அரசின் திட்டங்களை மக்களிடம் கொண்டு சேர்க்க வேண்டும்: துணை முதல்வர்

அரசினுடைய திட்டங்களை மக்களிடம் கொண்டு சென்று சேர்க்க வேண்டும் என திமுகவினருக்கு துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் வேண்டுகோள் விடுத்தார்.
வேலூர் மாவட்டம் காட்பாடி வடக்கு பகுதி செயலாளர் வன்னியராஜா மகள் வ.விஷ்ணுபிரியா – ஹெச்.சுரேஷ்குமார் இணையரின் திருமணத்தை துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் நடத்தி வைத்து மணமக்களை வாழ்த்தினார்.
வேலூர் மாவட்டம் காட்பாடி வடக்கு பகுதி செயலாளர் வன்னியராஜா மகள் வ.விஷ்ணுபிரியா – ஹெச்.சுரேஷ்குமார் இணையரின் திருமணத்தை துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் நடத்தி வைத்து மணமக்களை வாழ்த்தினார்.
Published on
Updated on
2 min read

வேலூர்: 30 சதவீத வாக்காளர்களை கழகத்தில் இணைக்க வேண்டும் என்ற கழகத் தலைவர் அவர்களின் ”ஓரணியில் தமிழ்நாடு” முன்னெடுப்பினை செயல்படுத்திட, திமுகவினர் அனைவரும் அரசினுடைய திட்டங்களை மக்களிடம் கொண்டு சென்று சேர்க்க வேண்டும் என துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் வேண்டுகோள் விடுத்தார்.

வேலூர் மாவட்டம் காட்பாடி வடக்கு பகுதி செயலாளர் வன்னியராஜா மகள் வ.விஷ்ணுபிரியா – ஹெச்.சுரேஷ்குமார் இணையரின் திருமணத்தை துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் நடத்தி வைத்து மணமக்களை வாழ்த்தினார்.

இந்த திருமண விழாவில் துணை முதல்வர் பேசுகையில், வேலூர் மாவட்டம் காட்பாடி வடக்கு பகுதியின் செயலாளர் வன்னியராஜா மகள் விஷ்ணுபிரியா மற்றும் சுரேஷ்குமார் இணையரின் திருமணத்தை உங்களின் முன்னிலையில் இன்றைக்கு நடத்தி வைப்பதில் நான் மிகுந்த மகிழ்ச்சியடைகின்றேன். எத்தனையோ முறை இந்த காட்பாடிக்கு நான் வருகை தந்திருக்கின்றேன். என்னுடைய அரசியல் வாழ்க்கைக்கு அடித்தளம் இட்டது இந்த காட்பாடி தொகுதிதான். அந்த விதத்தில் நான் மீண்டும் இங்கு வருகை தந்திருப்பதில் மிகுந்த மகிழ்ச்சியடைகின்றேன்.

அது மட்டுமல்ல, இந்த காட்பாடி தொகுதிதான் நம்முடைய கழகத்தினுடைய பொதுச் செயலாளரை தந்திருக்கின்ற மண், இந்த காட்பாடி மண். அப்படிப்பட்ட பெருமை மிகுந்த இந்த காட்பாடிக்கு வருகை தந்து உங்களையெல்லாம் சந்திப்பதில் நான் மிகுந்த பெருமையடைகின்றேன். நேற்று இரவில் இருந்து சிறப்பான வரவேற்பை அளித்த வேலூர், ராணிப்பேட்டை மாவட்டங்களின் மாவட்ட கழகத்தை, மாநகர கழகத்தை சேர்ந்த அனைத்து நிர்வாகிகளுக்கும் என்னுடைய நன்றியை தெரிவித்துக் கொள்கின்றேன்.

வன்னியராஜா் 1984 -ல் இருந்து கழகத்திற்காக தொடர்ந்து உழைத்து வருகின்றார். இப்படிப்பட்டவரின் குடும்பத்தின் திருமண விழாவில் கலந்து கொண்டு மணமக்களை வாழ்த்துகின்ற இந்த வாய்ப்பை அளித்ததற்கு நன்றி.

அதேபோல, பொதுச்செயலாளருக்கு இந்த நேரத்தில் நான் நன்றி தெரிவித்தாக வேண்டும். இந்த திருமணத்திற்கு நான் வந்திருக்கக் கூடிய முழுகாரணம், முதல் காரணம் நம்முடைய பொதுச்செயலாளர்தான். சட்டப்பேரவையில் பேரவை உறுப்பினராக இருந்தேன், பிறகு அமைச்சராக பொறுப்பேற்றேன். அப்போது பொதுச்செயலாளர் பின்னாடி 2 வரிசை தள்ளிதான் உட்கார்ந்து இருப்பேன். அதன் பிறகு கழகத் தலைவர் துணை முதலல்வர் பொறுப்பை கொடுத்தபோது எல்லோரும் வாழ்த்தினார்கள். நம்முடைய பொதுச்செயலாளரும் என்னை வாழ்த்தினார். வாழ்த்தும்போது இனிமே நீ என்னோட பக்கத்து சீட்தானே, வா, வா உன்னை பார்த்துக்கிறேன் என்று சொல்லிதான் வாழ்த்தினார்.

