உலக நாடுகளுக்கு அளித்து வந்த நிதியுதவிகள் நிறுத்தம்: டிரம்ப் அதிரடி

வெளிநாட்டு மேம்பாட்டு உதவியை நிறுத்தி வைப்பதன் மூலம், டிரம்ப் நிர்வாகம் நெருக்கடியில் உள்ள சமூகங்களின் வாழ்க்கையையும் எதிர்காலத்தையும் அச்சுறுத்துகிறது
அதிபர் டொனால்ட் டிரம்ப்
அதிபர் டொனால்ட் டிரம்ப் Center-Center-Chennai
Published on
Updated on
1 min read

வாஷிங்டன்: உலகின் பல்வேறு நாடுகளுக்கு சுகாதாரம், கல்வி, மேம்பாடு, வேலைவாய்ப்பு பயிற்சி, ஊழல் எதிர்ப்பு, பாதுகாப்பு உதவி உள்ளிட்ட அனைத்து அமெரிக்க உதவித் திட்டங்களுக்கான நிதியுதவியை நிறுத்துமாறு அதிபர் டொனால்ட் டிரம்ப் உத்தரவிட்டுள்ளார். இருப்பினும் அவசர உணவு வழங்குவதற்கான திட்டத்துக்கும் விலக்கு அளிக்கப்பட்டுள்ளது.

டிரம்ப் கையெழுத்திட்ட இந்த உத்தரவை அந்தந்த நாடுகளில் உள்ள அமெரிக்க தூதரகங்கள் நடைமுறைப்படுத்த வேண்டும் என வெள்ளிக்கிழமை அமெரிக்க வெளியுறவுத்துறை அமைச்சகம் மூலம் உத்தரவிடப்பட்டுள்ளதாக வெளியுறவுத்துறை செயலாளர் மார்கோ ரூபியோ தெரிவித்துள்ளார்.

பொருளாதார ரீதியாக மிகவும் பின்தங்கிய பல்வேறு நாடுகளுக்கு அமெரிக்கா ஆண்டுதோறும் நிதி உதவி அளித்து வருகிறது. வேறு எந்த நாடுகளையும் விட அதிக நிதி உதவியை அமெரிக்கா வழங்கி வருகிறது. இதற்காக அமெரிக்கா தனது நிதிநிலை அறிக்கையில் குறிப்பிட்ட அளவு நிதியை ஒதுக்கி வருகிறது.

கடந்த 2023-இல் இந்திய மதிப்பில் சுமார் ரூ.5.17 லட்சம் கோடி (60 பில்லியன் டாலர்) அல்லது அந்த நாட்டின் நிதிநிலை அறிக்கையில் சுமார் 1 சதவிகிதம் ஒதுக்கியது.

இந்த நிலையில், சுகாதாரம், கல்வி, மேம்பாடு, வேலைவாய்ப்பு பயிற்சி, ஊழல் எதிர்ப்பு, பாதுகாப்பு உதவி உள்ளிட்ட திட்டங்களுக்காக அமெரிக்கா வழங்கி வந்த கோடிக்கணக்கான நிதி உதவியை உடனடியாக நிறுத்துமாறு அதிபர் டிரம்ப் உத்தரவிட்டிருப்பதால், பல நாடுகள் கவலை அடைந்துள்ளன.

எனினும், இஸ்ரேல் மற்றும் எகிப்துக்கான அவசர உணவுத் திட்டங்கள் மற்றும் ராணுவ உதவிகளுக்கு விதிவிலக்கு அளிக்கப்பட்டுள்ளது.

மேலும், போரினால் சூடான் உள்ளிட்ட நாடுகளில் பஞ்சத்தில் இருக்கும் பல லட்சம் மக்களுக்கு உணவு வழங்குவதற்கான திட்டத்துக்கு விலக்கு அளிக்கப்பட்டுள்ளது.

ஆனால் மருத்துவமனைகள் மற்றும் நோய்த்தடுப்பு திட்டங்கள் போன்ற உயிர்காக்கும் சுகாதாரத் திட்டங்களுக்கு விலக்கு அளிக்காதது ஏமாற்றத்தை அளிப்பதாக மனிதாபிமான உதவித் திட்டங்களுக்கான அதிகாரிகள் வேதனை தெரிவித்துள்ளனர்.

உலகளவில் பாராட்டப்பட்ட எச்ஐவி எதிர்ப்புத் திட்ட நிவாரணத்திற்கான அதிபரின் அவசரகால நிதியுதவி திட்டமும் நிறுத்தப்பட இருக்கிறது.

2003 ஆம் ஆண்டு குடியரசுக் கட்சியைச் சேர்ந்த முன்னாள் அதிபர் ஜார்ஜ் டபிள்யூ. புஷ் இந்த திட்டத்தை தொடங்கி வைத்தார். அதிலிருந்து, இந்த திட்டத்தின் மூலம் 55 லட்சம் குழந்தைகளின் உயிர்கள் உள்பட 2.5 கோடி உயிர்கள் காப்பாற்ய பெருமைக்குரிய திட்டமாகும்.

நிதியை நிறுத்துவது உலம் முழுவதும் உள்ள குழந்தைகள் மற்றும் குடும்பங்களுக்கு "வாழ்க்கை அல்லது இறப்பு விளைவுகளை ஏற்படுத்தக்கூடும்" என்று ஆக்ஸ்பாம் அமெரிக்காவின் தலைவர் அப்பி மேக்ஸ்மேன் கூறினார்.

வெளிநாட்டு மேம்பாட்டு உதவியை நிறுத்தி வைப்பதன் மூலம், டிரம்ப் நிர்வாகம் நெருக்கடியில் உள்ள சமூகங்களின் வாழ்க்கையையும் எதிர்காலத்தையும் அச்சுறுத்துகிறது என்று மேக்ஸ்மேன் ஒரு அறிக்கையில் தெரிவித்துள்ளார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com