ஓய்வு பெற்ற பத்திரிகையாளர்களுக்கு மாதம் ரூ.12,000 ஓய்வூதியம்: ஆணைகளை வழங்கிய முதல்வர் ஸ்டாலின்!

பத்திரிகைத் துறையிலிருந்து ஓய்வு பெற்று நலிந்த நிலையில் உள்ள 42 பத்திரிகையாளர்களுக்கு தலா ரூ.12 ஆயிரம் மாதாந்திர ஓய்வூதியத்திற்கான ஆணைகள் தொடர்பாக...
42 பத்திரிகையாளர்களுக்கு மாதம் ரூ.12,000 ஓய்வூதியத்திற்கான ஆணைகளை வழங்கிய முதல்வர் மு.க.ஸ்டாலின்.
42 பத்திரிகையாளர்களுக்கு மாதம் ரூ.12,000 ஓய்வூதியத்திற்கான ஆணைகளை வழங்கிய முதல்வர் மு.க.ஸ்டாலின்.
Updated on
2 min read

பத்திரிகைத் துறையிலிருந்து ஓய்வு பெற்று நலிந்த நிலையில் உள்ள 42 பத்திரிகையாளர்களுக்கு தலா ரூ.12 ஆயிரம் மாதாந்திர ஓய்வூதியத்திற்கான ஆணைகளை முதல்வர் மு.க.ஸ்டாலின் புதன்கிழமை(டிச.10) வழங்கினார்.

தமிழ்நாடு முதல்வர் மு.க.ஸ்டாலின் புதன்கிழமை (டிச.10) தலைமைச் செயலகத்தில், செய்தி மக்கள் தொடர்புத் துறை சார்பில் பத்திரிகைத் துறையிலிருந்து ஓய்வு பெற்று நலிந்த நிலையில் உள்ள 42 பத்திரிகையாளர்களுக்கு தலா ரூ.12 ஆயிரம் மாதாந்திர ஓய்வூதியத்திற்கான ஆணைகளை வழங்கிடும் அடையாளமாக 10 ஓய்வு பெற்ற பத்திரிகையாளர்களுக்கு ஆணைகளை வழங்கினார்.

பத்திரிகையாளர்கள் முன்களப் பணியாளர்களாக அறிவிப்பு

பத்திரிகையாளர்கள் அன்றாட உலகச் செய்திகளை மக்கள் அறிந்து கொள்ளும் வகையில் உடனுக்குடன் வெளியிடுவதோடு, அரசிற்கும் மக்களுக்கும் பாலமாக விளங்கி அரசு செயல்படுத்தும் திட்டங்களை மக்களிடம் எடுத்துச் செல்வதோடு, பேரிடர் காலங்களிலும் புயல், மழை, பெருவெள்ளத்தால் பொது மக்கள் பாதிக்கப்படும்போதும், பெரும் விபத்துகள், தொற்று நோய்ப் பரவல்கள் முதலிய சோதனைக் காலங்களிலும் இரவு பகல் எனப் பாராது ஓய்வின்றிப் பணி செய்து, உண்மைச் செய்திகளைத் திரட்டி மக்களிடம் கொண்டு சேர்ப்பதில் சிறப்பாகச் செயல்பட்டு வருகிறார்கள்.

பத்திரிகையாளர்களின் இத்தகைய பணியினை சிறப்பிக்கும் வகையில் தமிழ்நாட்டில் முதன்முறையாக உழைக்கும் பத்திரிகையாளர்களை முன்களப் பணியாளர்களாக முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவித்தார்.

பத்திரிகையாளர் நலவாரியம் அமைக்கப்பட்டு வழங்கப்பட்டு வரும் நலத்திட்ட உதவிகள்

திராவிட மாடல் அரசு பொறுப்பேற்றப்பின், செய்தி மக்கள் தொடர்புத் துறையின் கீழ் பத்திரிகையாளர் நலவாரியம் 1.12.2021 அன்று உருவாக்கப்பட்டு, உழைக்கும் பத்திரிகையாளர்களின் குடும்பத்திற்கான நலத்திட்ட உதவிகள் கல்வி உதவித் தொகை, திருமண உதவித் தொகை, மகப்பேறு உதவித் தொகை, கருச்சிதைவு உதவித் தொகை, கண் கண்ணாடி செலவுத் தொகை, இயற்கை மரணத்திற்கு உதவித் தொகை மற்றும் ஈமச்சடங்கு உதவித் தொகை ஆகிய உதவித் தொகைகள் 2024 ஆம் ஆண்டு மார்ச் மாதம் முதல் வழங்கப்பட்டு வருகின்றன.

பத்திரிகையாளர் நலவாரியத்தில் தற்போதுவரை 3674 நபர்கள் உறுப்பினர்களாக சேர்க்கப்பட்டு, 81 பத்திரிகையாளர்களுக்கு ரூ.8,56,500 உதவித் தொகைகள் வழங்கப்பட்டுள்ளது.

