

விழுப்புரம்: கள்ளக்குறிச்சி மாவட்டம், உளுந்தூர்பேட்டை அருகே ஓடும் ரயிலில் இருந்து தவறி விழுந்து பலியான இரண்டு பேரின் சடலத்தை இருப்புப்பாதை காவல்துறையினர் மீட்டு, விசாரணை நடத்தி வருகின்றனர்.
சென்னை எழும்பூரில் இருந்து மாலை 5.20 மணிக்குப் புறப்படும் எழும்பூர் -கன்னியாகுமரி விரைவு ரயில் (வண்டி எண் 12633), வெள்ளிக்கிழமை இரவு விழுப்புரம் ரயில் நிலையத்தை கடந்து, விருத்தாசலம் நோக்கிச் சென்று கொண்டிருந்தபோது, ரயிலின் பொதுப் பெட்டியின் படிகட்டு பகுதியில் அமர்ந்திருந்த இரண்டு பேர் தூக்கக் கலக்கத்தில் திடீரென ரயிலில் இருந்து கீழே தவறி விழுந்தனர்.
இதைத் தொடர்ந்து ரயிலில் பயணித்த மற்ற பயணிகள், ரயில் ஓட்டுநருக்கும், ரயில்வே பாதுகாப்புப்படை காவலர்களுக்கும் தகவல்தெரிவித்த நிலையில், அவர்கள் விருத்தாசலம் இருப்புப் பாதை காவல் நிலையத்துக்கு தகவல் அளித்தனர். தகவலின் பேரில் காவல் உதவி ஆய்வாளர் சின்னப்பன் தலைமையிலான இருப்புப் பாதை காவல்துறையினர், வெள்ளிக்கிழமை இரவு முதல் ரயில்வே தண்டவாளப் பகுதிகளில் தேடுதல் பணியை மேற்கொண்டனர்.
இந்த நிலையில், சனிக்கிழமை காலை கள்ளக்குறிச்சி மாவட்டம், உளுந்தூர்பேட்டை வட்டம், செங்குறிச்சி பகுதியில் ரயில்வே தண்டவாளம் அருகே இருவர் இறந்து கிடந்திருப்பதை அந்த வழியாக சென்ற இளைஞர்கள் கண்டு, ரயில்வே இருப்புப் பாதை காவல் நிலையத்துக்குத் தகவல் அளித்தனர். இதன் பேரில் சின்னப்பன் தலைமையிலான காவல்துறையினர் அங்கு சென்று உயிரிழந்த இருவரின் சடலத்தை மீட்டு, உடற்கூறாய்வுக்காக உளுந்தூர்பேட்டை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
தொடர்ந்து நடத்திய விசாரணையில் உயிரிழந்தவர்கள் கடலூர் மாவட்டம், வேப்பூர் வட்டம், கோ. கொத்தனூர் கிராமம், வடக்குத்தெருவைச் சேர்ந்த கதிர்வேல் மகன் கந்தசாமி (29), எம்பிரான் மகன் பாலாஜி (32) எனத் தெரிய வந்தது.
சென்னையில் தொழிலாளிகளாகப் பணியாற்றி வந்த இவர்கள், சொந்த ஊருக்குச் செல்வதற்காக ரயிலில் பயணித்த போது, தூக்கத்தில் தவறி விழந்து உயிரிழந்தது தெரிய வந்தது.
நேலும், இந்த சம்பவம் தொடர்பாக விருத்தாசலம் இருப்புப்பாதை காவல் நிலையத்தினர் வழக்குப் பதிந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.