கால்களில் அடிக்கடி வலி, வீக்கம் ஏற்படுகிறதா? மருத்துவர் என்ன சொல்கிறார்?
- டாக்டர் வி. பாலாஜி
கால்களில் ஏற்படும் ஒரு முக்கியமான பிரச்னை த்ரோம்போசிஸ் எனும் ரத்தக்குழாய்களில் அடைப்பு ஏற்படுவது. இது சாதாரணமாக திடீரென ஏற்படுவதுதான். முதலில் காலில் வீக்கம், வலி ஏற்படும். முதியோர்களுக்கும் எலும்புகளில் பிரச்னை உள்ளவர்களுக்கும் மூட்டு மாற்று அறுவை சிகிச்சை செய்தவர்களுக்கும் ஏற்படலாம். நடக்காமல் படுக்கையிலேயே இருப்பவர்களுக்கு கெட்ட ரத்தக்குழாய்களில் அடைப்பு ஏற்படுகிறது.
ரத்தக்குழாய் அடைப்பு முதலில் மூட்டுக்குக் கீழே ஆரம்பித்து தொடைப்பகுதிக்குச் சென்று பின்னர் வயிறு, நுரையீரல், இதயம் வரை செல்ல வாய்ப்புள்ளது. இந்த வகை அடைப்பு மிகவும் ஆபத்தானது.
அதனால் கால்களில் எப்போது வலி, வீக்கம் ஏற்படுகிறதோ அப்போதே இதனைக் கண்டறிந்து சிகிச்சை பெற வேண்டும்.
யார், யாருக்கெல்லாம் வரும்?
காலில் அறுவை சிகிச்சை செய்தவர்களுக்கு, புற்றுநோய் உள்ளவர்களுக்கு, விபத்து ஏற்பட்டோ அல்லது பக்கவாதம் உள்ளிட்ட மற்ற நோய்களால் பெரும்பாலும் இயக்கமில்லாமல் படுக்கையிலே இருப்பவர்களுக்கு, அதிகம் நடக்காத முதியோர்களுக்கு, ஏன் விமானத்தில் நீண்ட நேரம் அமர்ந்தே பயணிப்பவர்களுக்குக்கூட கால்களில் ரத்தக்குழாய் அடைப்பு ஏற்படலாம். அதனால் கால்களில் வலி, வீக்கம் ஏற்பட்டால் உடனடியாக மருத்துவரை அணுக வேண்டும்.
இதைக் கண்டறிவதும் மிகவும் எளிதுதான். டாப்ளர் பரிசோதனை செய்தால் கண்டறியலாம். அதிலும் சந்தேகம் இருந்தால் 'வீனோகிராம்' செய்து உறுதி செய்துகொள்ளலாம்.
சிகிச்சைகள் என்னென்ன?
இதற்கு முதலில் சிகிச்சை என்பது மருந்துகள், ஊசிதான். ரத்தக்கட்டிகளைக் கரைப்பதற்கு நிறைய மருந்துகள் இருக்கின்றன. அதனைப் பயன்படுத்திக் கரைக்கலாம். சிலருக்கு காலில் வீக்கம் அதிகமிருந்து கால் வலி அதிகமிருந்தால் காலில் உள்ள ரத்தக்குழாய்களின் வழியாகவே ஒரு ட்யூப் மூலமாக மருந்து செலுத்துவோம். இதனால் ரத்தக்கட்டியை 24 முதல் 48 மணி நேரத்திற்குள் கரைத்துவிடலாம்.
அதேபோல ரத்தக்கட்டிகள் நுரையீரலுக்குச் செல்லாமல் தடுக்க ஒரு வலை மாதிரி அமைப்பை வயிற்றுக்குள் செலுத்துவோம். தொடக்கத்திலேயே கண்டறிந்தால் அறுவை சிகிச்சை இன்றி மருந்துகள் , மாத்திரைகள் மூலமாக இதனை சரிசெய்யலாம்.
ரத்தக்குழாய் வியாதிகள் இப்போது இளைஞர்களுக்கும் வர ஆரம்பித்துவிட்டது. முன்னதாக கிராமங்களில் சத்தான உணவு சாப்பிடுவார்கள். அதனால் நோய்கள் பெரிதாக இல்லை. இப்போது அனைத்துப் பகுதிகளிலும் மேற்கத்திய உணவு முறை வந்துவிட்டது. இப்போது கொழுப்பு நிறைந்த உணவுகளை அதிகம் சாப்பிடுகிறோம். இதனால் முதியோர்களுக்கு வரும் வியாதிகள் அனைத்தும் இளைஞர்களுக்கும் வர ஆரம்பித்துவிட்டது. 35, 45 வயதிலேயே கால், மூளை, இதயத்தில் உள்ள ரத்தக்குழாய்களில் அடைப்பு ஏற்படுகிறது. இதனால் மாரடைப்பு, பக்கவாதம், கால்களில் ரத்தக்குழாய் அடைப்பு ஏற்படுகிறது. இன்றைய இளைஞர்களுக்கு புகைபிடிக்கும் பழக்கமும் அதிகம் இருக்கிறது.
இதையும் படிக்க | பல் சொத்தைக்கு டீ/காஃபிதான் காரணமா? - மருத்துவர் என்ன சொல்கிறார்?
எப்படி தவிர்ப்பது?
