புதிய இஸ்ரோ தலைவர் வி. நாராயணன் யார்?

இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனத்தின் (இஸ்ரோ) 11-ஆவது தலைவராக தமிழகத்தைச் சேர்ந்த வி.நாராயணன் செவ்வாய்க்கிழமை நியமிக்கப்பட்டுள்ளார்.
இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனத்தின் (இஸ்ரோ) 11-ஆவது தலைவர் வி.நாராயணன்
இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனத்தின் (இஸ்ரோ) 11-ஆவது தலைவர் வி.நாராயணன்
Published on
Updated on
2 min read

இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனத்தின் (இஸ்ரோ) 11-ஆவது தலைவராக தமிழகத்தை சேர்ந்த வி.நாராயணன் செவ்வாய்க்கிழமை நியமிக்கப்பட்டுள்ளார்.

இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனம் வளர்ந்த நாடுகளுக்கு சவால் விடும் வகையில் பல்வேறு சாதனைகளை படைத்து வரும் நிலையில் மீண்டும் ஒரு தமிழரான வி.நாராயணன் இஸ்ரோ தலைவராக நியமிக்கப்பட்டுள்ளார்.

தற்போதைய இஸ்ரோ தலைவா் எஸ்.சோம்நாத்துக்குப் பிறகு இஸ்ரோவின் அடுத்த தலைவராக டாக்டர் வி. நாராயணன் ஜன.14-ஆம் தேதி பொறுப்பேற்கிறாா். இவா் அடுத்த 2 ஆண்டுகளுக்கு இந்த பதவியில் இருப்பாா்.

இஸ்ரோவில் புகழ்பெற்ற விஞ்ஞானியான வி. நாராயணன் தமிழகத்தின் கன்னியாகுமரி மாவட்டத்தைச் சோ்ந்தவர். இஸ்ரோவின் முக்கிய மையங்களில் ஒன்றான திருவனந்தபுரம், வலியமலையில் அமைந்த இஸ்ரோவின் திரவ உந்து அமைப்பு மையத்தின் (எல்பிஎஸ்சி) இயக்குநரான வி.நாராயணன், கரக்பூா் ஐஐடி-இல் பட்டம் பெற்றவா்.

1984 இல் இஸ்ரோவில் சேர்ந்த இவர், இந்திய விண்வெளித் துறையில் கிட்டத்தட்ட 40 ஆண்டுகால கால அனுபவமுள்ள ஒரு புகழ்பெற்ற விஞ்ஞானி. ராக்கெட் மற்றும் விண்கல திரவ உந்துவிசையில் நிபுணத்துவம் பெற்றவர். நிறுவனத்திற்குள் பல முக்கிய பதவிகளை வகித்துள்ளார்.

ஆரம்ப கட்டத்தில், விக்ரம் சாராபாய் விண்வெளி மையத்தில் ஒலி ராக்கெட்டுகள் மற்றும் ஆக்மென்டட் சேட்டிலைட் ஏவுதளம் மற்றும் துருவ செயற்கைக்கோள் ஏவுதளம் ஆகியவற்றின் திட உந்துவிசை பகுதியில் பணியாற்றினார்.

வி. நாராயணன் இஸ்ரோவின் பிஎஸ்எல்வி சி57, சூரியன் ஆய்வுக்கான ஆதித்யா எல்1 திட்டம், ஜிஎஸ்எல்வி மாக்-3 வகை ஏவுகணைக்கான ‘சிஇ20 கிரையோஜெனிக்’ என்ஜின் தயாரிப்பு, சந்திரயான் 2 மற்றும் 3 உள்ளிட்ட பல திட்டங்களில் குறிப்பிடத்தக்க பங்களிப்பை அளித்துள்ளாா்.

நாராயணன் தலைமையிலான எல்பிஎஸ்சி குழு, இஸ்ரோவின் பல்வேறு திட்டங்களுக்கு 183 திரவ உந்துவிசை திட்டம் மற்றும் கட்டுப்பாட்டு அமைப்புகளை வழங்கி உள்ளது.

இஸ்ரோ சமீபத்தில் சந்திரயான் 4 மற்றும் ககன்யான் போன்ற லட்சியத் திட்டங்களுக்கு முக்கியமாக உள்நாட்டிலேயே உருவாக்கப்பட்ட விண்வெளி டாக்கிங் தொழில்நுட்பமான ஸ்பேடெக்ஸை அறிமுகப்படுத்தியதற்காக இஸ்ரோ தலைப்புச் செய்திகளில் இடம்பிடித்தது. இது சந்திரயான் 4 (ஒரு சந்திர திட்டம்) மற்றும் ககன்யான் (இந்தியாவின் மனித விண்வெளிப் பயணத் திட்டம்) போன்ற லட்சிய எதிர்கால திட்டங்களுக்கு அவசியமானது. இந்த சாதனை, அமெரிக்கா, ரஷியா மற்றும் சீனா உள்ளிட்ட மேம்பட்ட தொழில்நுட்பத்தைக் கொண்ட தேர்ந்தெடுக்கப்பட்ட நாடுகளின் உயரடுக்கு பட்டியலில் இந்தியாவை இடம்பிடிக்கச் செய்துள்ளது.

வி.நாராயணனின் பணிக்கு ஐஐடி கரக்பூரின் வெள்ளிப் பதக்கம், இந்திய விண்வெளி சங்கம் (ஏஎஸ்ஐ) தங்கப் பதக்கம் மற்றும் தேசிய பேரிடர் மீட்புப் படையின் (என்டிஆர்எஃப்) தேசிய வடிவமைப்பு விருது உள்ளிட்ட ஏராளமான பாராட்டுகளை பெற்றுள்ளார்.

இஸ்ரோவில் தமிழர்கள்

இஸ்ரோவில் தமிழர்கள் முக்கிய பங்காற்றி வருகின்றனர். ‘ரோகிணி-2’ செயற்கைக்கோளை ஏவிய மறைந்த முன்னாள் குடியரசுத் தலைவர் அப்துல் கலாம், ராக்கெட்டுக்களுக்கான திட எரிபொருள் ஆராய்ச்சியில் அவரது பங்கு முக்கியமானது.

இவரைத் தொடர்ந்து சந்திரயான்-1, மங்கள்யான் செயற்கைக்கோள்களுக்கான திட்ட இயக்குநராக மயில்சாமி அண்ணாதுரை பணியாற்றினார்.

ஜிசாட்-12 பணியின் திட்ட இயக்குநராக ந.வளர்மதி, இஸ்ரோ தலைவராக கன்னியாகுமரி மாவட்டத்தைச் சேர்ந்த கே.சிவன், இவரது பதவி காலத்தில் தான் முதன் முதலாக சந்திரயான் நிலவுக்கு அனுப்பப்பட்டது. சந்திரயான் - 2 பணியின் திட்ட இயக்குநராக வனிதா முத்தையா பணியாற்றினார்.

சூரியனை ஆராயும் ஆதித்யா-எல்1 திட்ட இயக்குநராக நிகர் ஷாஜி, நிலவின் தென் துருவத்தைச் சென்றடைந்த முதல் நாடு என்கிற பெருமைக்குரிய சந்திரயான் - 3 திட்டத்தின் இயக்குநராக பி.வீரமுத்துவேல் என பல தமிழர்கள் சாதனை படைத்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.