கடலூர் சிப்காட்டில் கெம்ப்ளாஸ்ட் நிறுவன விரிவாக்கத்திற்கான திட்டங்களுக்கு அனுமதி அளிக்கக்கூடாது! - ராமதாஸ்

கடலூர் சிப்காட்டில் கெம்ப்ளாஸ்ட் நிறுவன விரிவாக்கத்திற்கான திட்டங்களுக்கு அனுமதி அளிக்கக்கூடாது என பாமக நிறுவனத் தலைவர் ராமதாஸ் வலியுறுத்தியிருப்பது தொடர்பாக....
ராமதாஸ் (கோப்புப்படம்)
ராமதாஸ் (கோப்புப்படம்)
Updated on
2 min read

கடலூர் சிப்காட்டில் கெம்ப்ளாஸ்ட் நிறுவன விரிவாக்கத்திற்கான திட்டங்களுக்கு அனுமதி அளிக்கக்கூடாது என பாமக நிறுவனத் தலைவர் ராமதாஸ் வலியுறுத்தியுள்ள்ரா.

இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:

கடலூரில் கடந்த 1971-ஆம் ஆண்டு முதல் இயங்கிவரும் சிப்காட் தொழிற்சாலை வளாகத்தில் பெரும்பாலும் பூச்சிக்கொல்லி, பெயிண்ட், சாயப்பட்டறை, மருந்து, ரசாயனம் மற்றும் பிவிசி போன்ற அபாயகரமான ரசாயனங்களை கையாளக்கூடிய "பெரிய சிவப்பு'" வகை நிறுவனங்களே செயல்படுகின்றன. இந்த தொழிற்சாலைகளால் சிப்காட்டுக்கு அருகாமைப் பகுதிகளில் வசிக்கும் 50-க்கும் மேற்பட்ட கிராமங்களின் மக்கள் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளனர்.

2009-இல் இங்கு பிவிசி எனப்படும் பாலிவினைல் குளோரைடு ரெசின்களை உற்பத்தி செய்யும் "கெம்ப்ளாஸ்ட் சன்மார் நிறுவனம்" தொடங்கப்பட்டது. இங்கு பிவிசி பொருட்கள், குழாய்கள், காலணிகள், செயற்கைத் தோல், மருத்துவ உபகரணங்கள் மற்றும் வாகன உதிரிபாகங்கள் தயாரிக்கப் படுகின்றன. 3,00,000 டன் பிவிசி உற்பத்தியில் தொடங்கிய இந்நிறுவனம் ஒன்றரை ஆண்டுகளுக்கு முன்பு மக்களின் கருத்தை கேட்காமலேயே உற்பத்தியை 6,00,000 டன்னாக உயர்த்தியது. தற்போது சுமார் ரூ.1,000 கோடி முதலீட்டில் உற்பத்தியை 12 லட்சம் டன்னாக உயர்த்த திட்டமிட்டுள்ளது.

அதேபோல் கடல் முனைய வசதிகளை மேம்படுத்தி 20 லட்சம் மில்லியன் லிட்டர் கடல் நீர் சுத்திகரிப்பு நிலையம் அமைக்கவும் திட்டமிடப்பட்டுள்ளது. கடற்கரை மற்றும் சிப்காட் பகுதியில் செயல்படுத்தப்படவுள்ள இந்த 2 திட்டங்களுக்காகவுமான பொதுமக்களின் கருத்துக் கேட்புக் கூட்டம் கடந்த டிசம்பர் 19 அன்று கடலூரில் நடைபெற்றது. இந்த கருத்து கேட்பு கூட்டத்தில் மக்களின் பக்கம் நிற்பதாய் சொல்லிக் கொள்பவர்கள் நிர்வாகத்துக்கு ஆதரவாய் நின்று, மக்களின் கருத்துக்களை மழுங்கடித்துள்ளனர். ஆனால் எப்போதும் போல் நமது பாட்டாளி மக்கள் கட்சி நிர்வாகிகள் உண்மையான பாட்டாளி மக்களுக்கு ஆதரவாய் நின்று கருத்துக்களை கூறி, வாதாடி, போராடினர்.

சிப்காட் வளாகத்தில் இந்த நிறுவனம் தொடங்கப்பட்ட போதே பாமக பல்வேறு போராட்டங்கள் நடத்தியதன் காரணமாகத்தான் ஆபத்தான கழிவுகளை தரை வழியாக கொண்டு செல்லாமல் குழாய் வழியாக கொண்டு செல்லப்படுகிறது.

ஆனாலும் கடலில் கலக்கப்படும் கழிவுகளால் கடல் வளம் பாதிக்கப்பட்டுள்ளது. மேலும் பிவிசி உற்பத்தியின் போது வெளியேறும் வேதிப் பொருட்களும், கழிவுகளை எரிக்கும் போது வெளியேறும் 'டை ஆக்சின்' போன்ற நச்சு வாயுக்களும் மனிதர்களுக்கும் சுற்றுச்சூழலுக்கும் கடுமையான பாதிப்புகளை ஏற்படுத்துகின்றன. இவை உலகின் மிக மோசமான நச்சுக்களில் ஒன்றாகக் கருதப்படுகின்றன. மேலும் பிவிசி தயாரிக்கப் பயன்படும் 'வினைல் குளோரைடு மோனோமர்' நுரையீரல் மற்றும் கல்லீரல் பாதிப்புகளை ஏற்படுத்தக்கூடும். அதுபோல் ஆவியாகும் கரிம சேர்மங்கள், இதர வாயுக்கள் காற்றில் கலந்து அருகிலுள்ள கிராம மக்களுக்கு மூச்சுத்திணறல், தோல் நோய்களை ஏற்படுத்துகின்றன. ஏற்கனவே கெம்பிளாஸ்ட்டில் 11 புகைபோக்கிகள் உள்ள நிலையில் தற்போது 25 புகைபோக்கிகள் நிறுவி அதிகப்படியான நச்சுப் புகையினை வெளியேற்றுவது பாதிப்புகளை மேலும் மேலும் அதிகரிக்கும்.

இச்சூழலில் கடலூர் பகுதியில் ஏற்கனவே காற்று மற்றும் நீர் மாசுபாட்டிற்குக் காரணமான கெம்ப்ளாஸ்ட் நிறுவனம் விரிவாக்கம் செய்து, உற்பத்தியை அதிகரிப்பதற்கும், மூலப்பொருட்கள் உற்பத்திக்கும், ஆற்றின் குறுக்கே பாலம் கட்டி அபாய ரசாயனங்கள் கொண்டு வருவதற்கும், கடல் நீரை பாழாக்கும் சுத்திகரிப்பு நிலையம் அமைப்பதற்கும் அரசு அனுமதிப்பது மிக மிக ஆபத்தானது. இதனால் 50-க்கும் மேலான கிராமங்களை சேர்ந்த விவசாயிகள் மற்றும் மீனவர்களின் வாழ்வாதாரமும், உடல் ஆரோக்கியமும் பாதிக்கப்படும்.

எனவே, தமிழக மாசுக்கட்டுப்பாட்டு வாரியமும், அரசும் இந்த விரிவாக்கத் திட்டத்திற்கு எவ்வித அனுமதியும் வழங்கக் கூடாது என்றும், ஒப்புக்காக நடத்தப்பட்ட கருத்துக் கேட்பு கூட்டம் செல்லத்தக்கதல்ல என அறிவிக்க வேண்டும் என தமிழக அரசை அவர் கேட்டுக் கொண்டுள்ளார்.

Summary

Do not grant permission for the expansion projects of Chemplast company in Cuddalore SIPCOT! - Ramadoss urges

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com