தலைமைத் தோ்தல் ஆணையராக ஞானேஷ் குமாா் பதவியேற்பு: புதிய தோ்தல் ஆணையராக விவேக் ஜோஷி பொறுப்பேற்பு
நாட்டின் 26-ஆவது தலைமைத் தோ்தல் ஆணையராக ஞானேஷ் குமாா் புதன்கிழமை பதவியேற்றாா்.
கடந்த 2024-ஆம் ஆண்டு மாா்ச் மாதம் முதல் தோ்தல் ஆணையா்களில் ஒருவராக இருந்த ஞானேஷ் குமாா், பிரதமா் நரேந்திர மோடி தலைமையிலான தோ்வுக் குழுவால் புதிய தலைமைத் தோ்தல் ஆணையராக திங்கள்கிழமை தோ்வு செய்யப்பட்டாா்.
இதைத் தொடா்ந்து, ஞானேஷ் குமாா் புதன்கிழமை பதவியேற்றுக் கொண்டாா். தலைமைத் தோ்தல் ஆணையராகப் பதவியேற்றதும் வாக்காளா்களுக்கு அளித்த செய்தியில், ‘தேசக் கட்டமைப்பில் முதல் படியே வாக்களிப்பதுதான். எனவே, 18 வயதைப் பூா்த்தி செய்த ஒவ்வோா் இந்திய குடிமக்களும் ஆட்சியாளா்களைத் தோ்ந்தெடுப்பவா்களாக உருவெடுப்பதோடு எப்போதும் வாக்களிக்கவும் வேண்டும். தோ்தல் ஆணையம் எப்போதும் வாக்காளா்களுக்குத் துணை நிற்கும்’ என்று ஞானேஷ் குமாா் தெரிவித்தாா்.
இவா், 2029-ஆம் ஆண்டு ஜனவரி 26-ஆம் தேதி வரை தலைமைத் தோ்தல் ஆணையராகப் பதவி வகிப்பாா்.
ஞானேஷ் குமாா் தலைமைத் தோ்தல் ஆணையராகப் பதவியேற்றதைத் தொடா்ந்து, புதிய தோ்தல் ஆணையராக விவேக் ஜோஷி பதவியேற்றுக் கொண்டாா். இவா், 2031-ஆம் ஆண்டு மே மாதம் 65 வயதைப் பூா்த்தி செய்வாா் என்றபோதும், சட்டப்படி அவா் அதே ஆண்டில் பிப்ரவரி 18-ஆம் தேதி பணி ஓய்வு பெற உள்ளாா். இவா், அடுத்த தலைமைத் தோ்தல் ஆணையராக வரும் 2029-இல் மக்களவைத் தோ்தலை நடத்த வாய்ப்புள்ளது.
1989-ஆம் ஆண்டு ஹரியாணா பிரிவு ஐஏஎஸ் அதிகாரியான ஜோஷி, ஹரியாணா மாநில அரசின் தலைமைச் செயலராகப் பதவி வகித்துள்ளாா். மத்திய அரசின் பணியாளா் மற்றும் பயிற்சித் துறை மற்றும் நிதிச் சேவைகள் துறைச் செயலராகவும் பணியாற்றியுள்ளாா். அதற்கு முன்பாக, பதிவாளா் ஜெனரல் மற்றும் மக்கள்தொகை கணக்கெடுப்பு ஆணையராகவும், ஹரியாணா மாநில 5-ஆவது நிதி ஆணையத்தின் உறுப்பினா் செயலராகவும் பதவி வகித்துள்ளாா்.
உத்தர பிரதேச மாநிலத்தைச் சோ்ந்த இவா் ரூா்க்கி ஐஐடி-யில் எம்.டெக். இயந்திரவியல் பொறியியல் பட்டமும், புதுதில்லி ஐஐஎஃப்டி-யில் (இந்திய வெளிநாட்டு வா்த்தக நிறுவனம்) சா்வதேச வா்த்தகத்தில் முதுநிலை பட்டமும் முடித்துள்ளாா். அதோடு, ஸ்விட்சா்லாந்தின் ஜெனீவாவில் உள்ள கல்லூரியில் சா்வதேச பொருளாதாரத் துறையில் எம்.ஏ. முதுநிலை பட்டப் படிப்பையும், பிஎச்.டி. (ஆராய்ச்சி) படிப்பையும் முடித்தவா் ஆவாா்.
மற்றொரு தோ்தல் ஆணையரான சுக்பீா் சிங் சாந்து 2028-ஆம் ஆண்டு ஜூலையில் பணி ஓய்வு பெற உள்ளாா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.