கலைஞரின் கனவு இல்லம்: மேலும் ரூ.500 கோடி நிதி ஒதுக்கீடு !

கலைஞரின் கனவு இல்லம் திட்டத்திற்கு முதல்வர் அறிவிப்பு.
கோப்புப்படம்.
கோப்புப்படம்.
Published on
Updated on
2 min read

2024-25 கலைஞரின் கனவு இல்லம் திட்டத்திற்கு தமிழ்நாடு அரசால் மேலும் ரூ.500 கோடி நிதி ஒதுக்கீடு செய்து முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவித்துள்ளார்.

இது பற்றி தமிழக அரசு வெளியிட்ட செய்திக் குறிப்பு:

“கலைஞரின் கனவு இல்லம்” திட்டத்தின் கீழ் 2024-25 ஆம் ஆண்டில் ஒரு லட்சம் புதிய கான்கிரீட் வீடுகள் கட்டுவதற்கு ஒரு வீட்டிற்கு ரூ.3,50,000/- வீதம் மொத்தம் ரூ.3500 கோடி நிதி ஒதுக்கீட்டிற்கு அனுமதி ஆணை வழங்கப்பட்டுள்ளது.

தமிழ்நாட்டில் கிராமப்புற பகுதிகளில் ஏறத்தாழ 8 லட்சம் குடிசை வீடுகள் உள்ளதாக “அனைவருக்கும் வீடு” என்ற கணக்கெடுப்பின் வழியாக கண்டறியப்பட்டதன் அடிப்படையில் “குடிசையில்லா தமிழ்நாடு” என்ற இலக்கினை அடையும் பொருட்டு, எதிர்வரும் 2030-ஆம் ஆண்டிற்குள் ஊரக பகுதிகளில் 6 வருடங்களில் 8 லட்சம் வீடுகள் புதியதாக கட்டித்தர அறிவிப்பு வெளியிடப்பட்டது.

அதன்படி நடப்பு நிதியாண்டில் (2024-25) ஒரு லட்சம் வீடுகள் கட்டுவதற்கு அனுமதி வழங்கப்பட்டு பணிகள் நடைபெற்று வருகின்றன. இத்திட்டத்தின் கீழ் கட்டப்படும் வீட்டின் பரப்பளவு, சமையலறை உட்பட, 360 சதுர அடியாகும். பயனாளிகளின் நிதிச்சுமையை குறைக்கும் பொருட்டு இத்திட்டத்தின் கீழ் TANCEM சிமெண்ட் மற்றும் இரும்பு கம்பிகள் குறைந்த விலையில் கொள்முதல் செய்யப்பட்டு, துறை மூலம் வழங்கப்படுகிறது.

வீட்டின் கட்டுமானத்திற்கு ஏற்ப தரைமட்ட நிலை, ஜன்னல் மட்ட நிலை, கூரை வேயப்பட்ட நிலை மற்றும் பணிமுடிவுற்ற பின் என நான்கு தவணைகளில் ஒற்றை ஒருங்கிணைப்பு வங்கி கணக்கின் (Single Nodal Account-SNA) மூலம் தொகை நேரடியாக பயனாளிகளுக்கு விடுவிக்கப்பட்டு வருகிறது.

இதுவரை தமிழ்நாடு அரசால் ரூ.1625.30 கோடி நிதி ஒதுக்கீடு வழங்கப்பட்டு, பயனாளிகளுக்கு வீட்டின் கட்டுமான நிலைக்கு ஏற்ப ரூ.1350.99 கோடி விடுவிக்கப்பட்டுள்ளது. மேலும், துறை மூலம் வழங்கப்படும் சிமெண்ட் மற்றும் இரும்பு கம்பிகளுக்கு (Steel) என ரூ.249.86 கோடி வழங்கப்பட்டுள்ளது. ஆக மொத்தம் ரூ.1600.85 கோடி இதுவரை கலைஞரின் கனவு இல்லம் திட்டத்தின் கீழ் செலவினம் மேற்கொள்ளப்பட்டுள்ளது.

கலைஞரின் கனவு இல்லம் திட்டம் மக்களிடம் நல்ல வரவேற்பைப் பெற்றுள்ளது. இத்திட்டத்தின் கீழ் வழங்கப்பட்ட ஒரு லட்சம் வீடுகளும் விரைவாக கட்டப்பட்டு வருகிறது. இதனை கருத்தில் கொண்டு, வீடுகளின் கட்டுமான பணிகளை துரிதப்படுத்தும் பொருட்டு தமிழ்நாடு அரசு மேலும் ரூ.500 கோடி விடுவித்து ஆணை வழங்கியுள்ளது. தற்போது வரப்பெற்றுள்ள ரூ.500 கோடியும் சேர்த்து மொத்தம் ரூ.2125.30 கோடி பெறப்பட்டு கட்டுமான நிலைக்கு ஏற்ப பயனாளிகளின் வங்கிகணக்கிற்கு நேரடியாக தொகை விடுவிக்கப்பட்டு வருகிறது.

