மருத்துவத்தில் உயர்ந்து நிற்கும் தமிழ்நாடு: முதல்வர் ஸ்டாலின் பேச்சு

திராவிட மாடல் அரசு என்பது, மக்களைக் காக்கக்கூடிய அரசு. அனைவருக்கும் அனைத்தும் கிடைக்க வேண்டும் என்பதுதான் இந்த அரசின் உயர்ந்த லட்சியம்.
தமிழகத்தில் அரசு மருத்துவமனை பணிகளுக்குத் தோ்வு செய்யப்பட்டுள்ள 2,642 மருத்துவா்களுக்கு புதன்கிழமை பணி நியமன ஆணைகளை வழங்கிய முதல்வா் மு.க.ஸ்டாலின்.
தமிழகத்தில் அரசு மருத்துவமனை பணிகளுக்குத் தோ்வு செய்யப்பட்டுள்ள 2,642 மருத்துவா்களுக்கு புதன்கிழமை பணி நியமன ஆணைகளை வழங்கிய முதல்வா் மு.க.ஸ்டாலின்.
Published on
Updated on
3 min read

தமிழகத்தில் அரசு மருத்துவமனை பணிகளுக்குத் தோ்வு செய்யப்பட்டுள்ள 2,642 மருத்துவா்களுக்கு புதன்கிழமை பணி நியமன ஆணைகளை வழங்கிய முதல்வா் மு.க.ஸ்டாலின், நாட்டின் மருத்துவத் தலைநகராக தமிழ்நாடு உயர்ந்து நிற்பதாக தெரிவித்தார்.

தமிழகத்தில் அரசு மருத்துவமனைகளில் காலியாக உள்ள பணியிடங்கள் மருத்துவப் பணியாளா் தோ்வு வாரியம் (எம்ஆா்பி) மூலம் நிரப்பப்பட்டு வருகின்றன. அதன்படி, 2,553 உதவி மருத்துவா் பணியிடங்களை நிரப்புவதற்காக கடந்த ஜன.5-ஆம் தேதி நடைபெற்ற தோ்வில், எம்பிபிஎஸ் படித்து முடித்த 24,000 மருத்துவா்கள் பங்கேற்றனா். அவா்களில் 14,855 போ் தோ்ச்சி பெற்றனா்.

இதனிடையே, கூடுதலாக 89 காலிப்பணியிடங்கள் கண்டறியப்பட்டதால், மொத்த காலிப் பணியிடங்களின் எண்ணிக்கை 2,642-ஆக அதிகரிக்கப்பட்டது.

இதையடுத்து, சான்றிதழ் சரிபாா்ப்புப் பணிகள் பிப்.12 தொடங்கி 15-ஆம் தேதி வரை நடைபெற்றது. இதில், 4,585 மருத்துவா்கள் பங்கேற்றனா். தொடா்ந்து, அவா்களுக்கு பணி நியமனத்துக்கான கலந்தாய்வு, சென்னை எழும்பூரில் உள்ள நலவாழ்வு மற்றும் குடும்பநல பயிற்சி நிலையத்தில் பிப்.22 தொடங்கி 24-ஆம் தேதி வரை நடைபெற்றது.

இந்த நிலையில், தோ்வு செய்யப்பட்டுள்ள மருத்துவா்களுக்கு பணிநியமன ஆணைகள் வழங்கும் விழா, சென்னை திருவான்மியூரில் உள்ள ஸ்ரீ ராமச்சந்திரா கன்வென்ஷன் சென்டரில் புதன்கிழமை காலை 10 மணி நடைபெற்றது. இதில் பங்கேற்ற முதல்வா் மு.க.ஸ்டாலின், மருத்துவா்களுக்கு பணிநியமன ஆணைகளை வழங்கி உரையாற்றினார்.

