பள்ளி மாணவி பாலியல் வன்கொடுமை விவகாரம்: தமிழக அரசு பொறுப்பேற்க வேண்டும் - பாமக நிறுவனர் ராமதாஸ்

கிருஷ்ணகிரி மாவட்டம், போச்சம்பள்ளியில் பள்ளி மாணவிக்கு நிகழ்ந்த பாலியல் வன்கொடுமை நிகழ்வுக்கு தமிழக அரசு பொறுப்பேற்க வேண்டும்
பாமக நிறுவனர் ராமதாஸ்
பாமக நிறுவனர் ராமதாஸ்
Published on
Updated on
2 min read

விழுப்புரம் : கிருஷ்ணகிரி மாவட்டம், போச்சம்பள்ளியில் பள்ளி மாணவிக்கு நிகழ்ந்த பாலியல் வன்கொடுமை நிகழ்வுக்கு தமிழக அரசு பொறுப்பேற்க வேண்டும் என்று பாமக நிறுவனர் ராமதாஸ் தெரிவித்தார்.

திண்டிவனம் அருகிலுள்ள தைலாபுரம் தோட்டத்தில் வியாழக்கிழமை செய்தியாளர்களிடம் பேசியது:

தமிழக ஆளுநர் - அரசுக்கு இடையிலான மோதல் உயர்கல்வியைப் பாதிக்கக்கூடாது. பாரதிதாசன் பல்கலைக்கழகத் துணை வேந்தரின் நீடிக்கப்பட்ட பதவிக்காலம் கடந்த 4-ஆம் தேதி முடிவடைந்தது, பாரதியார், கல்வியியல், அண்ணா, பெரியார், அழகப்பா, அண்ணாமலை ஆகிய 6 பல்கலைக் கழகத் துணைவேந்தர் பணியிடங்கள் ஏற்கெனவே காலியாக உள்ள நிலையில், தற்போது பாரதிதாசன் பல்கலைக்கழகமும் அதில் இணைந்திருப்பதால் 7 பல்கலைக்கழகங்களில் துணைவேந்தர் பதவி காலியாக உள்ளன. துணைவேந்தர் கையெழுத்து இல்லாத சான்றிதழ்கள் செல்லதக்கது அல்ல. இந்த நிலை நீடிக்கக்கூடாது. துணைவேந்தர் நியமனம் தொடர்பான வழக்கில் சாதகமான தீர்ப்பு பெற அரசு நடவடிக்கை எடுக்கவேண்டும்.

தமிழக அரசு பள்ளிகளில் 3,192 பட்டதாரி ஆசிரியர்களை தேர்வு செய்ய 2023 ஆம் ஆண்டு அறிவிப்பு வெளியிடப்பட்டது. அதன்படி விண்ணபித்தவர்களுக்கு 2024 தேர்வு நடத்தப்பட்டு மே மாதம் தேர்வு முடிவுகள் அறிவிக்கப்பட்டு தேர்வானவர்கள் பட்டியல் ஜூலை

மாதம் வெளியிடப்பட்டு இன்றுவரை பணிநியமன ஆணை வழங்கவில்லை. இடைநிலை ஆசிரியர்களுக்கும் போட்டித்தேர்வு நடத்தப்பட்டு 6 மாதம் கடந்தும் திருத்தம் செய்யவும் அரசு முயற்சிக்கவில்லை. பட்டதாரி ஆசிரியர்களுக்கு பணி நியமன ஆணையையும், இடைநிலை ஆசிரியர்களுக்கான போட்டித் தேர்வு முடிவை வெளியிடவேண்டும்.

தெலங்கானாவில் ஜாதிவாரி கணக்கெடுப்பு குறித்து பாராட்டி, தேசிய அளவில் இக்கணக்கெடுப்பு நடத்த எதிர்கட்சித்தலைவர் ராகுல்காந்தி வலியிறுத்தியுள்ளார். தமிழகத்தில் ஜாதிவாரி கணக்கெடுப்பு நடத்தவேண்டும் என காங்கிரஸ் தேசிய தலைமை வலியுறுத்த வேண்டும்.

ஆன்லைன் சூதாட்ட தற்கொலைகளை தடுக்க உச்சநீதிமன்றத்தில் தடையாணை பெறவேண்டும். ஆன் லைன் ரம்மிக்கு தமிழக அரசு தடை விதித்தது செல்லாது என சென்னை உயர்நீதி தீர்ப்புக்குப் பின் 19 தற்கொலைகள் நிகழ்ந்துள்ளன. எனவே ஆன் லைன் ரம்மிக்கு தடை பெற அரசு முயற்சிக்க வேண்டும்.

தமிழகத்தில் அடுத்த இரு ஆண்டுகளில் 963 கிமி நீளத்துக்கு 4 வழிச்சாலைகள் பயன்பாட்டிற்கு வர உள்ளதால் சுங்கச்சாவடிகள் 90 ஆக அதிகரிக்கும் என மக்களவையில் அறிவிக்கப்பட்டுள்ளது. இதே நிலை நீடித்தால் சுங்கக் கட்டணம் செலுத்த முடியாமல் செல்ல இயலாத நிலை ஏற்படும்.

அரசு மருத்துவமனைகளில் 658 சிறப்பு மருத்துவர்களை நேர்காணல் மூலம் நியமிக்கும் முடிவை அரசு கைவிட்டு போட்டித்தேர்வின் மூலமே நியமிக்கவேண்டும். நேர்காணல் மூலம் நியமிக்கப்பட்டால் முறைகேடுகளுக்கு வழிவகுக்கும்.

கிருஷ்ணகிரி மாவட்டத்தில் உள்ள போச்சம்பள்ளியில் 8 - ஆம் வகுப்பு படிக்கும் மாணவியை 3 ஆசிரியர்கள் பாலியல் வன்கொடுமை செய்ததாக வெளியான தகவல் அதிர்ச்சி அளிக்கிறது. இந்த ஆசிரியகளுக்கு தண்டனை பெற்றுத் தர தமிழக அரசும், காவல்துறையும் கடும் நடவடிக்கை எடுக்கவேண்டும். இந்த சம்பவத்துக்கு தமிழக அரசு பொறுப்பேற்க வேண்டும்.

திருப்பரங்குன்றம் மலை யாருக்கு சொந்தம் என்ற பிரச்னை 100 ஆண்டுகளுக்கு மேலாக உள்ளது. கடந்த காலங்களில் இந்துக்களும், இஸ்லாமியர்களுக்கும் கடைப்பிடித்த நடைமுறை தொடர்பான அமைதிக்கூட்டத்தில் எடுக்கப்பட்ட நடவடிக்கைகளை நடைமுறைப்படுத்தவேண்டும் என்றார் ராமதாஸ்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com