பத்திரிகையாளர்களின் நலன் காத்திட செயல்படுத்தப்பட்டு வரும் நலத்திட்டங்கள்

பத்திரிகையாளர்களின் நலனில் மிகுந்த அக்கறை கொண்டு, பத்திரிகையாளர்களுக்கு ஓய்வூதியம், ஓய்வுபெற்ற பத்திரிகையாளர்களுக்கு நலநிதி, பத்திரிகையாளர் பணிக்காலத்தில் இயற்கை எய்த நேரிட்டால் அவர்கள் குடும்பத்திற்கு உதவித்தொகை, குடும்ப ஓய்வூதியம், பத்திரிகையாளர் நல வாரியம் போன்ற பல்வேறு திட்டங்களை அரசு செயல்படுத்தி வருகிறது.

திராவிட மாடல் அரசு பொறுப்பேற்றப் பின்னர் பத்திரிகையாளர் நலன் காத்திட உயர்த்தப்பட்ட உதவித் தொகைகள்

இந்த அரசு பொறுப்பேற்றப்பின், 18.7.2022 ஆம் நாளிட்ட அரசாணையின்படி, பணியிலிருந்து ஓய்வுபெற்றவுடன் வழங்கப்படும் பணிக்கொடை உச்சவரம்பு ரூ.3 லட்சம் என்பதை ரூ.4 லட்சமாக உயர்த்தி வழங்கி வருகிறது.

பத்திரிகையாளர் மாதாந்திர ஓய்வூதியம் ரூ.10,000 -லிருந்து ரூ.12,000- ஆக 14.6.2023 முதல் உயர்த்தப்பட்டு, 356 பத்திரிகையாளர்களுக்கு வழங்கப்பட்டு வருகின்றது. பத்திரிகையாளர் குடும்ப ஓய்வூதியம் ரூ.5,000- லிருந்து ரூ.6,000- ஆக ஜுன் 2023 முதல் உயர்த்தப்பட்டு 72 பத்திரிகையாளர்களின் குடும்பத்திற்கு குடும்ப ஓய்வூதியம் வழங்கப்பட்டு வருகின்றது.

இதில், முதல்வர் மு.க. ஸ்டாலின் தலைமையிலான அரசு பொறுப்பேற்ற மே 2021 முதல் இதுவரை 125 பத்திரிகையாளர்களுக்கு மாதாந்திர ஓய்வூதியமும், 27 பத்திரிகையாளர்களின் குடும்பத்திற்கு குடும்ப ஓய்வூதியமும் வழங்கப்பட்டு வருகின்றது.

மேலும், இந்த அரசு பொறுப்பேற்றப்பின்னர் 59 பத்திரிகையாளர் குடும்பங்களுக்கு ரூ. 2 கோடியே 9 லட்சத்து 50 ஆயிரம் பத்திரிகையாளர் குடும்ப உதவி நிதி வழங்கப்பட்டுள்ளது.

அத்துடன், பத்திரிகைத் துறையில் ஆசிரியர், உதவி ஆசிரியர், புகைப்படக்காரர், செய்தியாளர், பிழை திருத்துநர் ஆகியோர் பணிக்காலத்தில் இயற்கை எய்த நேரிட்டால் அவர்கள் குடும்பத்தினருக்கு முதல்வரின் பொது நிவாரண நிதியிலிருந்து வழங்கப்படும் குடும்ப உதவி நிதி ரூ.1.25 லட்சம் என்பதை ரூ.2.50 லட்சமாகவும், ரூ.2.50 லட்சம் என்பதை ரூ.5 லட்சமாகவும், ரூ.3.75 லட்சம் என்பதை ரூ.7.50 லட்சமாகவும், ரூ.5.3 லட்சம் என்பதை ரூ.10 லட்சமாகவும் இரண்டு மடங்காக உயர்த்தி வழங்கப்படுகிறது.

பத்திரிகையாளர் நல நிதியத்திலிருந்து மருத்துவ உதவித்தொகை

பத்திரிகையாளர் நல நிதியத்திலிருந்து வழங்கப்பட்டு வரும் மருத்துவ உதவித் தொகை ரூ.2,00,000-லிருந்து ரூ.2,50,000 ஆக 19.7.2022 முதல் உயர்த்தி வழங்கப்பட்டு வருகின்றது. இந்த அரசு பொறுப்பேற்ற மே 2021 முதல் இதுவரை 16 பத்திரிகையாளர்களுக்கு ரூ.30 லட்சத்து 61 ஆயிரத்து 339 மருத்துவ உதவி நிதி வழங்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

42 பத்திரிகையாளர்களுக்கு ஓய்வூதியத்திற்கான ஆணைகள் வழங்குதல்

பத்திரிகைத் துறையிலிருந்து ஓய்வு பெற்று நலிந்த நிலையில் உள்ள 42 பத்திரிகையாளர்களுக்குத் திராவிட மாடல் அரசு, பத்திரிகையாளர் ஓய்வூதியத் திட்டத்தின் கீழ் மாதந்திர ஓய்வூதியமாக தலா ரூ.12 ஆயிரம் வழங்கிட 27.11.2025 அன்று அரசாணை வெளியிடப்பட்டது.

அதன்படி, பத்திரிகைத் துறையிலிருந்து ஓய்வு பெற்று நலிந்த நிலையில் உள்ள 42 பத்திரிகையாளர்களுக்கும் தலா ரூ.12 ஆயிரம் மாதாந்திர ஓய்வூதியத்திற்கான ஆணைகளை தமிழ்நாடு முதல்வர் மு.க.ஸ்டாலின் வழங்கினார்.

Summary

Retired journalists to get Rs. 12,000 monthly pension: Chief Minister Stalin issues orders

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com