
மகா கும்பமேளாவில் புனித நீராடிவிட்டு வீடு திரும்பியபோது நடந்த விபத்தில் 3 பேர் பலியாகினர்.
உத்தரப் பிரதேச மாநிலம் பிரயாக்ராஜில் மகா கும்பமேளா நடைபெற்று வருகிறது. ஜனவரி 13ஆம் தேதி தொடங்கிய இந்நிகழ்வு பிப்ரவரி 26ஆம் தேதி வரை நடைபெறவுள்ளது.
இதில் கங்கை, யமுனை மற்றும் சரஸ்வதி (புராண நதி) ஆகிய 3 புனித நதிகள் சங்கமிக்கும் திரிவேணி சங்கமத்தில் பக்தர்கள் புனித நீராடி வழிபட்டு வருகின்றனர்.
இந்நிலையில் மகா கும்பமேளாவில் புனித நீராடிவிட்டு வாகனத்தில் வீடு திரும்பிய கொண்டிருந்த நிலையில், வடக்கு மஹாராஷ்டிரம் வாவியில் அருகே சம்புருத்தி விரைவுச் சாலையில் எதிரே வந்த வாகனம் மோதி இவ்விபத்து நடைபெற்றது.
இதையும் படிக்க: மகா கும்பமேளாவில் இதுவரை 33 கோடி பக்தர்கள் புனித நீராடல்!
இந்த விபத்தில் சம்பவ இடத்திலேயே 3 பேர் பலியாகினர். 4 பேர் காயமடைந்தனர். பலியானவர்கள் பிரதாப்ராவ் தேசாய், அதர்வா கிரண் நிகாம், வாகனத்தை ஓட்டிவந்த பிரக்யவான் ஜகதே என காவல் துறையினர் அடையாளம் கண்டுள்ளனர்.
காயமடைந்தவர்கள் நாசிக்கில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். அவர்கள் உடல்நிலை சீராக இருப்பதாக காவல் துறையினர் தெரிவித்துள்ளனர்.
மேலும், இவ்விபத்து தொடர்பாக காவல் துறையினர் வழக்குப் பதிந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
நேற்று, மகா கும்பமேளாவில் இருந்து வீடுதிரும்பியபோது ஜார்க்கண்ட் மாநிலம் ஹசாரிபாக்கில் நடந்த விபத்தில் 6 பக்தர்கள் காயமடைந்தனர்.