ஐஐடி தில்லி (கோப்புப்படம்)
ஐஐடி தில்லி (கோப்புப்படம்)

ஐஐடி முனைவர் படிப்பில் 560 ஓ.பி.சி., எஸ்.சி., எஸ்.டி. இடங்கள் பறிப்பு!

ஐஐடி முனைவர் படிப்பு இட இதுக்கீடு தொடர்பாக...
Published on

ஐ.ஐ.டி.க்களில் இடஒதுக்கீட்டை முறையாக நடைமுறை படுத்தப்படாததால் முனைவர் படிப்பில் 560 ஓ.பி.சி, எஸ்.சி, எஸ்.டி மாணவர் இடங்கள் பறிக்கப்பட்டுள்ளதாக மதுரை மக்களவை உறுப்பினர் சு. வெங்கடேசன் தெரிவித்துள்ளார்.

இடஒதுக்கீடு முறையாக நடைமுறை படுத்தப்படாததை மறைக்க மத்திய அமைச்சர் அரைகுறையாக பதில் தருகிறார் என்றும் முழுவிபரங்களைத் தந்தால் எந்தெந்த ஐஐடிகள் இட ஒதுக்கீட்டு நெறிமுறைகளை மீறி இருக்கின்றன என்பது தெளிவாகும் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

இது பற்றி மதுரை எம்பி சு. வெங்கடேசன் தன்னுடைய எக்ஸ் தளப் பதிவில், “இந்தியாவில் உள்ள ஐஐடி-களில் 2023 - 24 கல்வி ஆண்டில் எத்தனை முனைவர் பட்ட மாணவர்கள் அனுமதிக்கப்பட்டார்கள், அவர்களில் எத்தனை பேர் எஸ். சி, எஸ்.டி, இதர பிற்படுத்தப்பட்டோர் என்பதை துறைவாரியாக தருமாறு நான் நாடாளுமன்றத்தில் கேள்வி (922/10.02.2025) எழுப்பி இருந்தேன்.

அதற்கான பதிலை நாடாளுமன்றத்தில் கல்வி இணையமைச்சர் சுகந்தா மஜும்தார் தந்துள்ளார்.   நான் கேட்ட கேள்விக்கு ஒரே வரியில் முனைவர் படிப்புகளுக்கு மொத்தம் 6210 மாணவர்கள் அனுமதிக்கப்பட்டுள்ளனர் என்றும் அவர்களில் 2484 பேர் எஸ்.சி, எஸ்.டி, ஓ.பி.சி மாணவர்கள் என்று தெரிவித்திருக்கிறார்.

இதையும் படிக்க: விலைவாசி உயர்வு, மணிப்பூர் விவகாரம்: மக்களவையில் காங்கிரஸ் எம்.பி.க்கள் நோட்டீஸ்!

பதிலிலுள்ள மற்ற வரிகள் எல்லாம் எவ்வாறு மத்திய அரசு ஐஐடி-களுக்கு இட ஒதுக்கீடு பற்றி வலியுறுத்தி இருக்கிறது, அதை ஐஐடி நிறுவனங்கள் எவ்வாறு அமலாக்குகின்றன என்பதை பற்றிய வெற்று விளக்கங்களாகவே உள்ளன. நான் கேள்வியில் எழுப்பி உள்ளது போல, இட ஒதுக்கீட்டின் வாயிலாக மாணவர்கள் பெற்ற அனுமதி விவரங்களை, பிரிவு வாரியாக துறைவாரியாக நிறுவனவாரியாக அமைச்சர் தரவில்லை. இது தற்செயலானதாக கருதப்படவில்லை. முழு விவரங்களை தருவது இட ஒதுக்கீட்டு அமலாக்கத்தில் உள்ள இடைவெளிகளை அம்பலப்படுத்தும் என்பதால் நோக்கத்துடன் மறைக்கப்பட்டு இருக்கிறது என்றே நினைக்கிறேன். ஆனால் அமைச்சர் தந்துள்ள அரைகுறை விவரங்களைக் கொண்டே இட ஒதுக்கீடு முறையாக கடைப்பிடிக்கப்படாததை அம்பலத்திற்கு கொண்டு வர வந்துள்ளது. 

6210 மொத்த மாணவர் அனுமதிகளில் 2484 இட ஒதுக்கீட்டு பிரிவினர் என்றால் 40% மட்டுமே வருகிறது. ஓ.பி.சி. 27%, எஸ்.சி. 15%, எஸ்டி 7.5% என்றால் மொத்தம் 49.5% இடங்கள் இட ஒதுக்கீட்டின் கீழ் வந்திருக்க வேண்டும். இதன்படியே 590 இடங்களை எஸ்.சி., எஸ்.டி., ஓ.பி.சி. மாணவர்கள் பறி கொடுத்துள்ளனர் என்பது தெளிவாகிறது.  பொதுப் பட்டியல் இடங்களில் எஸ்.சி., எஸ்.டி, ஓ.பி.சி. மாணவர்கள் இடம்பெற்றுள்ளார்களா? அல்லது அந்த இடங்கள் இட ஒதுக்கீட்டு இடங்களில் சரிக் கட்டப்பட்டுள்ளனவா என்பதும் ஆய்வு செய்யப்பட வேண்டும்.

இட ஒதுக்கீட்டு பிரிவினர் விவரங்களை தனித்தனியாக தந்தால் எந்தெந்த ஐஐடிகள் இட ஒதுக்கீட்டு நெறிமுறைகளை மீறி இருக்கின்றன என்பதும் பொது வெளிக்கு தெரிய வரும்.   நாடாளுமன்றத்தில் முழுமையான பதில் தரப்படவில்லை என்பதை தெரிவித்தும், முழு விவரங்களை வெளியிடுமாறும் கேட்டு மத்திய கல்வி இணை அமைச்சர் சுகந்தா மஜும்தாருக்கு கடிதம் எழுதியுள்ளேன்.” என்று குறிப்பிட்டுள்ளார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

X
Dinamani
www.dinamani.com