

வன உரிமைக்காகவும், இயற்கை வளப் பாதுகாக்கவும் போராடுபவர்களை தேச விரோதிகள் என மாவோயிஸ்டுகளையும், நக்ஸலைட்டுகளையும் அடையாளப்படுத்தும் அமித்ஷாவும், ப. சிதம்பரமும் ஒரே குரலில் பேசுவது வியப்பாக இருக்கிறது என இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சி மாநிலச் செயலாளர் மு.வீரபாண்டியன் தெரிவித்துள்ளார்.
இதுதொடர்பாக அவர் கூறியிருப்பதாவது:
காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர், மத்திய அரசின் முன்னாள் நிதித்துறை மற்றும் உள்துறை அமைச்சருமான ப.சிதம்பரம், சிவகங்கையில் நடந்த நிகழ்ச்சி ஒன்றில் மாவோயிஸ்டுகள், நக்ஸலைட்டுகள் எண்ணிக்கை குறைக்கப்பட்டது காங்கிரஸ் கட்சியின் ஆட்சியில் தான் என்று உரிமை கொண்டாடியுள்ளார். வரும் 2026 மார்ச் 31-க்குள் மாவோயிஸ்டுகள், நக்ஸலைட்டுகள் முற்றாக அழித்தொழிக்கப்படுவார்கள் உள்துறை அமைச்சர் அமித் ஷாவின், ஏதேச்சாதிகார அடக்குமுறை நடவடிக்கைகளுக்கு ஆதரவாக ப.சிதம்பரம் குரல் கொடுக்க வேண்டிய நிலை எதற்காக ஏற்பட்டது.?
ப.சிதம்பரம் மத்திய அரசின் உள்துறை அமைச்சராக இருந்த காலத்தில் மாவோயிஸ்டுகளை வேட்டையாட சால்வா ஜூடும் என்ற சட்டவிரோத படை அமைக்கப்பட்டது. இது தொடர்பாக உச்ச நீதிமன்றத்தில் பல வழக்குகள் தாக்கலானதை சிதம்பரம் அமைச்சர் மறந்திருக்க முடியாது. இந்த வழக்கை விசாரித்த உச்ச நீதிமன்றத்தின் இரு நீதிபதிகள் அமர்வு விசாரித்து, சால்வா ஜூடும் அமைப்பு அரசியலமைப்பு சட்டத்திற்கு எதிரானது, அது அரசியலமைப்பு சட்டத்தின் பிரிவு 14 (சமத்துவம்) 21 (வாழும் உரிமை) ஆகியவற்றை அத்துமீறியுள்ளது. அது உடனடியாக கலைக்கப்பட வேண்டும் என உத்தரவிட்டது. ஆனால், அது கலைக்கப்படவில்லை.
தண்டகாரண்யா மலைப் பகுதிகளில் கணக்கு, வழக்கு இல்லாது குவிந்து கிடக்கும் இயற்கை வளங்களை பன்னாட்டு குழும நிறுவனங்களின் லாப வேட்டைக்கு, குறிப்பாக அதானி, அம்பானி வகையறாக்களுக்கு வழங்க பாஜக ஒன்றிய அரசும், உள்துறை அமைச்சகமும் தீவிரமாக செயல்பட்டு வருகிறது. பாஜகவின் மக்கள் விரோதக் கொள்கைக்கு எதிராக, அரிய வகை கனிவளங்களும், இயற்கை வளங்களும் கார்ப்பரேட்டு நிறுவனங்களுக்கு பலியிடுவதை எதிர்த்தும், வழி, வழியாகவும், தலைமுறை, தலைமுறையாகவும் இயற்கையோடு இணைந்து வாழ்ந்து வரும் பழங்குடிகள், மலைவாழ் மக்கள் தங்கள் வாழ்வுரிமைக்காக, வன உரிமையை நிலைநாட்ட போராடும் சூழலில், அவர்களுக்கு ஆதரவாக நக்ஸ்லைட்டுகளும், மவோயிஸ்டுகளும் உருவாகிறார்கள். அவர்களது போராட்ட வழிமுறை ஜனநாயக முறைக்கு மாறாக இருப்பதால், அவர்களை ஜனநாயக மைய நீரோட்டத்துக்கு திரும்ப வேண்டும் என விழைகிறோம். வலியுறுத்தி வருகிறோம்.
அதற்கு மாறாக வன உரிமைக்காகவும், இயற்கை வளப் பாதுகாக்கவும் போராடுபவர்களை தேச விரோதிகள் என மாவோயிஸ்டுகளையும், நக்ஸலைட்டுகளையும் அடையாளப்படுத்தும் அமித்ஷாவும், ப. சிதம்பரமும் ஒரே குரலில் பேசுவது வியப்பாக இருக்கிறது என கூறியுள்ளார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.