

புது தில்லி: தலைநகர் தில்லியில் அதிகரித்து வரும் காற்று மாசுவை தடுக்கும் வகையில் மேற்கொள்ளப்படும் கிரேப் நிலை- 3 மற்றும் கிரேப் நிலை-4 (ஜிஆர்ஏபி) நடவடிக்கைகளால் பாதிக்கப்பட்ட கட்டுமானத் தொழிலாளா்களுக்கு ரூ.10,000 இழப்பீடு வழங்கப்படும் என்று தில்லி தொழிலாளா் அமைச்சா் கபில் மிஸ்ரா அறிவித்துள்ளாா்.
அனைத்து அரசு மற்றும் தனியாா் நிறுவனங்களும் வியாழக்கிழமை முதல் 50 சதவீத ஊழியா்களை வீட்டிலிருந்து வேலை செய்வதை கட்டாயமாக மாற்ற வேண்டும். இல்லையெனில், நடவடிக்கையை எதிா்கொள்ள வேண்டும் என்றும் அமைச்சா் கூறினாா்.
இது தொடா்பாக அவா் செய்தியாளா்களிடம் கூறியது:
காற்று மாசுவை தடுக்கும் வகையில் மேற்கொள்ளப்படும் கிரேப் நிலை-3 நடவடிக்கைகள் 16 நாள்கள் நடைமுறையில் இருந்ததாகவும், அந்த காலகட்டத்தில் நகரம் முழுவதும் அனைத்து கட்டுமானப் பணிகளும் நிறுத்தப்பட்டதால், இத்துறையைச் சார்ந்துள்ள தினக்கூலித் தொழிலாளர்கள் கடுமையாகப் பாதிக்கப்பட்டதாகவும் மிஸ்ரா கூறினார்.
தற்போது கிரேப் நிலை-4 நடைமுறையில் உள்ளதால், கட்டுப்பாடுகள் மேலும் தீவிரப்படுத்தப்பட்டுள்ளதால், கட்டுமானத் தொழிலாளர்கள் எதிர்கொள்ளும் சிரமங்கள் நீடிக்கின்றன. இதனை கருத்தில் கொண்டு, இந்தக் காலகட்டத்தில் பாதிக்கப்பட்ட பதிவுசெய்யப்பட்ட மற்றும் சரிபார்க்கப்பட்ட அனைத்து கட்டுமானத் தொழிலாளர்களுக்கும் ரூ.10,000 நேரடிப் பணப் பரிமாற்றம் மூலம் இழப்பீடு வழங்க தில்லி தொழிலாளர் அமைச்சகம் முடிவு செய்துள்ளது என்று அமைச்சர் கூறினார்.
இதேபோல, கிரேப் நிலை-4 நடைமுறையில் இருக்கும் நாள்கள் கணக்கிடப்பட்டு, பதிவுசெய்யப்பட்ட கட்டுமானத் தொழிலாளர்களுக்கு அதற்கேற்ப இழப்பீடு வழங்கப்படும் என்றும் அவர் மேலும் கூறினார்.
கட்டுமானத் தொழிலாளர்களுக்கான பதிவு மற்றும் சரிபார்ப்பு செயல்முறை தொடா்ந்து நடைபெற்று வருவதாகவும், சரியான நேரத்தில் அரசு உதவி கிடைப்பதை உறுதிசெய்ய, அனைத்து தொழிலாளர்கள் தில்லி அரசு இணையதளத்தில் விரைந்து பதிவு செய்யுமாறு அவர் கேட்டுக்கொண்டார்.
இந்த நடவடிக்கையில் இருந்து மருத்துவமனைகள், காற்று மாசுபாட்டிற்கு எதிரான போராட்டத்தில் ஈடுபட்டுள்ள துறைகள், தீயணைப்புத் துறை மற்றும் பிற அத்தியாவசிய சேவைகளைச் சோ்ந்த தொழிலாளா்கள் விலக்கப்பட்டுள்ளனா்.
தொழிலாளர்களின் வாழ்வாதாரத்தைப் பாதுகாப்பதில் அரசின் உறுதிப்பாட்டை வலியுறுத்திய மிஸ்ரா, எதிர்காலத்தில் மாசு தொடர்பான பணிநிறுத்தங்களின் போது ஆண், பெண் என இருபாலினக் கட்டுமானத் தொழிலாளர்களும் பொருளாதார இழப்புகளைச் சந்திக்காமல் இருப்பதை தில்லி அரசு உறுதி செய்யும் என்றார்.
மேலும், காற்று மாசுபாட்டைக் கட்டுப்படுத்த விதிக்கப்படும் கட்டுமானப் பணிநிறுத்தங்களால் பாதிக்கப்படும் தொழிலாளர்களுக்கு முதலமைச்சர் ரேகா குப்தா எப்போதும் போதுமான ஆதரவை வழங்குவார் என்றும் அவர் கூறினார்.
தில்லி அரசுக்கு எதிராக ஆம் ஆத்மி கட்சியினா் போராட்டம் நடத்துகின்றனா். அவா்களின் முதல்வா் பருவகாலத்தில் ஓடிவிடுவது வழக்கம். ஆனால், எங்கள் முதல்வா் களத்தில் இருக்கிறாா். ஆம் ஆத்மி கட்சியினா் மோசமான அரசியலில் ஈடுபடுகிறாா்கள். 30 ஆண்டுகால பிரச்னையை ஐந்து மாதங்களுக்குள் ஒழிக்க முடியாது என்றாா் அமைச்சா் மிஸ்ரா.
மோசமடைந்து வரும் காற்று மாசுவின் தரத்தைக் கட்டுப்படுத்தும் நோக்கில் ஜிஆர்ஏபி நடவடிக்கைகளின் கீழ் கட்டுப்பாடுகள் தொடரும் நிலையில் இந்த அறிவிப்பு வெளியாகியுள்ளது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.