
வாழப்பாடி: ஜே.இ.இ. நுழைவுத் தோ்வில் தோ்ச்சி பெற்று, சென்னை ஐ.ஐ.டி.யில் இடம் பிடித்து சாதனை படைத்துள்ள சேலம் மாவட்டத்தைச் சோ்ந்த மலைவாழ் பழங்குடியின மாணவி ராஜேஸ்வரிக்கு பாராட்டுக்கள் குவிந்து வருகிறது.
சேலம் மாவட்டம், கல்வராயன்மலை கருமந்துறை கிராமத்தைச் சேர்ந்தவர் ஆண்டி (50). இவரது மனைவி கவிதா(45). தையல் தொழிலாளியான ஆண்டி கடந்தாண்டு உடல் நலக்குறைவால் உயிரிழந்தார். இந்த தம்பதியினருக்கு ஜெகதீஸ்வரி, ராஜேஸ்வரி, பரமேஸ்வரி என 3 மகள்களும், ஸ்ரீ கணேஷ் என்ற ஒரு மகனும் உள்ளனர்.
வேதியியல் பட்டதாரியான ஜெகதீஸ்வரி, சென்னையில் ஒரு தனியார் நிறுவனத்தில் பணிபுரிந்து வருகிறார். கணிதப் பட்டதாரியான ஸ்ரீ கணேஷ், தந்தை மறைவுக்குப் பிறகு அவரது தொழிலை தொடர்ந்து வருகிறார். பரமேஸ்வரி, கருமந்துறை அரசு உண்டு உறைவிட மேல்நிலைப் பள்ளியில் பிளஸ் 1 சேர்ந்துள்ளார். எட்டாம் வகுப்பு வரை கருமந்துறையில் ஒரு தனியார் பள்ளியில் படித்த ராஜேஸ்வரி, ஒன்பதாம் வகுப்பு முதல் பிளஸ் 2 வரை கருமந்துறை பழங்குடியினா் நல அரசு உண்டு உறைவிட மேல்நிலைப் பள்ளியில் படித்தார்.
பத்தாம் வகுப்பில் 500-க்கு 438 மதிப்பெண்களும், பிளஸ் 2 வகுப்பில் 600-க்கு 521 மதிப்பெண்கள் பெற்றார். இவருக்கு பெருந்துறையில் அரசு பயிற்சி மையத்தில் ஜே.இ.இ. நுழைவுத் தேர்வுக்கு பயிற்சி அளிக்கப்பட்டது. இதில் தேசிய அளவில் 417 ஆவது இடம் பிடித்தார். இவர் சென்னை ஐ.ஐ.டி.யில் படிப்பதற்கு வாய்ப்பு பெற்றுள்ளார்.
கல்வராயன் மலைப்பகுதியில் இருந்து பழங்குடியினத்தை சேர்ந்த ஒரு மாணவி சென்னை ஐ.ஐ.டி.யில் படிப்பதற்கு முதன்முறையாக இடம் பிடித்ததற்கு பள்ளி ஆசிரியர்கள், கல்வியாளர்கள், மக்கள் என பலரும் பாராட்டு தெரிவித்துள்ளனர்.
இறந்து போன தனது தந்தை, என்னை ஐஐடி போன்ற பெரிய புகழ்மிக்க கல்வி நிறுவனத்தில் படிக்க வைத்து உயரிய பதவியில் அமர வைக்க வேண்டுமென ஆசைப்பட்டார். எதிர்பாராத விதமாக கடந்தாண்டு இறந்து போனார்.
தந்தை மறைவிற்குப் பிறகு எனது அண்ணன் ஸ்ரீ கணேஷ் தந்தையின் தொழிலை செய்து என்னை படிக்க வைத்தார். தற்போது சென்னை ஐ.ஐ.டி.யில் படிப்பதற்கு தகுதி பெற்றுள்ளேன். இதற்கு எனது அண்ணன், பயிற்சி அளித்து ஊக்கப்படுத்திய ஆசிரியா்களுக்கும் நன்றி தெரிவித்துக் கொள்கிறேன்.
மேலும், பழங்குடியின மாணவ மாணவிகள் தன்னம்பிக்கையுடன் படித்து தேசிய அளவிலான தொழில்நுட்பக் கல்லூரிகளில் பயிலும் வாய்ப்பையும், பெரிய நிறுவனங்களில் சேரும் வாய்ப்பையும் பெற வேண்டுமென கேட்டுக் கொள்கிறேன்.
இந்த வெற்றியின் மூலம் தனது தந்தையின் கனவை நனவாக்கி இருப்பதாகவும் ராஜேஸ்வரி மகிழ்ச்சியும்,பெருமிதமும் தெரிவித்தார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.