

சித்ரதுர்கா (கர்நாடகா): கர்நாடகம் மாநிலம் சித்ரதுர்கா மாவட்டத்தில் தனியார் சொகுசு பேருந்து மீது கன்டெய்னர் லாரி மோதி பேருந்து தீப்பிடித்து எரிந்ததில் பயணிகள் 17 பேர் தீயில் கருகி உயிரிழந்தனர், பலர் படுகாயமடைந்தனர். படுகாயமடைந்த பயணிகள் மீட்கப்பட்டு சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
கர்நாடகம் மாநிலம், பெங்களூருவில் படுக்கை வசதி கொண்ட தனியார் சொகுசு பேருந்து ஒன்று, 32 பயணிகளுடன் கோகர்ணாவுக்கு சென்று கொண்டிருந்தது.
வியாழக்கிழமை அதிகாலை சித்ரதுர்கா அருகே தேசிய நெடுஞ்சாலையில் சென்று கொண்டிருந்தபோது எதிர் திசையில் அதிவேகத்தில் வந்த கன்டெய்னர் லாரி, ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்து, சாலை நடுவில் உள்ள தடுப்புச்சுவரில் மோதி தாண்டி வந்து பேருந்து மீது மோதி விபத்துக்குள்ளானது.
இதில். லாரி மோதிய வேகத்தில் பயணிகள் பேருந்து தீப்பிடித்து எரிந்ததில் 17 பேர் பேருந்திற்குள்ளேயே உடல் கருகி உயிரிழந்தனர். உயிரிழந்தவர்களில் லாரி ஓட்டுநரும் அடங்குவார். படுகாயமடைந்த பலர் மீட்கப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர்.
இந்த விபத்து குறித்து மூத்த காவல்துறை அதிகாரி ஒருவர் தெரிவித்ததாவது:
கர்நாடகம் மாநிலம், பெங்களூருவில் இருந்து படுக்கை வசதி கொண்ட தனியார் சொகுசு பேருந்து ஒன்று, 32 பயணிகளுடன் கோகர்ணாவுக்கு சென்று கொண்டிருந்தது. பேருந்து வியாழக்கிழமை அதிகாலை சித்ரதுர்கா அருகே தேசிய நெடுஞ்சாலையில் சென்று கொண்டிருந்தபோது எதிர் திசையில் வந்து கொண்டிருந்த கன்டெய்னர் லாரி ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்து, சாலை நடுவில் உள்ள தடுப்புச்சுவரில் மோதி தாண்டி வந்து எதிரே வந்துகொண்டிருந்த பயணிகள் சொகுசு பேருந்து மீது மோதி விபத்துக்குள்ளானது. லாரி மோதிய வேகத்தில் சொகுசு பேருந்து தீப்பிடித்து எரிந்ததில் விபத்து சம்பவம் தெரியாமல் உறங்கிக்கொண்டிருந்த பலர் பேருந்திற்குள்ளேயே உடல் கருகி உயிரிழந்தனர். உயிரிழந்தவர்களில் லாரி ஓட்டுநரும் அடங்குவார்.
படுகாயமடைந்த பலர் மீட்கப்பட்டு மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
தீக்காயங்களால் கடுமையாகப் பாதிக்கப்பட்ட ஒருவர் பெங்களூருவில் உள்ள விக்டோரியா மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளார்.
விபத்து நிகழந்தது எப்படி?
லாரி சாலையின் தடுப்புச் சுவரைத் தாண்டி, எதிரே வந்த பேருந்து மீது மோதியதால் இந்த விபத்து ஏற்பட்டது என்றும், இதில் சொகுசு பேருந்தின் ஓட்டுநரும் நடத்துநரும் உயிர்தப்பினர். விழித்திருந்த பல பயணிகள் பேருந்திலிருந்து குதித்து உயிர்தப்பித்துள்ளதாக தெரிவித்தார்.
காயமடைந்தவர்களில் ஒன்பது பேர் சிராவுக்கும், மூன்று பேர் துமகூருக்கும் மாற்றப்பட்டுள்ளனர் என்று அவர் மேலும் கூறினார்.
நல்வாய்ப்பாக விபத்தில் இருந்து தப்பித்த பள்ளி குழந்தைகள் சென்ற பேருந்து
விபத்துக்குள்ளான பேருந்தின் பின்னால் டி. தாசரஹள்ளியில் இருந்து தண்டேலிக்கு பள்ளி குழந்தைகள் 42 பேருடன் சென்றுகொண்டிருந்த மற்றொரு பேருந்து இந்த விபத்திலிருந்து நல்வாய்ப்பாக நூலிழையில் தப்பித்தது.
பள்ளி குழந்தைகளை ஏற்றிச் சென்ற பேருந்தின் ஓட்டுநர், முன்னால் சென்ற பேருந்தின் மீது மோதி, பின்னர் மறுபுறம் திரும்பும் சாலையிலிருந்து விலகிச் சென்றார்.
நல்வாய்ப்பாக, யாருக்கும் சிறுகாயம் கூட ஏற்படாமல் தப்பினர் என்று அவர் கூறினார்.
பின்னர், பள்ளி குழந்தைகள் மற்றொரு பேருந்தில் தங்கள் பயணத்தைத் தொடர்ந்தனர் என்றும் பள்ளிப் பேருந்தின் ஓட்டுநர் இந்த விபத்தின் ஒரு முக்கிய சாட்சி என்றும் அவரிடம் வாக்குமூலம் பதிவு செய்யப்படும் என்றும் அவர் கூறினார்.
விபத்தில் சிக்கிய பேருந்தின் பெரும்பாலான பயணிகள் தங்கள் டிக்கெட்டுகளை ஆன்லைனில் முன்பதிவு செய்திருந்ததால் அவர்களது தொலைபேசி எண்கள் பெறப்பட்டுள்ளதை அடுத்து அவர்களின் குடும்பத்தினரைத் தொடர்பு கொள்ள முயற்சித்து வருகிறோம் என்று அவர் கூறினார்.
டிஎன்ஏ பரிசோதனை செய்யப்படும்
உயிரிழந்தவர்களின் உடல்களை அடையாளம் காண டிஎன்ஏ பரிசோதனை செய்யப்படும் என்று மேலும் தெரிவித்தார்.
அதிகாலை நேரத்தில் நிகழந்த இந்த கோர விபத்தில் 17 பேர் உயிரிழந்த சம்பவம் அந்த பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.