ஒடிசாவில் மின்சாரம் தாக்கி யானை பலி!

ஒடிசாவில் மின்சாரம் தாக்கி யானை பலியானதைப் பற்றி...
மின்சாரம் தாக்கி பலியான யானையின் சடலம்
மின்சாரம் தாக்கி பலியான யானையின் சடலம்
Published on
Updated on
1 min read

ஒடிசாவின் சம்பால்பூர் மாவட்டத்தில் வயலை சுற்றி அமைக்கப்பட்டிருந்த மின்சார வேலியை உரசியதில் காட்டு யானை ஒன்று மின்சாரம் தாக்கி பலியாகியுள்ளது.

சம்பால்பூரின் சதார் வனப்பகுதிக்கு அருகிலுள்ள ஜடுலோய்சிங் கிராமத்தில் நேற்று (ஜன.29) காலை இறந்த ஆண் யானையின் சடலம் ஒன்று கிடப்பதை கிராமவாசிகள் பார்த்து வனத்துறையினருக்கு தகவல் அளித்துள்ளனர்.

தகவலின் அடிப்படையில், அங்கு விரைந்த வனத்துறையினர் யானையின் மரணம் குறித்து தங்களது விசாரணையை துவங்கினர். பலியான யானைக்கு சுமார் 20 வயது இருக்கும் எனக் கணிக்கப்பட்டுள்ள நிலையில் அதன் தந்தங்களுக்கு எந்தவொரு சேதாரமும் இல்லாமல் இருப்பதினால் அது வேட்டையாடப்படவில்லை என உறுதி செய்யப்பட்டது. ஆனால், அந்த யானையின் தும்பிக்கையில் காயங்கள் ஏற்பட்டிருப்பது கண்டுபிடிக்கப்பட்டது.

இதனைத் தொடர்ந்து, கால்நடை மருத்துவர்கள் குழுவொன்று பலியான யானையின் சடலத்தை உடற்கூராய்வு செய்தனர். பின்னர், யானை பலியான இடத்திலிருந்து மின்சார கம்பிகளும் மற்றும் சில ஆபத்தான பொருள்களும் கைப்பற்றப்பட்டது. அப்பகுதியில், வனவிலங்குகளிடம் இருந்து தங்களது வயலை பாதுகாத்துக் கொள்ள அதனை சுற்றி கிராமவாசிகள் மின்சார வேலி அமைத்ததாகக் கூறப்படுகிறது.

இதையும் படிக்க: ஜம்முவில் பயங்கரவாதிகளைப் பிடிக்க தீவிர தேடுதல் வேட்டை!

இதனால், அங்கு வந்த யானை அந்த மின்சார கம்பியை உரசியதில் மின்சாரம் பாய்ந்து அது பலியாகியிருக்கக் கூடும் என சந்தேகிக்கப்படுகிறது.

இதுகுறித்து, வனத்துறை அதிகாரிகள் கூறுகையில் இந்த சம்பவத்தில் தொடர்புடைய 5 பேரை தற்போது கைது செய்துள்ளதாகவும், யானையின் மரணத்திற்கு காரணமானவர்களின் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் தெரிவித்துள்ளனர்.

முன்னதாக, கடந்த ஜன.26 அன்று ஒடிசாவின் போல்பங்கா வனப்பகுதியில் 12 வயதுடைய யானை ஒன்று மர்மமான முறையில் இறந்துகிடந்தது. ஏற்கனவே, அந்த யானை மின்சாரம் பாய்ந்து பலியாகியிருக்கக் கூடும் என சந்தேகிக்கப்பட்டது. ஆனால், உடற்கூராய்வு அறிக்கை வெளியான பின்னரே யானையின் மரணத்திற்கான காரணம் தெரியவரும் எனக் கூறப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.