

ஆலங்குளம்: ஆலங்குளம் அருகே தலைமைக் காவலரை துரத்திச் சென்று கொல்ல முயன்ற 5-க்கும் மேற்பட்டோரை தேடி வருகின்றனர்.
ஆலங்குளம் அருகே உள்ள நெட்டூர் ஊராட்சி அலுவலகத்தில் செயல்பட்டு வரும் புறக்காவல் நிலையத்தில் தலைமைக் காவலர் முருகன் (38) ஒரு பெண் காவலர் உள்பட இரு காவலர்கள் புதன்கிழமை இரவு நேர பணியில் ஈடுபட்டிருந்தனர்.
அப்போது, அங்கு கம்பு உள்ளிட்ட ஆயுதங்களுடன் வந்த 5-க்கும் மேற்பட்ட நபர்கள் காவலர்களை தாக்க முற்பட்டனர். அதில் ஒருவர் தலைமைக் காவலர் முருகனை துரத்திச் சென்று அரிவாளால் வெட்ட முயன்றுள்ளார். இதில் தலைமைக் காவலர் சுதாரித்துக் கொண்டு தப்பினார். எனினும் அவருக்கு லேசான காயம் ஏற்பட்டது. தொடர்ந்து அந்த கும்பல் தப்பி ஓடியது.
இதுகுறித்து தகவல் அறிந்து வந்த தென்காசி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அரவிந்தன், ஆலங்குளம் மாவட்ட துணை காவல் கண்காணிப்பாளர் கிளட்ஸன் ஜோஸ் மற்றும் காவலர்கள் தீவிர விசாரணை மேற்கொண்டனர்.
விசாரணையில், ஆலங்குளம் அருகே உள்ள நெட்டூர் கிராமத்தைச் சேர்ந்த பெண் ஒருவரை திருநெல்வேலி மாவட்டம் அம்பாசமுத்திரத்தைச் சேர்ந்த முத்துப்பாண்டி(30) என்பவர் மூன்று ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் செய்துள்ளார். தம்பதிக்கிடையே ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக கணவனை விட்டு மனைவி பிரிந்து நெட்டூரில் வசித்து வருகிறார். முத்துப்பாண்டி அடிக்கடி நெட்டூர் வந்து மனைவியிடம் தகராறு செய்து வந்ததாக கூறப்படுகிறது.
இதுகுறித்து ஆலங்குளம் காவல் நிலையத்தில் அந்தப் பெண் அளித்த புகாரின் பேரில் காவலர்கள் இரு நாள்களாக விசாரணை மேற்கொண்டு வந்தனர்.
மனைவிக்கு ஆதரவாக போலீசார் செயல்படுவதாக கருதிய முத்துப்பாண்டி ஆத்திரமடைந்து தனது உறவினர்களுடன் காவலர்களை தாக்க முற்பட்டது தெரியவந்தது.
இதையடுத்து முத்துப்பாண்டி உள்ளிட்டோர் மீது வழக்குப் பதிந்த ஆலங்குளம் காவலர்கள் அவர்களைத் தீவிரமாக தேடி வருகின்றனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.