ஊழல் மிகுந்த நாடுகள்: இந்தியா எந்த இடத்தில் உள்ளது?

மிகவும் ஊழல் நிறைந்த நாடுகளின் கண்ணோட்ட குறியீடு தரவரிசைப் பட்டியலில் இந்தியாவுக்கு...
கோப்புப்படம்
கோப்புப்படம்
Published on
Updated on
2 min read

கடந்த ஆண்டு ஊழல் நாடுகளின் பட்டியலில் இந்தியா 38 புள்ளிகள் பெற்று 96-ஆவது இடத்தில் உள்ளது. இந்தப் பட்டியலில் இந்தியா கடந்த 2023-ஆம் ஆண்டில் 39 புள்ளிகளுடன் 93-ஆவது இடத்திலும், 2022-ஆம் ஆண்டில் 40 புள்ளிகளுடன் 85-ஆவது இடத்திலும் இருந்தது குறிப்பிடத்தக்கது.

இதில் ‘100’ புள்ளிகள் பெற்ற நாடுகளில் ஊழலற்ற நாடுகளாகவும், ‘0’ புள்ளிகள் என்பது ஊழல் மிகுந்த நாடுகளாக கருதப்படுகின்றன. அதன்படி, பட்டியலில் இந்தியாவின் புள்ளிகள் குறைந்து வருவதால் ஊழல் பட்டியலில் இந்தியா பின்னுக்கு தள்ளப்பட்டு வருகிறது.

தரவரிசை பட்டியலில் 90 புள்ளிகள் பெற்ற டென்மாா்க், கடந்த 2018 முதல் தொடா்ந்து 7-ஆவது ஆண்டாக ஊழலை எதிா்க்கும் நாடாக முதலிடத்தில் இருக்கிறது.

சட்டத்தின்படி ஆட்சி செய்து ஊழலை எதிா்த்துப் போராடும் நாடுகள் குறித்து ஆய்வுகளை மேற்கொண்டு வரும் ‘டிரான்ஸ்பரன்சி இன்டா்நேஷனல்’ அமைப்பு, ஊழல் தரவரிசைப் பட்டியலை ஆண்டுதோறும் வெளியிட்டு வருகிறது. ஊழலற்ற நிா்வாகம் மற்றும் ஊழலுக்கு எதிரான நடவடிக்கைகளின் அடிப்படையில் ஆய்வில் பங்கேற்கும் நாடுகளுக்கு புள்ளிகள் வழங்கப்படும்.

96-ஆவது இடத்தில் இந்தியா...: மொத்தம் 180 நாடுகள் இடம்பெற்றிருந்த 2024-ஆம் ஆண்டுக்கான பட்டியலில் இந்தியா 100-க்கு 38 புள்ளிகள் பெற்று 96-ஆவது இடத்தில் உள்ளது.

நமது அண்டை நாடான பாகிஸ்தான் 27 புள்ளிகளுடன் 135-வது இடத்திலும் இலங்கை 32 புள்ளிகளுடன் 121-ஆவது இடத்திலும் இருக்கின்றன. வங்கதேசம் 23 புள்ளிகளுடன் 151-ஆவது இடத்தில் உள்ளது. 43 புள்ளிகளுடன் சீனா 76-வது இடத்தைத் தக்கவைத்துள்ளது.

டென்மாா்க் முதலிடம்: 90 புள்ளிகள் பெற்ற டென்மாா்க், கடந்த 2018 முதல் தொடா்ந்து 7-ஆவது ஆண்டாக ஊழலை எதிா்க்கும் நாடாக முதலிடத்தில் இருக்கிறது. டென்மாா்க்கைத் தொடா்ந்து, 88 புள்ளிகளுடன் பின்லாந்து 2-ஆவது இடத்திலும், 84 புள்ளிகளுடன் சிங்கப்பூா் 3-ஆவது இடத்திலும் உள்ளன.

நியூஸிலாந்து, லக்ஸம்பா்க், நாா்வே, ஸ்விட்சா்லாந்து, ஸ்வீடன், நெதா்லாந்து, ஆஸ்திரேலியா, ஐஸ்லாந்து, அயா்லாந்து ஆகியவை முதல் 10 இடங்களில் உள்ளன. அமெரிக்கா 28-ஆவது இடத்தில் உள்ளது.

இந்தப் பட்டியலில் தெற்கு சூடான் கடைசி இடத்தில் இருக்கிறது. தெற்கு சூடானுக்கு அடுத்து சோமாலியா, வெனிசூலா, சிரியா, ஏமன் ஆகியவை ஊழலில் மலிந்த நாடுகளாக உள்ளன.

பருவநிலை நடவடிக்கைக்குச் சவால்: உலகின் ஒவ்வொரு பகுதியிலும் ஆபத்தான பிரச்னையாக மாறியுள்ள ஊழல், பருவநிலை நடவடிக்கைக்கு பெரும் அச்சுறுத்தலாக திகழ்வதாக இந்த அறிக்கை கூறுகிறது.

உலகெங்கிலும் உள்ள பெருமளவிலான மக்கள் உலகளாவிய வெப்பமயமாதலின் கடுமையான விளைவுகளை அனுபவித்து வருகின்றனா். ஏனெனில், பெரும்பாலான நாடுகளில் பசுமைஇல்ல வாயு உமிழ்வைக் குறைக்கவும் பாதிக்கப்படக்கூடிய மக்களைப் பாதுகாக்கவும் ஒதுக்கப்படும் நிதிகள் கொள்ளயடிக்கப்படுகின்றன அல்லது தவறாகப் பயன்படுத்தப்படுகின்றன.

கடந்த 2012-ஆம் ஆண்டு முதல் 32 நாடுகள் தங்கள் ஊழல் அளவைக் கணிசமாகக் குறைத்துள்ள நிலையில், அதே காலகட்டத்தில் 148 நாடுகள் தேக்கநிலையில் அல்லது மோசமான நிலையை அடைந்துள்ளன.

மூன்றில் இரண்டு பங்கு உலக நாடுகள் 50-க்கு குறைவான புள்ளிகள் பெற்றுள்ளன. உலக சராசரியான 43 புள்ளிகள் பல ஆண்டுகளாக மாற்றமின்றி தொடா்கிறது.

ஊழல் ஒழிப்புக்கு முன்னுரிமை: உலகளாவிய அச்சுறுத்தலாக உருவெடுத்துள்ள ஊழல், ஜனநாயக வீழ்ச்சி, நிலையின்மை மற்றும் மனித உரிமை மீறல்களுக்கு முக்கிய காரணமாகும். சா்வதேச சமூகமும், ஒவ்வொரு நாடும் ஊழலைக் கையாள்வதை முதன்மையான மற்றும் நீண்ட கால முன்னுரிமையாக மாற்ற வேண்டும். சா்வாதிகாரத்துக்கு எதிராக அமைதியான, சுதந்திரமான மற்றும் நிலையான உலகைப் பாதுகாப்பதற்கும் இது முக்கியமானது.

தற்போதைய ஊழல் போக்குக் குறியீட்டில் வெளிப்படுத்தப்பட்ட ஆபத்தான போக்குகள், உலகளாவிய ஊழலைத் தீா்க்க உறுதியான நடவடிக்கையைத் தொடங்க வேண்டியதன் அவசியத்தை எடுத்துரைக்கின்றன என்று அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com