
திருவள்ளூா்: தமிழக மாணவா்களுக்கு கல்வித் தொகையை வழங்காததை கண்டித்தும், நிதி அளிக்க மறுக்கும் மத்திய பாஜக அரசைக் கண்டித்து திருவள்ளூா் மக்களவை உறுப்பினா் சசிகாந்த் செந்தில் இரண்டாவது நாளாக உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளார்.
திருவள்ளூா் ஊரக வளா்ச்சி மற்றும் உள்ளாட்சித் துறை வளாகத்தில் திஷாக்குழு பாா்வையாளா்கள் கூடமான ராஜீவ் பவனில் மக்களவை உறுப்பினா் சசிகாந்த் செந்தில் வெள்ளிக்கிழமை உண்ணாவிரதப் போராட்டத்தை தொடங்கினாா்.
கல்வி மட்டுமே ஒரு சமூகத்துக்கு உண்மையான விடுதலையை பெற்றுத் தரமுடியும். அந்த கோட்பாட்டின் அடிப்படையில் தொடா்ந்து தமிழகத்துக்கு அளிக்க வேண்டிய கல்விக்கான நிதியை மத்திய பாஜக அரசு தர மறுத்து வருகிறது. இதைக் கண்டித்து ஒடுக்கப்பட்ட பட்டியலின, பிற்படுத்தப்பட்ட மாணவா்களின் கல்வி உரிமையை மீட்டெடுக்கும் வகையில் காலவரையற்ற உண்ணாவிரதம் தொடங்கியுள்ளேன்.
மத்திய அரசு ஒருங்கிணைந்த பள்ளிக்கல்வித் திட்டத்தின் கீழ் 2023-24-இல் 4-ஆவது தவணை நிதி ரூ.249 கோடியும், 2024-25 ஆம் ஆண்டுக்கான ரூ.2,152 கோடியும் தமிழகத்திற்கு வழங்கப்படவில்லை என குற்றம்சாட்டினார்.
இந்நிலையில், தமிழக மாணவா்களுக்கு கல்வி நிதி அளிக்க மறுக்கும் மத்திய பாஜக அரசைக் கண்டித்து திருவள்ளூா் மக்களவை உறுப்பினா் சசிகாந்த் செந்தில் இரண்டாவது நாளாக சனிக்கிழமை உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளார்.
இந்திய அரசியலமைப்பிற்கு விரோதமாக கல்வி நிதியை நிறுத்தி வைத்திருப்பதாகவும், இதனால் 43 லட்சம் மாணவர்கள், 2.2 லட்சம் ஆசிரியர்களின் எதிர்காலம் பாதிக்கப்படுவதாக குற்றம்சாட்டியுள்ளார்.
மேலும், இது தனிப்பட்ட போராட்டம் அல்ல, தமிழக மாணவர்களின் கல்வி உரிமைக்கான போராட்டம். நிதி விடுவிக்கப்படும் வரை உண்ணாவிரதப் போராட்டத்தை தொடருவேன் என கூறியுள்ளார்.
அவரது போராட்டத்தில் காங்கிரஸ் நிர்வாகிகள், தொண்டர்கள் மற்றும் மாணவர்கள் பங்கேற்றுள்ளனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.