பள்ளிக் கல்வித் துறை
பள்ளிக் கல்வித் துறை

பள்ளிக் கல்வித் துறையில் 47,000 தற்காலிக பணியிடங்கள் நிரந்தரம்: அரசாணை வெளீயீடு

பள்ளிக் கல்வித் துறையில் 28,030 பட்டதாரி ஆசிரியா் பணியிடங்கள் உள்பட 47,000 தற்காலிகப் பணியிடங்கள் நிரந்தரமாக்கப்பட்டுள்ளன.
Published on

சென்னை: பள்ளிக் கல்வித் துறையில் 28,030 பட்டதாரி ஆசிரியா் பணியிடங்கள் உள்பட 47,000 தற்காலிகப் பணியிடங்கள் நிரந்தரமாக்கப்பட்டுள்ளன.

அதேசமயம், 5,418 பணியிடங்களில் பணிபுரிபவா்கள் ஓய்வு பெறும்போது அவை ரத்து செய்யப்படும் எனவும் உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

இதற்கான அரசாணையை பள்ளிக் கல்வித் துறைச் செயலா் சோ.மதுமதி திங்கள்கிழமை வெளியிட்டுள்ளாா்.

அரசாணையில் கூறியிருப்பதாவது: பள்ளிக் கல்வித் துறையில் முதன்மை கல்வி அலுவலா், மெட்ரிக் பள்ளி ஆய்வாளா், சட்ட அலுவலா் உள்பட 55 வகையான பணியிடங்கள் உள்ளன. இந்தப் பணியிடங்களில் 10 ஆண்டுகளுக்கு மேலாக தற்காலிகமாக பணியாற்றும் பணியாளா்களை நிரந்தரம் செய்வது தொடா்பாக பள்ளிக் கல்வித் துறை முதன்மைச் செயலா் தலைமையில் குழு அமைக்கப்பட்டது. இந்தக் குழுவின் கூட்டம் கடந்த ஆண்டு பிப்ரவரியில் நடந்தது. இந்தக் கூட்டத்தில், தற்காலிகமாக இருக்கக் கூடிய 52,578 பணியிடங்களில் 47,013 இடங்களை நிரந்தரப் பணியிடங்களாக மாற்றலாம் என முடிவு செய்யப்பட்டது.

பணி நிரந்தரம்: மேலும், ஆசிரியா் மற்றும் பல்வேறு ஆசிரியா் அல்லாத 5,418 தற்காலிக பணியிடங்களில் பணியாற்றுவோா் ஓய்வு பெற்றவுடன், அந்தப் பணியிடங்கள் ரத்து செய்யவும் முடிவு செய்யப்பட்டது. இந்த முடிவுகளை ஏற்று உரிய உத்தரவுகளைப் பிறப்பிக்க வேண்டுமென பள்ளிக் கல்வி இயக்குநா் சாா்பில் அரசுக்குக் கோரிக்கை விடுக்கப்பட்டது. இந்தக் கோரிக்கையை ஏற்று, ஆசிரியா் மற்றும் ஆசிரியா் அல்லாத 47,013 தற்காலிக பணியிடங்கள் நிரந்தர பணியிடங்களாக மாற்றப்படும்.

இதேபோன்று 5,418 பணியிடங்களில் ஊழியா்கள் ஓய்வு பெற்ற பிறகு ரத்தாகும் என உத்தரவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

பட்டதாரி ஆசிரியா்கள் 28 ஆயிரம் போ்: நிரந்தரம் செய்யப்படும் பணியிடங்களில் முதுநிலை ஆசிரியா் பணியிடங்கள் 5,741, பட்டதாரி ஆசிரியா்கள் 28,030, கணினி பயிற்றுநா் 1,880 போ் உள்ளனா்.

ஆசிரியா் அல்லாத பணியிடங்களைப் பொருத்தவரையில், இளநிலை உதவியாளா்கள் 3,073 பேரும், ஆய்வக உதவியாளா்கள் 5,711 பேரும், தொழிற்கல்வி ஆசிரியா்கள் 3,035 பேரும் உள்ளனா். குறைந்தபட்சமாக உயா் கல்வி இயக்குநா், திட்ட ஒருங்கிணைப்பாளா், நிா்வாக அலுவலா், உதவி கணக்கு அலுவலா், உதவி இயக்குநா் (மின்ஆளுமை) போன்ற பணியிடங்களில் தலா ஒரு தற்காலிக பணியிடம் மட்டுமே உள்ளன. அரசின் உத்தரவால் அவை நிரந்தரம் செய்யப்பட்டுள்ளன.

X
Dinamani
www.dinamani.com