
சென்னை: நீதிமன்ற சம்மனை குற்றம்சாட்டப்பட்ட திமுக முன்னாள் எம்பி உள்ளிட்டோருக்கு வழங்காத பாளையங்கோட்டை காவல் நிலையத்தின் அப்போதைய காவல் ஆய்வாளர் தில்லை நாகராஜனுக்கு எதிராக நடவடிக்கை எடுக்குமாறு டிஜிபி-க்கு உத்தரவிட்டுள்ள சென்னை உயர்நீதிமன்றம், காவல் துறை மீது மக்கள் நம்பிக்கை இழந்துவிட்டனர் என தெரிவித்துள்ளது.
பாளையங்கோட்டை சிஎஸ்ஐ திருமண்டல பேராயர் பர்னபாஸ் தரப்பினருக்கும், திமுக முன்னாள் எம்.பி ஞானதிரவியம் தரப்பினருக்கும் இடையே கோஷ்டிபூசல் நிலவி வந்தது.
இந்நிலையில், கடந்த 2023 ஆம் ஆண்டு பேராயர் பர்னபாஸ் தரப்பைச் சேர்ந்த மதபோதகர் காட்பிரே நோபிள் என்பவர் மீது, ஞானதிரவியத்தின் ஆதரவாளர்கள் தாக்குதல் நடத்தினர்.
இதையடுத்து ஞானதிரவியம் உள்ளிட்ட 33 பேர் மீது பாளையங்கோட்டை போலீஸார் வழக்குப்பதிவு செய்தனர்.
இந்த வழக்கு விசாரணை நெல்லை மாவட்ட முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ளது. இந்த வழக்கை ரத்து செய்யக் கோரி ஞானதிரவியம் தாக்கல் செய்த மனுவை சென்னை உயர்நீதிமன்றம் தள்ளுபடி செய்தது.
நெல்லை நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ள வழக்கு விசாரணையை துரிதப்படுத்தக்கோரி காட்பிரே நோபிள் சென்னை உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தார். இந்த வழக்கை விசாரித்த உயர்நீதிமன்றம் 6 மாதங்களாக சம்மன் வழங்காத பாளையங்கோட்டை காவல் ஆய்வாளர்கள் நேரில் ஆஜராக உத்தரவிட்டிருந்தார்.
இந்த வழக்கு நீதிபதி பி.வேல்முருகன் முன் புதன்கிழமை விசாரணைக்கு வந்தது. அப்போது இரு காவல் ஆய்வாளர்கள் ஆஜராகினர்.
அப்போது காவல்துறை தரப்பில், வழக்கின் விசாரணைக்கு கடந்த மார்ச் மாதம் தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டது. எனவே, நீதிமன்றம் பிறப்பித்த சம்மன் குற்றம் சாட்டப்பட்டவர்களுக்கு வழங்கப்படவில்லை என தெரிவிக்கப்பட்டது.
வழக்கை விசாரித்த நீதிபதி, நீதிமன்ற சம்மனை குற்றம்சாட்டப்பட்டவர்களுக்கு வழங்காத பாளையங்கோட்டை காவல்நிலையத்தின் அப்போதைய காவல் ஆய்வாளர் தில்லை நாகராஜனுக்கு எதிராக நடவடிக்கை எடுக்கும்படி டிஜிபி-க்கு உத்தரவிட்டார்.
மேலும், அனைத்து அதிகாரிகளுக்கும், வழக்குப்பதிவு செய்வது, குற்றப்பத்திரிகை தாக்கல் செய்வது, சம்மன் அனுப்புவது, சாட்சிகள் பதிவு செய்வதில் தாமதம் செய்யக் கூடாது என அறிவுறுத்தல்களை வழங்கவும் டிஜிபி-க்கு உத்தரவிட்டார்.
திருநெல்வேலி நீதிமன்றத்தில் செப்டம்பர் 9-ஆம் தேதி குற்றம் சாட்டப்பட்ட முன்னாள் எம்பி உள்ளிட்ட அனைவரும் நேரில் ஆஜராக வேண்டும். இல்லாவிட்டால் அவர்களுக்கு எதிராக திருநெல்வேலி நீதிமன்றம் வாரன்ட் பிறப்பிக்க வேண்டும் என நீதிபதி உத்தரவிட்டார்.
இந்த வழக்கில் குற்றம் சாட்டப்பட்டவர்களுக்கு குற்றப் பத்திரிகை நகல்களை வழங்கி, ஒரு மாதத்தில் குற்றச்சாட்டுக்களை பதிவு செய்து, 6 மாதங்களில் வழக்கின் விசாரணையை முடிக்க வேண்டும். வழக்கை விரைந்து முடிக்க காவல்துறையினர் முழு ஒத்துழைப்பு வழங்கவேண்டும் என உத்தரவிட்டார்.
அதேபோல, புகார்தாரர் நோபிளுக்கு வழக்கு முடியும் வரை பாதுகாப்பு வழங்கும்படி திருநெல்வேலி காவல் ஆணையருக்கு உத்தரவிடும்படி, தமிழக டிஜிபிக்கு நீதிபதி உத்தரவிட்டுள்ளார்.
பெரும்பாலான வழக்கு விசாரணைகளின் தாமதத்துக்கு காவல்துறையினர் தான் காரணம். மெத்தனப்போக்குடன் புகார்களை கையாளுவதால் காவல்துறையினர் மீது மக்கள் நம்பிக்கை இழந்து விட்டனர் என நீதிபதி பிறப்பித்த உத்தரவில் குறிப்பிட்டுள்ளார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.