தற்போது கடந்த ஒன்பது மாதமாக சட்டப்பேரவை கூடும் போதெல்லாம் அவர் பக்கத்தில் தான் நான் உட்காரவேண்டும். அதில் கடந்த மூன்று மாதமாக இந்த திருமண விழாவிற்காக தேதி வாங்கி, அதை பாலேஅப் செய்து, இதை என்னிடம் ஞாபகப்படுத்திக் கொண்டே இருந்தது நம்முடைய பொதுச்செயலாளர். எனவே இந்த தேதியை வாங்கி மணமக்களை வாழ்த்துவதற்கான வாய்ப்பை அளித்த நம்முடைய பொதுச்செயலாளருக்கு மீண்டும் நன்றியை தெரிவித்துக் கொள்கின்றேன்.

இன்றைக்கு இந்த திருமண விழா கிட்டத்தட்ட ஒரு பொதுக்கூட்டம் போல் நிறையபேர் வந்திருக்கின்றீர்கள். நிறைய மகளிர் வந்திருக்கின்றீர்கள். ஒரு காலத்தில் பெண்கள் வீட்டை விட்டு வெளியே வரமுடியாத சூழல் இருந்தது. இன்றைக்கு இவ்வளவு பெண்கள் வந்திருக்கின்றீர்கள் என்றால் தந்தை பெரியார், பேரறிஞர் அண்ணா, நம்முடைய முத்தமிழறிஞர் கலைஞர், இவங்க எல்லாம் கண்ட கனவுதான் காரணம். இதற்கெல்லாம் திட்டம் தீட்டியது நம்முடைய முத்தமிழறிஞர் கலைஞர். அவற்றை எல்லாம் செய்து காட்டி கொண்டிருப்பது நம்முடைய தலைவர். அதை நீங்கள் நினைவில் வைத்துக் கொள்ள வேண்டும்.

பெண்கள் படிக்க வேண்டும். பெண்கள் பொருளாதார ரீதியாக சுதந்திரமாக இருக்க வேண்டும் என்று ஒவ்வொரு திட்டமாக நம்முடைய தலைவர் அவர்கள் செய்து கொண்டிருகின்றார். இந்த திட்டங்களை பொதுமக்கள் ஒவ்வொருவரிடமும் கொண்டு சென்று சேர்க்க வேண்டிய கடமை நம் ஒவ்வொருத்தருக்கும் உள்ளது. அதையெல்லாம் நீங்கள் செய்வீர்கள் என்ற நம்பிக்கை உள்ளது.

நம்முடைய தலைவர் அவர்கள் நாளை முதல் ஓரணியில் தமிழ்நாடு என்ற முன்னெடுப்பை தொடங்கியிருக்கின்றார். ஒவ்வொரு பூத்திலயும் இருக்கின்ற 30 சதவீத வாக்காளர்களை நம்முடைய கழகத்தில் இணைக்க வேண்டும் என்ற திட்டத்தை தீட்டியிருக்கின்றார். இதையெல்லாம் செய்து முடிக்க வேண்டுமென்றால் இங்கு வந்திருக்கக்கூடிய நீங்கள் ஒவ்வொருவரும் நம்முடைய அரசினுடைய தூதுவர்களாக செயல்பட்டு அரசினுடைய திட்டங்களை மக்களிடம் கொண்டு சென்று சேர்க்க வேண்டும் என்று கேட்டுக் கொள்கின்றேன்.

மணமக்களுக்கு நம்முடைய தலைவர் சொல்வது போல ஒரே ஒரு வேண்டுகோள்தான். உங்களுக்கு பிறக்கக்கூடிய குழந்தைக்கு அழகான தமிழ் பெயரை சூட்ட வேண்டும் என்று கேட்டுக் கொண்டார்.

இந்த திருமண விழாவில் கழகத்தின் பொதுச்செயலாளர் நீர்வளத்துறை அமைச்சர் துரைமுருகன், கைத்தறி மற்றும் துணிநூல் துறை அமைச்சர் திரு. ஆர்.காந்தி உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

Summary

Deputy Chief Minister Udhayanidhi Stalin appealed to DMK members to take the government's plans to the people.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com