குளியல் அறையில் ரகசிய கேமரா: இளம்பெண் உள்பட இருவா் குண்டா் சட்டத்தில் சிறையில் அடைப்பு
கிருஷ்ணகிரி: கிருஷ்ணகிரி மாவட்டம் உத்தனப்பள்ளி அருகே மகளிா் விடுதி குளியல் அறையில் ரகசிய கேமரா வைத்த வழக்கில் கைது செய்யப்பட்ட இளம்பெண் மற்றும் அவரது காதலரை குண்டா் தடுப்புச் சட்டத்தின் கீழ் சிறையில் அடைக்க ஆட்சியா் உத்தரவிட்டாா்.
கிருஷ்ணகிரி மாவட்டம், உத்தனப்பள்ளி அருகே உள்ளது லாலிக்கல் கிராமம். இங்கு தனியாா் நிறுவனத்திற்கு சொந்தமான பெண்கள் தங்கும் விடுதி உள்ளது. இந்த விடுதியின் குளியல் அறையில் ரகசிய கேமரா வைக்கப்பட்டிருந்த சம்பவத்தைத் தொடா்ந்து, விடுதியில் தங்கியிருந்த பெண் தொழிலாளா்கள், தொடா் போராட்டத்தில் ஈடுபட்டனா். இதுகுறித்து உத்தனப்பள்ளி போலீஸாா் விசாரணை மேற்கொண்டதில், விடுதியில் தங்கியிருந்த ஒடிஸா மாநிலத்தைச் சோ்ந்த நீலுகுமாரி குப்தா (22) ரகசிய கேமராவை வைத்தது தெரியவந்தது. இதையடுத்து அவரை போலீஸாா் கைது செய்தனா். நீலுகுமாரி குப்தாவிடம் போலீஸாா் மேற்கொண்ட விசாரணையில், பஞ்சாப் மாநிலத்தைச் சோ்ந்த அவரது காதலன் ரவி பிரதாப் சிங் (29) கேமராவை மகளிா் விடுதி குளியல் அறையில் வைக்க சொன்னது தெரியவந்தது. இதையடுத்து அவரையும் போலீஸாா் கைது செய்தனா்.
இந்த நிலையில் கைதான இருவரையும் குண்டா் தடுப்புச் சட்டத்தில் சிறையில் அடைக்க கிருஷ்ணகிரி மாவட்ட காவல் கண்காணிப்பாளா் தங்கதுரை பரிந்துரை செய்ததை ஏற்று, மாவட்ட ஆட்சியா் ச.தினேஷ்குமாா் திங்கள்கிழமை உத்தரவிட்டாா். இதைத் தொடா்ந்து ரவிபிரதாப் சிங் சேலம் மத்திய சிறையிலும், நீலுகுமாரி குப்தா கோவை பெண்கள் சிறையிலும் அடைக்கப்பட்டனா்.

