
திருக்குவளை: ஆடி அமாவாசையையொட்டி, காசிக்கு நிகராக புண்ணியம் தரும் காமேஸ்வரத்தில் ஏராளமானோர் முன்னோர்களுக்கு தர்பணம் கொடுத்தனர்.
ஆடி அமாவாசையொட்டி, காசிக்கு நிகராக புண்ணியம் தரும் நாகை மாவட்டம் காமேஸ்வரம் கடற்கரையில் முன்னோர்களுக்கு திதி கொடுத்து ஆயிரக்கணக்கானோர் வியாழக்கிழமை கடலில் புனித நீராடினர்.
மாதந்தோரும் வரும் ஒவ்வொரு அமாவாசை நாளும் இந்துக்களின் முக்கிய நிகழ்ச்சியாக திகழ்ந்து வருகிறது. இதில் தை மற்றும் ஆடி மாதத்தில் வரும் அமாவாசை நாள் மிகவும் சிறப்பு பெற்றதாகும். ஆடி அமாவாசையில் விரதமிருந்து மூதாதையர்களுக்கு தர்பணம் செய்தால் அனைத்து ஆசிகளும் கிடைக்கும் என்பது இந்துக்களின் நம்பிக்கையாகும்.
அதன்படி, நாகை மாவட்டம் பிரசித்தி பெற்ற காமேஸ்வரம் கடற்கரையில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் தங்களது முன்னோர்களுக்கு பிடித்த காய்கறி மற்றும் உணவுகளை படைத்தும், எள், நவதானியம், பிண்டம் வைத்து பின்னர் திதி கொடுத்து வங்கக்கடலில் புனித நீராடினர்.
இதற்காக காமேஸ்வரம் கடற்கரையில் அதிகாலை முதல் குவிந்த ஆயிரக்கணக்கான பக்தர்கள் சாஸ்திர மற்றும் அகத்தியர், தமிழ் முறைப்படி, தேவார, திருவாசகம் ஓதி, முன்னோர்களுக்கு தர்பணம் செய்தனர்.
ஒவ்வொரு ஆண்டும் அமாவாசை நாளில் காமேஸ்வரம் கடலில் புனித நீராட அதிக அளவு பக்தர்கள் வருவதால், பக்தர்களின் பாதுகாப்பு கருதி, அங்கு மாவட்ட காவல் துறை, தீயணைப்புத்துறை கடலோர பாதுகாப்பு குழும போலீசார் மற்றும் காமேஸ்வரம் மீனவ கிராமம் சார்பில் பாதுகாப்பு ஏற்பாடுகள் விரிவாக செய்யப்பட்டிருந்தன.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.