
சென்னை அண்ணா பல்கலைக்கழக மாணவி பாலியல் வன்கொடுமை வழக்கில் குற்றவாளி ஞானசேகரனுக்கு தூக்கு தண்டனை வழங்கியிருக்க வேண்டும் என்று பாஜக மூத்த தலைவர் தமிழிசை சௌந்தரராஜன் கூறியுள்ளார்.
சென்னை அண்ணா பல்கலைக்கழக மாணவி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட வழக்கில், கைது செய்யப்பட்ட ஞானசேகரன் குற்றவாளி என கடந்த மே 28 ஆம் தேதி தீர்ப்பளிக்கப்பட்ட நிலையில் இன்று(ஜூன் 2) தண்டனை விவரங்கள் அறிவிக்கப்பட்டுள்ளன.
அதன்படி, 11 பிரிவுகளில் குற்றச்சாட்டு நிரூபணமான நிலையில் ஞானசேகரனுக்கு 30 ஆண்டுகள் தண்டனைக் குறைப்பின்றி ஆயுள் தண்டனையுடன், ரூ.90 ஆயிரம் அபராதம் விதித்து சென்னை மகளிர் நீதிமன்ற நீதிபதி எம். ராஜலட்சுமி உத்தரவிட்டுள்ளார்.
இதற்கு அரசியல் கட்சித் தலைவர்கள் பலரும் வரவேற்பு தெரிவித்து வருகின்றனர்.
இந்நிலையில் தெலங்கானா முன்னாள் ஆளுநரும் பாஜக மூத்த தலைவர் தமிழிசை சௌந்தரராஜன், சென்னையில் செய்தியாளர்களுடன் பேசுகையில்,
"ஞானசேகரனுக்கு 30 ஆண்டுகள் ஆயுள் தண்டனை என்பது வரவேற்கக்கூடிய தீர்ப்புதான். ஆனால் பெண்களிடம் சொன்னால் தூக்கு தண்டனை கொடுங்கள் என்றுதான் கூறுவார்கள். அதனால் பெண்களுக்கு எதிரான குற்றங்களில் ஈடுபடுபவர்கள் உச்சபட்ச தண்டனை பெற வேண்டும். சாகும்வரை ஆயுள் தண்டனை பெற வேண்டும் அல்லது தூக்கு தண்டனை வழங்க வேண்டும். இது மக்களின் கருத்துதான்.
யாராக இருந்தாலும் தப்பிக்க கூடாது. ஞானசேகரனுக்கு 30 ஆண்டுகள் தண்டனை சரிதான். ஆனால் இவர்களுக்கு உதவியவர்கள் யார்? அவரது குற்றத்தின் பின்புலம் என்ன? யார் அந்த சார்? என்பதற்கு பதில் கிடைக்கவில்லை.
நீதிமன்றத்தின் தீர்ப்பை தங்கள் சாதனையாக திமுக சொல்லிக்கொள்கிறது. ஆனால் அவர்கள் தீர்வு தரக்கூடிய வேங்கைவயல் போன்ற பிரச்னைகளுக்குத் தீர்வு கிடைக்கவில்லை. அரக்கோணத்தில் எத்தனை சார்கள் இருக்கிறார்கள்? முதல்வர் முன்னெடுத்து அனைத்து பிரச்னைகளுக்கும் தீர்வு காண வேண்டும். சிலர் மட்டும் காப்பாற்றப்பட்டு விடக்கூடாது என்ற ஆதங்கம் எல்லோருக்கும் இருக்கிறது" என்று பேசினார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.