புதுக்கோட்டை மாவட்டம், தச்சன்குறிச்சியில் மாநிலத்தின் முதல் ஜல்லிக்கட்டுப் போட்டி சனிக்கிழமை தொடங்கியது. ஜல்லிக்கட்டுப் போட்டியை அமைச்சர்கள் எஸ்.ரகுபதி, சிவ.வீ.மெய்யநாதன் கொடியசைத்து தொடங்கி வைத்தனர்.
கந்தா்வகோட்டை அருகேயுள்ள தச்சன்குறிச்சி கிராமத்தில் ஆண்டுதோறும் மாநிலத்தின் முதல் ஜல்லிக்கட்டுப் போட்டி நடைபெறுவது வழக்கம். இதன்படி, நிகழாண்டுக்கான முதல் போட்டியை இங்கு ஜனவரி 4-ஆம் தேதி நடத்த விழாக் குழுவினா் மாவட்ட நிா்வாகத்திடம் ஏற்கெனவே மனு அளித்து ஏற்பாடுகளையும் செய்து வந்தனா்.
இதைத் தொடா்ந்து, மாவட்ட ஆட்சியா் மு. அருணா, தச்சன்குறிச்சிக்கு வெள்ளிக்கிழமை வந்து வாடிவாசல் மற்றும் காளைகள் ஓடுதளம், காளைகளை வாடிவாசலுக்கு அழைத்து வரும் வழி, மருத்துவ குழுவினரின் இருப்பிடம் மற்றும் பாா்வையாளா்களின் மாடம் உள்ளிட்ட ஏற்பாடுகள் அரசின் வழிகாட்டு நெறிமுறைகளை பின்பற்றி அமைக்கப்பட்டுள்ளதா என்று ஆய்வு செய்து, குறைபாடுகளை நிவா்த்தி செய்வது தொடா்பாக பல்வேறு அறிவுறுத்தல்களையும் வழங்கினாா். தொடா்ந்து ஜல்லிக்கட்டுக்கான அனுமதியையும் அவா் வழங்கினாா்.
இந்த நிலையில், தச்சன்குறிச்சியில் தமிழகத்தின் முதல் ஜல்லிக்கட்டு போட்டியை சட்டத்துறை அமைச்சர் எஸ்.ரகுபதி, பிறப்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சர் சிவ.வீ.மெய்யநாதன் ஆகியோர் தலைமை வகித்து கொடியசைத்து தொடங்கி வைத்தனர்.
முன்னதாக, மாவட்ட ஆட்சியர் மு.அருணா உறுதிமொழி வாசிக்க மாடுபிடி வீரர்கள் உறுதிமொழி எடுத்து கொண்டனர்.
முன்னதாக மாவட்ட ஆட்சியர் மு.அருணா உறுதிமொழி வாசித்தார், மாடுபிடி வீரர்கள் உறுதிமொழியை எடுத்துக் கொண்டு காளைகளை அடக்கி வருகின்றனர்.
இந்த ஜல்லிக்கட்டு போட்டியில் தமிழகத்தின் பல்வேறு பகுதியில் இருந்து சுமார் 600 ஜல்லிக்கட்டு காளைகளும், அதனை அடக்குவதற்காக மாடுபிடி வீரர்கள் சுமார் 300 பேரும் கலந்து கொண்டுள்ளனர்.
புதுநகர் வட்டார மருத்துவ அலுவலர் ரஜ்ஜித் குமார் தலைமையில் மருத்துவக் குழுவினர் முதலுதவி சிகிச்சை வழங்கி வருகின்றனர்.
கால்நடைத் துறை மருத்துவர் மகேஸ்வரன் தலைமையிலான குழுவினர் ஜல்லிக்கட்டு காளைகளை பரிசோதித்து வருகின்றனர்.
மேலும் இந்த ஜல்லிக்கட்டு போட்டியை காண தமிழகத்தின் பல்வேறு பகுதியில் இருந்து சுமார் 10,000 மேற்பட்ட பார்வையாளர்கள் கலந்து கொண்டுள்ளனனர்.
விழாவில் புதுக்கோட்டை கோட்டாட்சியர் பா.ஐஸ்வர்யா, திமுக வடக்கு மாவட்ட செயலாளர் கே.கே.செல்லபாண்டியன், கூடுதல் துணை கண்காணிப்பாளர் சுப்பையா தலைமையில் துணை காவல் கண்காணிப்பாளர் அப்துல் ரகுமான், கந்தர்வகோட்டை காவல் ஆய்வாளர் கோ.சுகுமார் உள்ளிட்ட 350-க்கும் மேற்பட்ட காவலர்கள் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டு வருகின்றனர். வட்டாட்சியர் எஸ்.விஜயலட்சுமி, வருவாய் ஆய்வாளர் ராஜேந்திரகுமார் ஆகியோர் உடனிருந்தனர்.
தீயணைப்புத் துறை (பொ) நிலைய அலுவலர் மகேந்திரன் தலைமையிலான தீயணைப்பு வீரர்களும் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளில் ஈடுபட்டுள்ளனர்.