அப்போது, திராவிட மாடல் அரசு என்பது, மக்களைக் காக்கக்கூடிய அரசு. அனைவருக்கும் அனைத்தும் கிடைக்க வேண்டும் என்பதுதான் இந்த அரசின் உயர்ந்த லட்சியம். எத்தனை தடைகள் வந்தாலும் சரி, எப்படிப்பட்ட நெருக்கடிகள் வந்தாலும் சரி, அதையெல்லாம் எதிர்கொண்டு தன் பணியை மேற்கொண்டு வருகின்றது நம்முடைய திராவிட மாடல் அரசு.

இங்கே 2500 பேருக்கு வழங்கப்பட்டுள்ள பணி ஆணைகளும், சட்ட நெருக்கடிகளைக் கடந்துதான் வழங்கப்படுகிறது என்பது உங்களுக்கு நன்றாகத் தெரியும்.

மருத்துவத்தில் உயர்ந்து நிற்கும் தமிழ்நாடு

உயிர்காக்கக்கூடிய மருத்துவர்களை, மக்கள் மிகவும் உயர்வாக பார்க்கிறார்கள். தமிழ்நாடு இன்றைக்கு நாட்டின் மருத்துவத்

தலைநகராக உயர்ந்து நிற்பதற்கு காரணம் முத்தமிழறிஞர் கலைஞர் உருவாக்கிய மருத்துவ கட்டமைப்புகள்தான்.

மாவட்டங்கள் தோறும் மருத்துவக் கல்லூரிகள், நகரங்கள் தோறும் அரசு மருத்துவமனைகள், கிராமங்கள் தோறும் ஆரம்ப சுகாதார நிலையங்கள், பெரிய நகரங்களில் பன்னோக்கு மருத்துவமனைகள், உயிர்காக்கும் மருத்துவக் காப்பீட்டுத் திட்டம், 108 ஆம்புலன்ஸ் சேவை என்று கலைஞர் உருவாக்கிய கட்டமைப்புதான் மருத்துவ சேவையில் தமிழ்நாட்டை இந்த அளவுக்கு உயர்த்தியிருக்கிறது.

இந்தக் கட்டமைப்பு சரியான முறையில் செயல்படவேண்டும் என்றால், நிச்சயமாக அதற்கேற்றது போல நம்முடைய மருத்துவர்கள் தேவை. அதுவும் அரசாங்க மருத்துவமனைக்கு வரக்கூடிய ஏழை, எளிய கிராமப்புற நோயாளிகளை, கர்ப்பிணிப் பெண்களை, குழந்தைகளின் உடல் நோய்களை மட்டுமல்ல, அவர்களின் மனநிலை, புறச்சூழல் இதையும் புரிந்துகொள்ளக் கூடிய மருத்துவர்கள்

தேவை. கிராமத்திலிருந்தும், சின்னச் சின்ன நகரங்களிலிருந்தும் டாக்டர்கள் உருவானால்தான் அனைத்துத் தரப்பு மக்களுக்கும் நல்ல முறையில் சிகிச்சை கிடைக்கும்.

அதைப் புரிந்துகொண்டுதான், முதல் தலைமுறை பட்டதாரிகளின் மருத்துவப் படிப்புக்கான கல்விக் கட்டணத்தை அரசாங்கமே ஏற்றுக்கொள்ளும் என்கிற மகத்தான திட்டத்தைக் கொண்டு வந்தவர் கலைஞர்.

இன்றைக்கு சிறிய, சிறிய நகரங்களிலிருந்தும் கூட, இத்தனை மருத்துவர்கள் உருவாகி இருக்கிறீர்கள் என்றால் அதற்கெல்லாம் வித்திட்டவர் கலைஞர். அவரது வழியில், திராவிட மாடல் அரசு மருத்துவக் கட்டமைப்பை இந்திய அளவில் மட்டுமல்ல, உலக அளவில் அனைவரும் பாராட்டக்கூடிய அளவில் இன்றைக்கு நாம் உருவாக்கியிருக்கிறோம்.

மக்களைத் தேடி மருத்துவத் திட்டம் தமிழ்நாட்டில் இருக்கக்கூடிய கோடிக்கணக்கான மக்களின் நலனில் அக்கறை செலுத்தி, அவர்களின் வாழ்நாளை நீட்டித்து இருக்கிறது.

