மார்க்சிஸ்ட் புதிய மாநில செயலாளர்! யார் இந்த பெ. சண்முகம்?

விழுப்புரத்தில் நடைபெற்று முடிந்த மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் 24-ஆவது மாநில மாநாட்டில் அந்த கட்சியின் மாநிலச் செயலாளராக பெ. சண்முகம் ஏகமனதாக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார்.
மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் பெ. சண்முகம்.
மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் பெ. சண்முகம்.
Published on
Updated on
1 min read

விழுப்புரத்தில் நடைபெற்று முடிந்த மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் 24-ஆவது மாநில மாநாட்டில் அந்த கட்சியின் மாநிலச் செயலாளராக பெ. சண்முகம் ஏகமனதாக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார். அவருக்கு அரசியல் கட்சி தலைவர்கள் பலரும் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.

மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளராக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள பெ. சண்முகம் யார் என்பது குறித்து பார்ப்போம்.

திருச்சி, லால்குடி, பெருவளநல்லூர் கிராமத்தில் 1960 ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் 6 ஆம் தேதி பெ.சண்முகம் பிறந்தார். 1979 ஆம் ஆண்டு‌ மாணவர் சங்கத்தில் இணைந்தார். அப்போதிருந்தே‌ தீவிர மாணவர் அரசியலில் இயங்கியவர்.

தற்போதைய சிவகங்கை மாவட்டம் காரைக்குடியில், ராமசாமி தமிழ் கல்லூரியில் படித்தார்.

இந்திய மாணவர்‌ சங்கத்தின் மாநில தலைவர், செயலாளர் என முன்னணி பொறுப்புகளில் வழிநடத்தினார்.

சிபிஐ(எம்) இயக்கத்தின் முழுநேர ஊழியராக செயல்பட்ட பெ.சண்முகம், 1992 ஆம் ஆண்டு உருவான மலைவாழ் மக்கள் சங்கத்தின் முதல் பொதுச் செயலாளராக தேர்வானார்.

தமிழ்நாட்டின் வரலாற்றில் பதிவான ஒப்பற்ற வாச்சாத்தி போராட்டத்தை 30 ஆண்டுகள் வழிநடத்தி வென்று காட்டிய முன்னணி தலைவர்களில் ஒருவர்.

தமிழ்நாடு விவசாயிகள் சங்கத்தின் மாநில பொதுச் செயலாளராக 13 ஆண்டுகள், 2020 முதல் மாநில தலைவராக செயல்படுகிறார்.

பழங்குடி மக்களின் சாதிச் சான்று‌ கோரிய போராட்டங்களிலும், அனைத்து விதமான‌ நிலவுரிமை போராட்டங்களிலும் முன்ணனியில் போராடும் களப் போராளி.

பழங்குடியினர் நிலவுரிமை போராட்டம் முன்னெடுத்து, 2006 நவம்பர் 24 அன்றைய பிரதமர் மன்மோகன் சிங் சந்தித்த பின்னரே வரலாற்றுச் சிறப்புமிக்க வனவுரிமை சட்டம் சாத்தியமானது.

மோடி ஆட்சிக்கு எதிராக வரலாற்று சிறப்புமிக்க விவசாயிகள் போராட்டத்தை தமிழ்நாட்டிலிருந்து பல்லாயிரம் விவசாயிகளை தலைமையேற்று வழிநடத்திய கள நாயகர்.

பெ.சண்முகத்தின் சமூகப் பணிகளை பாராட்டி தமிழக அரசு அண்ணல் அம்பேத்கர் விருது வழங்கி கௌரவித்துள்ளது.

பொது நிகழ்ச்சிகளில் தோளில் சிவப்பு துண்டு அணிவதை வழக்கமாக கொண்ட சண்முகம், வழக்கு ஒன்றில் ஆஜராவதற்காக நாமக்கல் நீதிமன்றம் சென்றபோது துண்டை தோளில் இருந்து எடுக்குமாறு கூறினர். அப்போது இடுப்பில் இருந்த துண்டும் தோளில் ஏறியதற்கு மூதாதையர்களின் போராட்டமும், உயிர்த்தியாகமும் தான் காரணம் என தெரிவித்தவர், நீதிபதியே கூறியிருந்தாலும் நான் தோளிலில் இருந்து துண்டை எடுக்க மாட்டேன் என உறுதியோடு தெரிவித்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.

சிபிஐ(எம்) மத்திய குழு உறுப்பினராக இருந்த பெ.சண்முகம் ஞாயிற்றுக்கிழமை(ஜன.5) விழுப்புரத்தில் நடந்து முடிந்த 24 வது மாநில மாநாட்டில் கட்சியின் மாநில செயலாளராக தேர்வாகியுள்ளார். அவருக்கு மனைவி, திருமணமான 2 மகன்கள், பேத்திகள் உள்ளனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.