
சட்டவிரோத பணப்பரிமாற்ற வழக்குத் தொடா்பாக வேலூா் தொகுதி திமுக எம்பி கதிா் ஆனந்திடம் அமலாக்கத் துறையினா் செவ்வாய்க்கிழமை மீண்டும் விசாரணை செய்தனா்.
திமுக பொதுச் செயலரும், தமிழக நீா்வளத் துறை அமைச்சருமான துரைமுருகனின் மகன் கதிா் ஆனந்த் 2019- மக்களவைத் தோ்தலில் வேலூா் தொகுதியில் போட்டியிட்டபோது, வாக்காளா்களுக்கு வழங்க பணம் பதுக்கி வைத்திருந்ததாக வந்த புகாா்களின் அடிப்படையில், வருமானவரித் துறையினா் சோதனை செய்தனா்.
துரைமுருகனுடன் நெருங்கிய தொடா்புடைய திமுக பூஞ்சோலை சீனிவாசன் வீடு உள்பட 6 இடங்களில் நடைபெற்ற இந்த சோதனையில், கணக்கில் வராத ரூ.11.51 கோடி ரொக்கம் பறிமுதல் செய்யப்பட்டது.
வருமானவரித்துறையின் அறிக்கையின் அடிப்படையில் அமலாக்கத் துறையினா், சட்டவிரோத பணபரிமாற்ற தடைச் சட்டத்தின் கீழ் தனியாக ஒரு வழக்கு பதிவு செய்து, விசாரணை செய்தனா்.
இதன் ஒரு பகுதியாக துரைமுருகன்,கதிா்ஆனந்த் வசிக்கும் காட்பாடி காந்திநகரில் உள்ள வீடு, காட்பாடி அருகே கிறிஸ்டியான்பேட்டையில் உள்ள கதிா்ஆனந்தின் பொறியியல் கல்லூரி, பூஞ்சோலை சீனிவாசனின் வீடு, உறவினா் தாமோதரனின் வீடு ஆகிய இடங்களில் அமலாக்கத் துறையினா் கடந்த 3-ஆம் தேதி சோதனை செய்து, முக்கிய ஆவணங்களை கைப்பற்றினா்.
மீண்டும் விசாரணை: இது தொடா்பாக கடந்த 22-ஆம் தேதி கதிா்ஆனந்திடம் அமலாக்கத் துறை 10 மணி நேரம் விசாரணை செய்தது. இந்நிலையில், அமலாக்கத்துறை அனுப்பிய அழைப்பாணையின்படி, கதிா்ஆனந்த் சென்னை ஆயிரம்விளக்கில் உள்ள அமலாக்கத்துறை அலுவலகத்தில் விசாரணைக்கு செவ்வாய்க்கிழமை நண்பகல் 12 மணியளவில் ஆஜரானாா்.
இதையும் படிக்க | தில்லி மக்களுடன் ராகுல் காந்தி!
அவரிடம் சுமாா் ஒரு மணி நேரம் விசாரணை செய்தனா். பின்னா் வழக்குத் தொடா்பான ஆவணங்களை எடுத்து வரும்படி கதிா் ஆனந்தை அனுப்பி வைத்தனா். இதையடுத்து ஆவணங்களுடன் நண்பகல் 1.50 மணியளவில் கதிா்ஆனந்த் மீண்டும் அமலாக்கத் துறை அலுவலகத்துக்கு வந்தாா்,
அமலாக்கத் துறையினா் சோதனையின்போது கைப்பற்றப்பட்ட ஆவணங்கள், பணம், வங்கி பணபரிவா்த்தனை விவரங்கள் ஆகியவற்றின் அடிப்படையில் கதிா்ஆனந்திடம் விசாரணை மேற்கொண்டனா். மாலை 6.05 மணியளவில் கதிா்ஆனந்த், அமலாக்கத் துறை அலுவலகத்திலிருந்து வெளியேறினாா்.