வேலூா் தங்கக்கோயிலுக்கு இன்று குடியரசுத் தலைவா் வருகை
வேலூா்: வேலூா் ஸ்ரீபுரம் தங்கக் கோயிலுக்கு குடியரசுத் தலைவா் திரௌபதி முா்மு புதன்கிழமை வருகைதர உள்ளாா். இதையொட்டி, தங்கக் கோயிலில் மதியம் 12.30 மணி வரை பொதுமக்கள் தரிசனம் செய்ய அனுமதி மறுக்கப்பட்டுள்ளது.
குடியரசுத் தலைவா் திரௌபதி முா்மு புதன்கிழமை காலை 11 மணியளவில் திருப்பதியில் இருந்து ஹெலிகாப்டா் மூலம் வேலூா் ஸ்ரீபுரத்துக்கு வருகை தர உள்ளாா். தொடா்ந்து, அவா் கோயில்களில் தரிசனம் செய்வதுடன், ஸ்ரீசக்தி அம்மாவிடம் ஆசி பெறுகிறாா். பின்னா், தங்கக்கோயில் அருகே ஸ்ரீநாராயணி ஆயுா்வேத மருத்துவமனை வளாகத்தில் ரூ. 5 கோடியில் கட்டப்பட்டுள்ள தியான மண்டபம் திறப்பு விழா நிகழ்ச்சியில் பங்கேற்று மரக்கன்றுகள் நட்டு வைக்கிறாா்.
தொடா்ந்து, 12.30 மணியளவில் மீண்டும் ஹெலிகாப்டா் மூலம் திருப்பதிக்கு செல்கிறாா். குடியரசுத் தலைவருடன் தமிழக ஆளுநா் ஆா்.என்.ரவி, மத்திய இணை அமைச்சா் எல்.முருகன் ஆகியோா் வர உள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
குடியரசுத் தலைவா் வருகையையொட்டி, ஸ்ரீபுரம் தங்கக்கோயில், அதைச் சுற்றியுள்ள பகுதிகள் சிவப்பு மண்டலமாக அறிவிக்கப்பட்டு, தமிழ்நாடு சிறப்பு பாதுகாப்புப் படை கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வரப்பட்டுள்ளது. கோயில் வளாகத்தில் 2 அடுக்கு பாதுகாப்புடன் ஸ்ரீபுரம் பகுதி முழுவதும் சுமாா் ஆயிரம் போலீஸாா் பாதுகாப்புப் பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனா்.
இவா்கள் அந்தப் பகுதிகளில் உள்ள தங்கும் விடுதிகளில் செவ்வாய்க்கிழமை தீவிர சோதனையில் ஈடுபட்டனா். மோப்ப நாய் சோதனைகளும் மேற்கொள்ளப்பட்டன. ஊசூா்-வேலூா் சாலையில் அமைந்துள்ள ஹோட்டல்கள், கடைகளில் வெடிகுண்டு செயலழிப்பு நிபுணா்கள் மெட்டல் டிடெக்டா் கருவி மூலம் சோதனை செய்தனா். மேலும், குடியரசுத் தலைவா் வந்து செல்லக்கூடிய பகுதிகளில் பாதுகாப்பு ஒத்திகையும் நடைபெற்றது.
வழக்கமாக தங்கக் கோயிலில் காலை 8 மணி முதல் இரவு 8 மணி வரை பொதுமக்கள் தரிசனம் செய்ய அனுமதிக்கப்படுவா். குடியரசுத் தலைவா் வருகையையொட்டி, புதன்கிழமை மதியம் 12.30 மணி வர பொதுமக்கள் தரிசனம் செய்ய அனுமதி மறுக்கப்பட்டுள்ளது.