இந்நிதியாண்டிற்குள் அனைத்து வீடுகளும் கட்டி முடிக்கப்பட்டு, மக்களின் பயன்பாட்டிற்கு கொண்டு வர தமிழ்நாடு அரசால் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

தமிழ்நாடு அரசின் கூடுதல் நிதி ரூ.108.71 கோடி நிதி ஒதுக்கீடு

பண்டைய பழங்குடியின மக்களுக்கான பிரதம மந்திரியின் பெருந்திட்டத்தில் தமிழ்நாடு அரசின் கூடுதல் நிதி ரூ.108.71 கோடி நிதி ஒதுக்கீடு செய்து முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவித்துள்ளார்.

இது பற்றி தமிழக அரசு வெளியிட்ட செய்திக் குறிப்பு:

பண்டைய பழங்குடியின மக்களுக்கான பிரதம மந்திரியின் பெருந்திட்டத்தின் கீழ் தமிழ்நாட்டில் குடியிருக்கும் தோடா, இருளர், பனியன், காட்டுநாயக்கன், கோட்டா மற்றும் குரும்பா ஆகிய ஆறு பழங்குடியினர்களுக்கு வீடுகள் வழங்கப்பட்டு வருகிறது.

பண்டைய பழங்குடியின மக்களுக்கான பிரதம மந்திரியின் பெருந்திட்டத்தின் கீழ் 2023-24 ஆம் ஆண்டிற்கான இலக்காக 4811 வீடுகளை ஒன்றிய அரசு நிர்ணயித்துள்ளது. அதே போல், 2024-25 ஆம் ஆண்டுக்கான இலக்கு 7,136 வீடுகள் ஆகும். ஆக மொத்தம் பண்டைய பழங்குடியின மக்களுக்கான பிரதம மந்திரியின் பெருந்திட்டத்தின் கீழ் தமிழ்நாட்டிற்கான மொத்த இலக்காக 11,947 வீடுகள் நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

மொத்த இலக்கில் நாளதுவரை 6,559 வீடுகளுக்கு அனுமதி ஆணை வழங்கப்பட்டு பணிகள் முன்னேற்றத்தில் இருந்து வருகிறது. மீதமுள்ள வீடுகளும் தகுதியுள்ள பயனாளிகளுக்கு விரைவில் வழங்கப்படும்.

இத்திட்டத்தில் ஒரு வீட்டிற்கான அலகுத்தொகை ரூ.2 லட்சம் என மத்திய அரசால் நிர்ணயிக்கப்பட்டு, அத்தொகை 60:40 என்ற விகிதத்தில் மத்திய மற்றும் மாநில அரசால் பகிர்ந்தளிக்கப்படுகிறது. இதற்காக நாளதுவரை ரூ.22.466 கோடி பெறப்பட்டுள்ளது. இதில், மத்திய அரசின் பங்குத்தொகை ரூ.13.48 கோடி மற்றும் மாநில அரசின் பங்குத் தொகை ரூ.8.98 கோடியாகும்.

இந்நிலையில், மத்திய அரசால் நிர்ணயிக்கப்பட்ட அலகுத் தொகையான ரூ.2 லட்சம் வீட்டின் கட்டுமானத்திற்கு போதுமானதாக இல்லாததால் பழங்குடியின மக்களின் பொருளாதார நிலையைக் கருத்தில்கொண்டு தமிழ்நாடு அரசு, அரசாணை (நிலை) எண்.36, ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித் துறை (ம.அ.தி2(1)த் துறை, நாள்.01.03.2024-ன் மூலமாக வீட்டின் கட்டுமானத் தொகையினை சமவெளி பகுதியில் கட்டப்படும் ஒரு வீட்டிற்கு ரூ.5,07,000/- எனவும் மற்றும் மலைப்பாங்கான பகுதிகளில் கட்டப்படும் ஒரு வீட்டிற்கு ரூ.5,73,000/- எனவும் (மத்திய அரசின் அலகுத்தொகை ரூ.2.00 லட்சம் உள்பட) உயர்த்தி ஆணை வெளியிட்டுள்ளது.

அதன்படி, தமிழ்நாடு அரசு தற்போது ரூ.108.71 கோடியை மாநில அரசின் கூடுதல் நிதியாக விடுவித்து ஆணை வழங்கியுள்ளது. இத்தொகையிலிருந்து, வீட்டின் கட்டுமான நிலைக்கு ஏற்ப பயனாளிகளின் வங்கிகணக்கிற்கு நேரடியாக தொகை விடுவிக்கப்பட்டு வருகிறது.

இந்நிதி ஒதுக்கீடு “பண்டைய பழங்குடியின மக்களுக்கான பிரதம மந்திரியின் பெருந்திட்டத்தின்” கீழ் கட்டப்படும் வீடுகளை விரைந்து முடிக்க உதவிகரமாக இருக்கும். விரைவில் அனைத்து வீடுகளும் கட்டி முடிக்கப்பட்டு, மக்களின் பயன்பாட்டிற்கு கொண்டு வர தமிழ்நாடு அரசால் தீவிர நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com