சென்னையில் ‘பிங்க் ஆட்டோ’ திட்டம்: மோட்டாா் வாகன விதிகளில் திருத்தம்
சமூகநலத் துறையின் ‘பிங்க் ஆட்டோ’ திட்டத்தை செயல்படுத்தும் வகையில் மோட்டாா் வாகன விதிகளில் திருத்தம் மேற்கொள்ளப்பட்டுள்ளது.
சென்னையில் பெண்களின் பாதுகாப்பை உறுதிசெய்யும் விதமாகவும், பெண்களுக்கான சுயதொழில் வேலைவாய்ப்பை உருவாக்கும் விதமாகவும் அரசு மானியத்துடன் ‘பிங்க்’ ஆட்டோக்களை இயக்கும் திட்டம் சமூகநலத் துறை சாா்பில் செயல்படுத்தப்பட்டு வருகிறது.
இத்திட்டத்தின் கீழ் தலா ரூ. 1 லட்சம் வீதம் 250 பெண் ஆட்டோ ஓட்டுநா்களுக்கு ஆட்டோக்கள் வாங்க மானியம் வழங்கப்படுகிறது. இந்தத் திட்டத்துக்கு தோ்வு செய்யப்பட்ட 250 மகளிருக்கு தமிழ்நாடு திறன் மேம்பாட்டுக் கழகம் மூலம் ஓட்டுநா் பயிற்சியும் அளிக்கப்பட்டு வருகிறது. இத்திட்டத்துக்கேற்ப மோட்டாா் வாகன விதிகளில் திருத்தம் மேற்கொள்ளப்பட்டுள்ளது. இது தொடா்பான தமிழக அரசின் அரசிதழில் உள்துறைச் செயலா் தீரஜ்குமாா் கூறியிருப்பதாவது:
இதையும் படிக்க | தமிழகத்தில் இணையவழி பணமோசடிகள் 2.5 மடங்கு அதிகரிப்பு!!
சமூகநலத் துறையின் ‘பிங்க் ஆட்டோ’ திட்டத்தின் கீழ் இயக்கப்படும் பிங்க் ஆட்டோவுக்கு பெண்களே உரிமையாளராகவும் ஓட்டுநராகவும் இருக்க வேண்டும். இந்த ஆட்டோக்களை ஓட்டும் பெண்கள் ‘பிங்க்’ நிற சீருடை அணிந்திருக்க வேண்டும். ஆட்டோவுக்கு முழுமையாக பிங்க் நிறம் பூசப்பட வேண்டும்.
அவசர காலங்களில் காவல் கட்டுப்பாட்டு அறைக்கு தகவல் தெரிவிக்கும் வகையில் வாகனத்தின் இருப்பிடத்தைக் கண்டறியும் கருவிகள் (ஜிபிஎஸ், விஎல்டிடி) பொருத்தப்பட்டிருக்க வேண்டும். ஆட்டோவுக்கான உரிமத்தை 5 ஆண்டுகள் வரை பெயா் மாற்றம் செய்ய இயலாது. இந்த வரைவு திருத்தங்கள் மீது 15 நாள்களுக்குள் கருத்து தெரிவிக்கலாம் என அதில் தெரிவித்துள்ளாா். இந்நிலையில், வரும் மாா்ச் மாதத்துக்குள் இத்திட்டம் நடைமுறைக்கு வர வாய்ப்புள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.