
திருநெல்வேலி: மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்டதால் முதல்வருக்கு வானளாவிய அதிகாரம் உள்ளதா? என கேள்வி எழுப்பிய மகாராஷ்டிரம் மாநில ஆளுநர் சி.பி. ராதாகிருஷ்ணன், ஆளுநர்களுக்கென இருக்கும் தனி அதிகாரங்களுக்குள் முதல்வர்கள் தலையிடக்கூடாது, முதல்வர்களுக்கு இருக்கும் மகத்தான அதிகாரங்களை வைத்து மக்களுக்கு நல்லது செய்ய வேண்டும், ஆளுநர்கள் தான் மாநிலத்தின் முதல் பிரஜை என தெரிவித்தார்.
சுதந்திர போராட்ட வீரர் அழகுமுத்துக் கோன் குருபூஜையையொட்டி, நெல்லை பாளையங்கோட்டையில் உள்ள அவரது முழு உருவ சிலைக்கு மகாராஷ்டிரம் ஆளுநர் சி.பி. ராதாகிருஷ்ணன், பாஜக மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் மற்றும் அதிமுக பாஜகவினர் ஒன்றிணைந்து மாலை அணிவித்து மரியாதை செய்தனர்.
தொடர்ந்து செய்தியாளர்களுடன் பேசிய ஆளுநர் சி. பி. ராதாகிருஷ்ணன், இந்திய சுதந்திரப் போராட்ட வீரர்கள் அனைவரும் 68 ஆண்டுகளுக்கு பிறகு இப்போது தான் மக்களுக்கு தெரிய வருகிறார்கள். பிரதமர் நரேந்திர மோடி தபால்தலை வெளியிட்டு அவர்களை கௌரவப்படுத்தி வருகிறார்.
காவி இந்த மண்ணுக்கு சொந்தமானது
தேசத்திற்கு போராடியவர்கள் அனைவரும் போற்றப்பட வேண்டும். சுதந்திரப் போராட்ட வீரர் அழகுமுத்துக் கோன் குருபூஜை விழாவில் கௌரவம் செய்யவே திருநெல்வேலிக்கு வருகை தந்தேன். பல்கலைக்கழகங்களில் காவி புகுத்தப்படவில்லை, காவி என்பது இந்த மண்ணுக்கு சொந்தமானது. இப்போது மட்டுமல்ல வாஜ்பாய் காலத்தில் இருந்தே காவி பல்கலைகழகத்தில் புகுத்தப்படுவதாக அரசியல் கட்சியினர் பேசி வருகின்றனர். காவி என்பது அரசியலுக்கான நிறமல்ல, அது பற்றற்ற தன்மையை குறிக்கும் நிறம். அறநிலையத் துறை அமைச்சர் கூட காவி அணிந்துதான் கோயிலுக்கு செல்கிறார்.
அதிகாரங்களை வைத்து மக்களுக்கான திட்டங்களை செயல்படுத்த வேண்டும்
மாநில முதல்வர்களுக்கு மகத்தான அதிகாரங்கள் உள்ளது. அதனை வைத்து மக்களுக்கான நல்ல திட்டங்களை செயல்படுத்த வேண்டும். அதை விட்டுவிட்டு ஆளுநருக்கு இருக்கும் ஒரு சில அதிகாரங்களில் முதல்வர்கள் தலையிடக்கூடாது. மாநிலத்தில் முதல் பிரஜையாக ஆளுநர் தான் செயல்படுகிறார். நான் நான்கு மாநிலங்களில் ஆளுநராக இருந்திருக்கிறேன் இரண்டு மாநிலங்களில் எதிர்க்கட்சிகள் ஆளும் மாநிலங்கள் தான். ஆனால் அங்கு இதுபோன்ற எந்த விதமான பிரச்னைகளும் ஏற்படவில்லை.
துணை வேந்தர்களை நியமிக்கும் அதிகாரம் ஆளுநருக்கே
பல்கலைக்கழக துணை வேந்தர்களை நியமிக்கும் அதிகாரம் உள்ளிட்ட அதிகாரங்கள் ஆளுநரிடமே உள்ளது. கேரள அரசு தொடர்ந்த ஒரு வழக்கில் உச்ச நீதிமன்றம் அதற்கான தீர்ப்பை வழங்கியுள்ளது. தற்போது ஒரு தீர்ப்பை மட்டும் பெற்றுக்கொண்டு முதல்வருக்கு தான் அதிகாரம் என இவர்கள் கூறி வருகின்றனர். மாநில ஆளுநர்களின் அதிகாரங்களுக்குள் முதல்வர்கள் தலையீடு இருக்கக் கூடாது என்றார்.
முதல்வருக்கு வானளாவிய அதிகாரம் உள்ளதா?
ஆளுநர் பதவி என்பது நியமன பதவி தானே, முதல்வர் மக்களால் தேர்ந்தெடுக்கபடுகிறார் என்ற செய்தியாளர்களின் கேள்விக்கு, மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்டு விட்டால் முதல்வருக்கு வானளாவிய அதிகாரம் உள்ளதா?, பிரதமருக்கு தான் முழு அதிகாரம் என்பதை ஏற்றுக் கொள்வீர்களா? அப்படி என்றால் எதேச்சி அதிகாரமாக அவர் செயல்பட முடியுமா? என கேள்வி எழுப்பினார்.
வன்முறைக்குள் மாணவர்கள் செல்லக்கூடாது
மாணவர்கள் கோட்சே வழியில் செயல்படக் கூடாது என முதல்வர் பேசியது குறித்த கேள்விக்கு, வன்முறைக்குள் மாணவர்கள் செல்லக்கூடாது. ராஜீவ் காந்தியை கொன்றவரோடு கட்டியணைத்து முதல்வர் நட்பு பாராட்டுகிறார். அது எந்த வகையில் சரியானது. வன்முறை, பயங்கரவாதத்தை யார் செய்தாலும் அனைவரும் ஒன்றிணைந்து எதிர் குரல் கொடுக்க வேண்டும் என கூறினார்.
Maharashtra Governor C.P. Radhakrishnan questioned whether the Chief Minister has unlimited power because he is elected by the people.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.