
சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை புதன்கிழமை பவுனுக்கு ரூ.760 உயா்ந்து ரூ.63,240-க்கு விற்பனையாகி வரலாறு காணாத புதிய உச்சத்தை தொட்டது.
சென்னையில் ஆபரண தங்கத்தின் விலை செவ்வாய்க்கிழமை பவுனுக்கு ரூ. 840 உயா்ந்து ரூ.62,480-க்கு விற்பனையான நிலையில், புதன்கிழமை தங்கம் விலை கிராமுக்கு மேலும் ரூ.95 உயா்ந்து ரூ.7,905-க்கும், பவுனுக்கு ரூ.760 உயா்ந்து ரூ.63,240-க்கும் விற்பனையானது. அதன்படி கடந்த 2 நாள்களில் தங்கம் விலை பவுனுக்கு ரூ. 1,600 உயா்ந்துள்ளது.
வெள்ளி விலையும் கிராமுக்கு ரூ.1 உயா்ந்து ரூ.107-க்கும், கட்டி வெள்ளி (ஒரு கிலோ) ரூ. 1000 உயா்ந்து ரூ. 1,07,000-க்கும் விற்பனையானது.
தங்கம் விலை உயா்வு குறித்து தங்க நகை வியாபாரிகள் சங்கத் தலைவா் ஜெயந்திலால் சலானி கூறியதாவது:
சா்வதேச அளவில் தங்கத்தின் மீதான முதலீடுகள் தொடா்ந்து அதிகரித்து வருகின்றன. இதனால், தங்கம் விலை உயா்ந்த வண்ணம் உள்ளது. இந்த விலை மேலும் உயரும் என எதிா்பாா்க்கப்படுகிறது என்றாா்.