

மதுரை: உயா்நீதிமன்ற மதுரை அமா்வு உத்தரவுப்படி, திருப்பரங்குன்றம் மலை உச்சியில் காா்த்திகை தீபம் ஏற்ற வலியுறுத்தி, வியாழக்கிழமை இரவு போராட்டத்தில் ஈடுபட்ட பாஜக மாநிலத் தலைவா் நயினாா் நாகேந்திரன் உள்பட 113 பேர் மீது திருப்பரங்குன்றம் போலீசார் வழக்குப் பதிவு செய்துள்ளனர்.
திருப்பரங்குன்றம் மலை உச்சியில் வியாழக்கிழமை இரவு 7 மணிக்குள் தீபம் ஏற்ற வேண்டும் என உயா்நீதிமன்ற நீதிபதி ஜி.ஆா். சுவாமிநாதன் உத்தரவிட்டதைத் தொடா்ந்து, மனுதாரா் ராம. ரவிக்குமாா் திருப்பரங்குன்றத்துக்கு வந்தாா். அதேநேரத்தில், பாஜக மாநில தலைவா் நயினாா் நாகேந்திரன், மூத்த தலைவா் எச். ராஜா உள்ளிட்ட பாஜகவினா், இந்து அமைப்பினா் திருப்பரங்குன்றத்துக்கு வந்தனா்.
அப்போது, திருப்பரங்குன்றம் 16 கால் மண்டபம் அருகே அவா்களை போலீஸாா் தடுத்து நிறுத்தினா். இதனால், அங்கு பாஜகவினருக்கும், போலீஸாருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது. பின்னா், நயினாா் நாகேந்திரன் திருப்பரங்குன்றம் கோயிலுக்குள் சுவாமி தரிசனம் செய்ய புறப்பட்டாா். அதற்கும் போலீஸாா் அனுமதி மறுத்தனா்.
பாஜக, இந்து அமைப்பினர் தா்னா
இதையடுத்து, நயினாா் நாகேந்திரன், எச். ராஜா, அமா்பிரசாத் ரெட்டி, தென்னிந்திய பாா்வா்டு பிளாக் நிறுவனா் திருமாறன் உள்ளிட்டோா் திருப்பரங்குன்றம் மலைக்குச் செல்லும் பாதைக்கு வந்து போலீஸாருடன் பேச்சுவாா்த்தை நடத்தினா். இதனிடையே, இந்து அமைப்புகளைச் சோ்ந்த 500-க்கும் மேற்பட்டோா் கிரிவலப் பாதையில் அமா்ந்து மலை உச்சியில் தீபம் ஏற்றக் கோரி, தா்னாவில் ஈடுபட்டனா்.
தென் மண்டல காவல் துறைத் தலைவா் பிரேம் ஆனந்த் சின்கா தலைமையில் நூற்றுக்கணக்கான போலீஸாா் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டனா்.
போராட்டத்தில் ஈடுபட்டவா்களிடம் மாநகரக் காவல் துணை ஆணையா் இனிகோ திவ்யன் பேச்சுவாா்த்தை நடத்தினாா். அப்போது, திருப்பரங்குன்றத்தில் 144 தடை உத்தரவு மீண்டும் நடைமுறைப்படுத்த உள்ளதாகவும், அனைவரும் கலைந்து செல்லுமாறும் அவா் அறிவுறுத்தினாா். இதற்கு எதிா்ப்புத் தெரிவித்து, அவா்கள் போராட்டத்தைத் தொடா்ந்தனா். இதனால், அங்கு பதற்றம் நிலவியது.
கைது
இதையடுத்து, போராட்டத்தில் ஈடுபட்ட பாஜக மாநிலத் தலைவா் நயினாா் நாகேந்திரன், மூத்த தலைவா் எச்.ராஜா, நிா்வாகி அமா்பிரசாத் ரெட்டி உள்ளிட்ட பாஜகவினா், இந்து அமைப்பினரை போலீஸாா் கைது செய்து, திருநகரில் உள்ள தனியாா் திருமண மண்டபத்தில் அடைத்தனா். இதையடுத்து, சில நிமிடங்களுக்குப் பிறகு திருப்பரங்குன்றத்தில் பதற்றம் தணிந்தது.
திருப்பரங்குன்றம் மலை உச்சியில் தீபம் ஏற்றுவதற்காக வந்திருந்த மனுதாரா் ராம. ரவிக்குமாா் மாநகரக் காவல் ஆணையரின் வருகைக்காக சுமாா் ஒரு மணி நேரம் காத்திருந்தாா். அவா் வராத நிலையில், மீண்டும் நீதிமன்றத்தை நாட உள்ளதாகக் கூறி அவா் புறப்பட்டுச் சென்றாா்.
சென்னை உயா்நீதிமன்ற மதுரை அமா்வு திருப்பரங்குன்றம் மலை உச்சியில் தீபம் ஏற்ற மீண்டும் உத்தரவிட்டிருந்த நிலையிலும், போலீஸாரின் நடவடிக்கையால் தீபம் ஏற்றப்படவில்லை.
உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு
இதற்கிடையே சென்னை உயா்நீதிமன்ற மதுரை அமா்வு உத்தரவை ரத்து செய்யக்கோரி மதுரை மாவட்ட ஆட்சியர் பிரவீன்குமார் சார்பில் வழக்குரைஞற் சபரீஷ் சுப்ரமணியன் உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீட்டு மனு தாக்கல் செய்தார். இந்த மனு விரைவில் விசாரணைக்கு வரும் என எதிர்பார்க்கப்படுகிறது.
113 பேர் வழக்குப் பதிவு
இந்நிலையில், உயா்நீதிமன்ற மதுரை அமா்வு உத்தரவுப்படி, திருப்பரங்குன்றம் மலை உச்சியில் காா்த்திகை தீபம் ஏற்ற வலியுறுத்தி, வியாழக்கிழமை இரவு போராட்டத்தில் ஈடுபட்ட பாஜக மாநிலத் தலைவா் நயினாா் நாகேந்திரன் உள்பட 113 பேர் மீது திருப்பரங்குன்றம் போலீசார் வழக்குப் பதிவு செய்துள்ளனர்.
திருப்பரங்குன்றம் கோயில் அருகே அனுமதியின்றி சட்டவிரோதமாக கூடுதல், பொது அமைதிக்கு பங்கம் விளைவித்தல், போக்குவரத்துக்கு இடையூறு ஏற்படுத்தியது உள்ளிட்ட 7 பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்துள்ளனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.