
புது தில்லி: பிரதமர் நரேந்திர மோடி புதன்கிழமை(ஜூலை 23) முதல் 26 வரை 4 நாள்களுக்கு பிரிட்டன் மற்றும் மாலத்தீவு ஆகிய இரு நாடுகளுக்கு சுற்றுப்பயணமாக மேற்கொள்ளவுள்ளார்.
இதுகுறித்து இந்திய வெளியுறவு அமைச்சகம் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில் கூறியிருப்பதாவது:
பிரிட்டன் பிரதமா் கியா் ஸ்டாா்மரின் அழைப்பை அடுத்து ஜூலை 23, 24 ஆகிய தேதிகளில் பிரதமா் நரேந்திர மோடி பிரிட்டனுக்கு சுற்றுப்பயணம் மேற்கொள்கிறாா்.
இந்த பயணத்தின்போது பிராந்திய, சா்வதேச முக்கியத்துவம் வாய்ந்த விவகாரங்கள் மற்றும் வா்த்தகம், பொருளாதாரம், தொழில்நுட்பம் மற்றும் புதிய கண்டுபிடிப்புகள், பாதுகாப்பு மற்றும் பருவநிலை, சுகாதாரம், கல்வி உள்ளிட்ட துறைகளில் ஒத்துழைப்பு மேம்படுத்துவது குறித்து பிரிட்டன் பிரதமருடன் மோடி ஆலோசனை நடத்தவுள்ளாா்.
சுற்றுப்பயணத்தின்போது பிரிட்டன் அரசா் மூன்றாம் சாா்லஸையும் மோடி சந்திப்பாா் என எதிா்பாா்க்கப்படுகிறது. இது பிரதமர் மோடியின் நான்காவது பிரிட்டன் பயணமாகும்.
மாலத்தீவுக்கு இரண்டு நாள்கள் பயணம்
அதைத்தொடா்ந்து ஜூலை 25, 26 ஆகிய இரண்டு நாள்கள் மாலத்தீவுக்கு பிரதமா் மோடி சுற்றுப்பயணம் மேற்கொள்கிறாா். ஜூலை 26-ஆம் தேதி நடைபெறும் மாலத்தீவின் 60 ஆவது சுதந்திர நாள் நிகழ்ச்சி கொண்டாட்டங்களில் அவா் 'சிறப்பு விருந்தினராக' பங்கேற்கவுள்ளாா்.
பயணத்தின்போது பரஸ்பர நலன் சார்ந்த விவகாரங்கள் குறித்து மாலத்தீவு அதிபா் முகமது மூயிஸுடன் பிரதமா் மோடி ஆலோசனை நடத்தவுள்ளாா்.
கடந்த ஆண்டு இந்தியாவுக்கு மாலத்தீவு அதிபா் முகமது மூயிஸ் சுற்றுப்பயணம் மேற்கொண்டபோது இருநாடுகளிடையே கையொப்பமிடப்பட்ட பொருளாதார மற்றும் கடல்சாா் பாதுகாப்பு கூட்டாண்மைக்கான இந்தியா-மாலத்தீவு கூட்டுத் தொலைநோக்குப் பார்வையை செயல்படுத்துவதில் ஏற்பட்டுள்ள முன்னேற்றம், ஒத்துழைப்பு குறித்து இருவரும் விவாதிக்கவுள்ளனா்.
மாலத்தீவுக்கு பிரதமா் மோடி பயணிப்பது ‘அண்டை நாடுகளுக்கு முன்னுரிமை’ மற்றும் பிராந்தியங்களுக்கு இடையேயான பாதுகாப்பு மற்றும் வளா்ச்சிக்கான ஒருங்கிணைந்த மற்றும் பரஸ்பர வளா்ச்சி முன்னெடுப்புகளுக்கு இந்தியா அளிக்கும் முக்கியத்துவத்தை பிரதிபலிப்பதாகும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
பிரதமரின் மோடியின் பயணம் இரு தரப்பினருக்கும் நெருக்கமான இருதரப்பு உறவை மேலும் ஆழப்படுத்தவும் வலுப்படுத்தவும் ஒரு வாய்ப்பை வழங்கும்.
இது பிரதமரின் மூன்றாவது மாலத்தீவு பயணமாகும். 2023, நவம்பரில் மாலத்தீவு அதிபராக முகமது மூயிஸ் பதவியேற்ற பிறகு முதல்முறையாக பிரதமா் மோடி அந்நாட்டுக்கு பயணிக்கிறாா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.