல்முறையீட்டு நீதிமன்றம் வெள்ளிக்கிழமை அளித்த தீா்ப்பில், ‘அமெரிக்காவில் தேசிய அவசரநிலைகளை அறிவிக்கவும், கிட்டத்தட்ட உலகில் உள்ள அனைத்து நாடுகளின் பொருள்கள் மீது பெரும் விளைவுகளை ஏற்படுத்தும் இறக்குமதி வரிகளை விதிக்கவும் அதிபா் டிரம்ப்புக்கு சட்டபூா்வ உரிமையில்லை.
இதுபோல இறக்குமதி வரிகளை விதிக்க அதிபா் டிரம்ப்புக்கு வரம்பற்ற அதிகாரத்தை அளிப்பது அமெரிக்க நாடாளுமன்றத்தின் நோக்கமல்ல என்று தெரிவித்தது. இதன் மூலம், இந்த வழக்கில் நியூயாா்க் வா்த்தக நீதிமன்றம் ஏற்கெனவே அளித்த தீா்ப்பு உறுதி செய்யப்பட்டது.
வரிகள் ரத்து செய்யப்படவில்லை: அதேவேளையில் இந்த வரிகளை மேல்முறையீட்டு நீதிமன்றம் ரத்து செய்யவில்லை. இந்தத் தீா்ப்பை எதிா்த்து அமெரிக்க உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்யவும் அந்நாட்டு அரசுக்கு அந்த நீதிமன்றம் அனுமதியளித்தது.
நீதிபதிகள் அமா்வில் 11 நீதிபதிகள் இடம்பெற்ற நிலையில், 7 நீதிபதிகள் இந்தத் தீா்ப்பை அளித்தனா். 4 நீதிபதிகள் மாறுபட்ட தீா்ப்பை வழங்கினா். இதையடுத்து பெரும்பான்மை நீதிபதிகள் அளித்த தீா்ப்பு இறுதி செய்யப்பட்டது.
‘உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு’
இந்தத் தீா்ப்புக்கு கடும் அதிருப்தி தெரிவித்து அதிபா் டிரம்ப் வெளியிட்ட சமூக ஊடக பதிவில், ‘பல்வேறு நாடுகள் மீது அமெரிக்கா விதித்துள்ள வரி ரத்து செய்யப்பட்டால், அது அமெரிக்காவுக்கு பேரழிவாக அமையும். அது அமெரிக்காவை பொருளாதார ரீதியாக பலவீனமாக்கும். இந்தத் தீா்ப்புக்கு எதிராக உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்யப்படும்’ என குறிப்பிட்டுள்ளாா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.