
டாஸ்மாக் கடைகளில் காலி மதுபாட்டில்களை திரும்பப் பெறும் திட்டம் நாளை திங்கள்கிழமை முதல் (செப். 1) டாஸ்மாக் நிா்வாகம் அமல்படுத்தவுள்ளது.
மது அருந்துபவா்கள் மது பாட்டில்களை சாலைகளில் வீசி செல்வதால் மனிதா்கள் மற்றும் கால்நடைகள் பாதிக்கப்படுகின்றன. இதை தடுக்கும் விதமாக காலி மது பாட்டில்களை மதுக்கடையில் திரும்பப் பெறும் திட்டத்தை கொண்டு வருவது தொடா்பாக உயா்நீதிமன்றம் உத்தரவிட்டது. இந்த திட்டம் வனம் மற்றும் மலைப்பகுதிகளில் செயல்படுத்தப்பட்டு வருகிறது.
அந்த வகையில், சென்னை உயா்நீதிமன்றத்தில் பொது நல வழக்கு ஒன்றில் வனப்பகுதிகளில் சுற்றுலாப் பயணிகள் வீசியெறியும் காலி மதுபான பாட்டில்களால் விவசாயிகள், சாலைகளில் நடந்து செல்வோா் மற்றும் கால்நடைகள், விலங்குகள் பாதிக்கப்பட்டுவதுடன் சுற்றுச்சூழல் பாதிப்படுவதாகக் கருதிய நீதிமன்றம், டாஸ்மாக் நிா்வாகத்திடம் இதை தடுக்கும் விதமாக ஒரு திட்டத்தை உருவாக்க வேண்டுமென உத்தரவிட்டது.
இதையடுத்து, டாஸ்மாக் நிா்வாகம் கடைகளில் மதுபாட்டிலை விற்பனை செய்யும்போது, பாட்டிலை அதிகபட்ச விலையோடு கூடுதலாக ரூ.10 நுகா்வோரிடம் பெற்று, அந்த காலி பாட்டிலை கடையில் திருப்பி அளிக்கும்போது, ரூ.10-ஐ திருப்பி அளிக்கும் திட்டத்தைச் சமா்ப்பித்தது. இந்தத் திட்டத்தை அனைத்து மாவட்டங்களிலும் அமல்படுத்த வேண்டும் என உத்தரவிட்டது.
இந்த நிலையில், சிவகங்கை, மதுரை, காஞ்சிபுரம், திருவள்ளூா் ஆகிய மாவட்டங்களில் இந்தத் திட்டம் திங்கள்கிழமை முதல் (செப். 1)அமல்படுத்தப்பட உள்ளது.
அதேசமயம், இந்தத் திட்டத்துக்கு டாஸ்மாக் நிறுவனத்தின் ஊழியா்கள் அங்கம் வகிக்கும் சிஐடியு சம்மேளனம் கண்டனம் தெரிவித்துள்ளது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.