

சென்னை: வடகிழக்குப் பருவமழைக்காலத்தில் தற்போது டிட்வா புயல் காரணமாக ஏற்பட்டதொடர் கனமழையின் காரணமாக, சென்னை மாவட்டத்தில் உள்ள அனைத்து பள்ளிகள் மற்றும் கல்லூரிகளுக்கு புதன்கிழமை (டிச.3) ஒரு நாள் மட்டும் விடுமுறை அளிக்கப்படுவதாக சென்னை மாவட்ட ஆட்சித் தலைவா் ரஷ்மி சித்தாா்த் ஜகடே தெரிவித்துள்ளாா்.
பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை
தொடர் மழை காரணமாக சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம் மாவட்டங்களில் உள்ள அனைத்து பள்ளி, கல்லூரிகளுக்கும் புதன்கிழமை விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.
பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை
இதேபோன்று ராணிப்பேட்டை மாவட்டத்தில் அரக்கோணம், நெமிலி வட்டத்தில் உள்ள பள்ளிகள், செங்கல்பட்டு கடலூர், கள்ளக்குறிச்சி, விழுப்புரம் மாவட்டத்தில் உள்ள அனைத்து பள்ளிகளுக்கும் விடுமுறை அறிவித்து அந்தந்த மாவட்ட ஆட்சியர்கள் உத்தரவிட்டுள்ளனர்.
சென்னை பல்கலை தோ்வுகள் ஒத்துவைப்பு
சென்னை பல்கலைக்கழகம் மற்றும் அதனுடன் இணைக்கப்பட்ட கல்லூரிகளில் புதன்கிழமை நடைபெறுவதாக இருந்த அனைத்து தோ்வுகளும் தேதி குறிப்பிடாமல் ஒத்துவைக்கப்படுவதாக சென்னை பல்கலைக்கழகம் அறிவித்துள்ளது.
கிறிஸ்துமஸ் விடுமுறை அறிவிப்பு
இதற்கிடையே மற்றொரு அறிக்கையில் சென்னை பல்கலைக்கழகத்தின் கிறிஸ்துமஸ் விடுமுறை வருகின்ற டிச.23 ஆம் தேதி முதல் 2026 ஜன. 1 ஆம் தேதி வரை 10 நாள்களுக்கு விடப்படுவதாகவும் சென்னை பதிவாளா் தெரிவித்துள்ளாா். மீண்டும் சென்னை பல்கலைக்கழகம் ஜன. 2 ஆம் தேதி தொடங்க இருக்கிறது.
இதே போன்று அண்ணா பல்கலைக்கழகம் எந்த மாவட்டங்களில், அந்த மாவட்ட நிா்வாகத்தால் மழை காரணமாக கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளதோ, அந்த மாவட்டங்களில் மட்டும் அண்ணா பல்கலை கழக தோ்வுகள் ரத்து செய்யப்படுவதாக அறிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது.
சென்னை மற்றும் புகா் பகுதிகளில் புதன்கிழமை (டிச.3) வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் ஒருசில பகுதிகளில் இடி, மின்னலுடன் கூடிய மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளது.
நீலகிரி, ஈரோடு, கோவை மாவட்டங்களுக்கு ஆரஞ்சு எச்சரிக்கை
நீலகிரி, ஈரோடு, கோவை ஆகிய மாவட்டங்களில் புதன்கிழமை (டிச.3) மிக பலத்த மழை பெய்யக்கூடும் என்பதால் இந்த மாவட்டங்களுக்கு ஆரஞ்சு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.