
லக்னௌ: உத்தரப்பிரதேச மாநிலம்,காசியாபாத் கொள்ளை வழக்கில் ரூ.1 லட்சம் சன்மானம் அறிவிக்கப்பட்டு தேடப்பட்டு வந்த குற்றவாளி ஜிதேந்திரா புதன்கிழமை காலை மீரட்டில் நடந்த போலீஸ் என்கவுண்டரில் சுட்டுப்பிடிக்கப்பட்டுள்ளார்.
ஹரியாணா மாநிலம் ஜஜ்ஜார் மாவட்டத்தைச் சேர்ந்த ஜிதேந்திரா என்ற ஜீது, 2023 ஆம் ஆண்டு உத்தரப்பிரதேச மாநிலம் காசியாபாத்தில் நடந்த கொலை வழக்கில் தேடப்பட்டு வந்தார்.
இதனிடையே, அவரை பிடிக்க காவல் துறையினருக்கு தகவல் அளிப்பவர்களுக்கு ரூ.1 லட்சம் சன்மானம் வழங்கப்படும் என்று காவல்துறை அறிவித்திருந்தது.
இந்த நிலையில், உத்தரப்பிரதேச மாநிலம் மீரட் மாவட்டம் முண்டலி பகுதியில் புதன்கிழமை அதிகாலை நடந்த போலீஸ் என்கவுண்டரில் குற்றவாளி ஜிதேந்திரா படுகாயமடைந்ததாக மூத்த காவல்துறை அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.
இது குறித்து உத்தரப்பிரதேச காவல்துறை சிறப்புப் படை கூடுதல் இயக்குநர் அமிதாப் யாஷ் கூறுகையில், காசியாபாத் கொள்ளை வழக்கில் ரூ.1 லட்சம் சன்மானம் அறிவிக்கப்பட்டு தேடப்பட்டு வந்த குற்றவாளி ஜிதேந்திரா, மீரட் மாவட்டம் முண்டலி பகுதியில் புதன்கிழமை காலை நடந்த போலீஸ் என்கவுண்டரில் சுட்டுப்பிடிக்கப்பட்டுள்ளார். இதில், காயமடைந்த ஜிதேந்திரா சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக தெரிவித்தார்.
2016 ஆம் ஆண்டு ஜஜ்ஜாரில் நடந்த இரட்டைக் கொலை வழக்கில் ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டு சிறையில் அடைக்கப்பட்ட ஜிதேந்திரா,2023 இல் பரோலில் வெளியே வந்தார்.
பின்னர், சிறைக்கு செல்லாமல் தலைமறைவாக இருந்து வந்த ஜிதேந்திரா, காஜியாபாத் மாவட்டம் டீலா மோர் பகுதியில் நடந்த கொலை வழக்கில் ஈடுபட்டதாக கூறப்படுகிறது.
சிறையில் இருந்தபோது லாரன்ஸ் பிஷ்னோய் கும்பலுடன் தொடர்பில் இருந்த ஜிதேந்திரா, பரோலில் வந்து தலைமறைவாகி அந்த கும்பலுடன் இணைந்து கொள்ளை, கொலையில் ஈடுபட்டு வந்துள்ளார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.