நோய்கள் வராமல் தடுக்க ஆரோக்கியமான உணவுமுறையைப் பின்பற்ற வேண்டும். இதனை 'ரெயின்போ உணவுமுறை' என்று சொல்கிறோம். காய்கறிகள், பழங்கள் என அனைத்தும் இருக்க வேண்டும். கொழுப்பு நிறைந்த உணவுகளைத் தவிர்க்க வேண்டும்.
உடல் எடை அதிகமாவதைத் தடுக்க வேண்டும். அதற்கு உடற்பயிற்சி கண்டிப்பாகத் தேவை. வேலைக்குச் செல்பவர்களுக்கும் சரி, படிப்பவர்களுக்கும் சரி மன அழுத்த சுற்றுச்சூழல் இன்று அதிகமாக இருக்கிறது. இதிலிருந்து வெளியே வர நமக்கு பயிற்சி தேவை. ஒரு 20-30 நிமிடங்கள் வெளியே சென்று நல்ல காற்றுடன் நடைப்பயிற்சி மேற்கொள்வது நல்லது. இது உடல் எடையைக் குறைப்பதற்கும் மன அழுத்தத்தில் இருந்து விடுபடுவதற்கும் உதவும்.
நல்ல ஆரோக்கியமான உணவு, புகைபிடித்தலை நிறுத்துவது, உடற்பயிற்சி செய்வது, உடல் எடையைக் குறைப்பது இதையெல்லாம் செய்தலே ரத்தக்குழாய்கள் தொடர்பான பிரச்னைகளைத் தவிர்க்கலாம்.
புற்றுநோயும் ரத்தக்குழாய் அடைப்பும்
புற்றுநோய்கள், ரத்தக்குழாயில் பிரச்னையை ஏற்படுத்துவது மிகவும் குறைவு. ஆனால், புற்றுநோய் இருப்பவர்களுக்கு ரத்தக்குழாய் அடைப்பு ஏற்படுவது இந்த காலத்தில் அதிக வாய்ப்பு இருக்கிறது.
கணையம், சினைப்பை நீர்க்கட்டிகள், பெருங்குடல், வயிறு, கல்லீரல் புற்றுநோய்களில் ரத்தக்குழாய் அடைப்பு ஏற்பட வாய்ப்பு அதிகமுள்ளது. இதில் 3 வகைகள் உள்ளன.
1. புற்றுநோய் ஏற்படும்போதே ரத்தக்குழாய் அடைப்பு வருவது.
2. சிறுவயதில் ரத்தக்குழாய் அடைப்பு ஏற்பட்டு பின்னர் புற்றுநோய் வருவது.
3. சிலருக்கு புற்றுநோய் வந்த பின்னர் ரத்தக்கட்டிகள் வரலாம்.
புற்றுநோய் இருப்பதால் ரத்தக்குழாய் அடைப்புக்கான சிகிச்சை சற்று தாமதம் ஆகலாம். அதேபோல இவர்களுக்கு ரத்தப்போக்கும் அதிகம் ஏற்படலாம். ரத்தக்குழாய் அடைப்பு பாதிப்பும் அதிகமிருக்கலாம். மிகவும் ஆபத்தான வகைகளில் இவர்கள் இருப்பார்கள். மிகவும் கவனமாக இந்த நோயாளிகளைக் கையாள வேண்டும்.
இதையும் படிக்க | புகைபிடிக்காதவர்களுக்கும் நுரையீரல் புற்றுநோய்! காரணம் என்ன?
எப்படி கண்டறிவது?
கால்களில் உள்ள தசைகளுக்கு(இடுப்பில் இருந்து பாதம் வரை) ரத்தம் குறைவாகச் செல்வது கால்களில் ரத்தக்குழாய் அடைப்பு ஏற்படக் காரணமாகிறது. இதனால் கால் தசைகளுக்கு ஆக்சிஜன் செல்வதில்லை. இப்படி ஆகும்போது நீங்கள் நடந்தாலே உங்களுக்கு கால் வலி வந்துவிடும்.
மூட்டு, நரம்பு, எலும்புகளில் பிரச்னை இருந்தாலும் கால் வலி ஏற்படலாம். ஆனால், ரத்தக்குழாய் அடைப்பைக் கண்டறிவது எப்படியென்றால், சாதாரணமாக 2 கிமீ தூரம் வரை நடக்கக்கூடிய ஒருவர் 500 மீட்டர் தூரம்தான் நடக்க முடிகிறது என்றால் அவருக்கு கால்களில் ரத்தக்குழாய் அடைப்பு இருக்கலாம். மேலும் இந்த வலி நீங்கள் நடப்பதை நிறுத்தியவுடன் சரியாகிவிடும். ஏனெனில் நிற்கும்போது தசைகள் வேலை செய்யாததால் வலியும் சரியாகிவிடுகிறது. சில நிமிடங்களுக்குப் பிறகு நடந்தால் மீண்டும் வலி ஏற்படும். இதுதான் இந்த பிரச்னைக்கு சரியான அறிகுறி. இப்படி அறிகுறிகள் இருந்தால் மருத்துவரை அணுகி உடனடி சிகிச்சை மேற்கொண்டால் இதிலிருந்து மீண்டு வரலாம்.
(கட்டுரையாளர் - ரத்தநாள அறுவை சிகிச்சை நிபுணர், அப்போலோ மருத்துவமனை, சென்னை)
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.