“இன்னுயிர் காப்போம் நம்மைக் காக்கும் 48” பல உயிர்களைக் காப்பாற்றி, அவர்களையும், அவர்களின் குடும்பத்தினரையும் நிம்மதியாக வாழ வைத்துக்கொண்டு இருக்கிறது.

மருத்துவர்களின் பங்களிப்புதான் முக்கியம்

இரண்டு நாள்களுக்கு முன்பு, தமிழ்நாட்டில் 1000 முதல்வர் மருந்தகங்கள் திறக்கப்பட்டிருக்கிறது. மக்களுக்கு அவசியமான தேவைப்படும் மருந்துகள் மிகவும் மலிவான விலையில் கிடைக்கத்தான் முதல்வர் மருந்தகங்கள் இன்றைக்கு இயங்கிக் கொண்டிருக்கிறது. இந்த மாநிலத்தில் இருக்கும் ஒவ்வொருவருக்கும் உரிய சிகிச்சை கிடைக்கவேண்டும், அவர்கள் நோய் குணமாகி, நல்லபடியாக வாழ வேண்டும் என்று திராவிட மாடல் அரசு பல திட்டங்களை கொண்டு வந்தாலும், அதையெல்லாம் செயல்படுத்த வேண்டும் என்றால், உங்களைப் போன்ற மருத்துவர்களின் பங்களிப்புதான் அதில் மிக மிக முக்கியம்.

நீங்கள் இல்லாமல் இந்த திட்டங்கள் இல்லை

மருத்துவர்களான நீங்கள் இல்லாமல் நிச்சயமாக சொல்கிறேன், இந்தத் திட்டங்கள் எல்லாம் இல்லை. மருத்துவத் துறையின் மற்ற பணியாளர்கள் இல்லாமல் இந்தத் திட்டங்கள் நிறைவேறப் போவதில்லை, வெற்றியும் கிடைக்கப் போவதில்லை.

நீங்கள் செய்யப்போவது சாதாரண பணியோ, வேலையோ அல்ல. மக்களின் உயிர் காக்கும் சேவை. சமுதாயத்திற்கான மிகப் பெரிய தொண்டு. இந்த இடத்தை அடைய நீங்கள் எத்தனையோ இரவுகள் கண் விழித்திருப்பீர்கள். பொருளாதார நெருக்கடிகளை சந்தித்து இருப்பீர்கள். எல்லாவற்றையும் கடந்துதான் இங்கே நீங்கள் எல்லாம் வந்திருக்கிறீர்கள். உங்கள் எல்லோருக்கும் வாழ்த்துகள்.

மக்கள் நலனை கவனியுங்கள்!

இனி, மக்கள் உங்களை நம்பி தங்கள் உயிர் காக்கும் பொறுப்பை ஒப்படைக்க இருக்கிறார்கள். அவர்கள் நம்பிக்கையை நிறைவேற்றுகின்ற அளவுக்கு, உங்களுடைய சேவை அமையவேண்டும். மக்களின் நலனை நீங்கள் கவனியுங்கள்; மறுபடியும் சொல்கிறேன், மக்களுடைய நலனை நீங்கள் கவனியுங்கள். உங்கள் நலனை கவனிக்க, இந்த அரசு இருக்கிறது. மீண்டும், மீண்டும் சொல்கிறேன்; மக்களுடைய நலனை நீங்கள் கவனியுங்கள்; உங்களுடைய நலனை கவனிக்க இந்த திராவிட மாடல் அரசு இருக்கிறது.

உயிர்களைக் காக்கும் தொண்டாற்றப் போகும் உங்களுக்குத் தேவையான, எது எது அவசியம் தேவைப்படுகிறதோ அதையெல்லாம் நிச்சயம் செய்வேன் என்று கூறினார்.

நிகழ்ச்சியில் மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சா் மா.சுப்பிரமணியன், நாடாளுமன்ற உறுப்பினர் தமிழச்சி தங்கபாண்டியன், சட்டப்பேரவை உறுப்பினர் அசன் மௌலானா மற்றும் துறை அதிகாரிகள் பங்கேற்றனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com