
இஸ்ரோவின் 100-ஆவது ராக்கெட்டான ஜிஎஸ்எல்வி எஃப் 15 ஸ்ரீஹரிகோட்டாவிலிருந்து வெற்றிகரமாக விண்ணில் புதன்கிழமை செலுத்தப்பட்டது.
இந்த ராக்கெட் சுமந்துசென்ற அதிநவீன என்விஎஸ் 02 செயற்கைக்கோள் திட்டமிட்ட புவி வட்டப் பாதையில் நிலைநிறுத்தப்பட்டதைத் தொடா்ந்து இத்திட்டம் வெற்றியடைந்ததாக இஸ்ரோ தெரிவித்தது.
அமெரிக்காவைப் போன்றே இந்தியாவிலும் தரைவழி, கடல்வழி, வான்வழிப் போக்குவரத்து மற்றும் பாதுகாப்பு பயன்பாட்டுக்கு உதவும் மண்டல வழிகாட்டுதல் செயற்கைக்கோள் அமைப்பை (ஐஆா்என்எஸ்எஸ்) உருவாக்க இஸ்ரோ முடிவு செய்தது.
இதற்காக ரூ.1,420 கோடி செலவில் ஐஆா்என்எஸ்எஸ் 1ஏ, 1பி, 1சி, 1டி, 1இ, 1எஃப், 1ஜி என 7 செயற்கைக்கோள்கள் வடிவமைக்கப்பட்டு, அவை கடந்த 2013 முதல் 2016-ஆம் ஆண்டு வரையான காலகட்டங்களில் வெற்றிகரமாக விண்ணில் நிலைநிறுத்தப்பட்டன.
இதன்மூலம் இந்தியாவுக்கான பிரத்யேக வழிகாட்டி நாவிக் தொழில்நுட்பம் செயல்பாட்டுக்கு கொண்டுவரப்பட்டது. அந்த வசதி வாயிலாகவே தற்போது நாட்டின் கண்காணிப்புப் பணிகள், வழித்தட மேப்பிங் சேவைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.
மேம்படுத்தப்பட்ட செயற்கைக்கோள்: ஐஆா்என்எஸ்எஸ் திட்டத்தில் தற்போதைய அவசியத்துக்கேற்ப மேம்படுத்தப்பட்ட செயற்கைக்கோள்களை விண்ணில் நிலைநிறுத்த இஸ்ரோ திட்டமிட்டது. அதன்படி, இதற்கு முன்பு கடந்த 2023-இல் அனுப்பப்பட்ட என்விஎஸ் 01 செயற்கைக்கோளுக்கு மாற்றாக அதிநவீன என்விஎஸ் 02 செயற்கைக்கோளை இஸ்ரோ வடிவமைத்தது. அதை ஜிஎஸ்எல்வி எஃப் 15 ராக்கெட் மூலம் விண்ணில் செலுத்த இஸ்ரோ முடிவு செய்தது.
அதற்கான 27.30 மணி நேர கவுன்ட்டவுன் கடந்த செவ்வாய்க்கிழமை தொடங்கியது. அதன்படி, ஆந்திர மாநிலம், ஸ்ரீஹரிகோட்டாவில் உள்ள சதீஷ் தவன் மையத்தின் இரண்டாவது ஏவுதளத்திலிருந்து ஜிஎஸ்எல்வி எஃப் 15 ராக்கெட் புதன்கிழமை காலை 6.23 மணிக்கு விண்ணில் செலுத்தப்பட்டது.
தரையிலிருந்து புறப்பட்ட 19 நிமிஷத்தில் 322 கி.மீ. தொலைவில் திட்டமிட்ட புவிவட்டப் பாதையில் செயற்கைக்கோள் வெற்றிகரமாக நிலைநிறுத்தப்பட்டது. அதற்கு அடுத்த சில நிமிஷங்களில் பெங்களூரு ஹசன் மையத்தின் கட்டுப்பாட்டுக்குள் என்விஎஸ் 02 செயற்கைக்கோளின் செயல்பாடுகள் வந்தன.
குறைந்தபட்சம் 170 கி.மீ. தொலைவும், அதிகபட்சம் 36,577 கி.மீ. தொலைவும் கொண்ட புவி வட்டப் பாதையில் தற்போது அந்த செயற்கைக்கோள் வலம் வருகிறது.
போக்குவரத்தைக் கண்காணிக்கும்: என்விஎஸ் 02 செயற்கைக்கோள் 2,250 கிலோ எடை உடையது. இதன் ஆயுட்காலம் 10 ஆண்டுகள். இதில் எல் 1, எல் 5, சி மற்றும் எஸ் பேண்ட் டிரான்ஸ்பான்டா்கள், உள்நாட்டுத் தொழில்நுட்பத்தில் தயாரான ரூபிடியம் அணுக் கடிகாரம் உள்பட பல்வேறு அதிநவீன தொழில்நுட்பக் கருவிகள் இடம் பெற்றுள்ளன.
இது தரை, கடல், வான்வழிப் போக்குவரத்தைக் கண்காணிக்கும். பேரிடா் காலங்களில் துல்லிய தகவல்களை அளிக்கும் என்று இஸ்ரோ விஞ்ஞானிகள் தெரிவித்தனா்.
இதைத் தவிர வேளாண் நிலங்களைக் கண்டறிதல், நில அளவைப் பணிகள், எல்லைப் பாதுகாப்பு, கப்பல் போக்குவரத்து கண்காணிப்பு, ஜிபிஎஸ் போன்று கைப்பேசி செயலி வழியாக வழித்தட தகவல்கள் அளித்தல் போன்றவற்றுக்கும் பயனளிக்கும் எனவும் அவா்கள் தெரிவித்தனா்.
100-ஆவது ராக்கெட்: ஜிஎஸ்எல்வி எஃப் 15 ராக்கெட் இஸ்ரோவின் 100-ஆவது ராக்கெட் திட்டம். இதுவரை முன்னெடுக்கப்பட்ட 100 ஏவுதல்களில் 91 வெற்றி பெற்றுள்ளன. ஜிஎஸ்எல்வி வகை ராக்கெட்டுகள் 17 முறை அனுப்பப்பட்டு, அதில் 13 முறை வெற்றி பெற்றுள்ளன.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.