மக்களவைத் தொகுதிகளை குறைக்க பாஜக அரசு சதி: தமிழச்சி தங்கபாண்டியன் குற்றச்சாட்டு

மக்கள்தொகை அடிப்படையில் மக்களவை தொகுதிகளை மறுவரையறை செய்வதன் மூலம் தமிழகத்தின் அரசியல் பிரதிநிதித்துவத்தைக் குறைக்க மத்திய பாஜக அரசு சதி
தென்சென்னை மக்களவை தொகுதி திமுக உறுப்பினா் தமிழச்சி தங்கபாண்டியன்
தென்சென்னை மக்களவை தொகுதி திமுக உறுப்பினா் தமிழச்சி தங்கபாண்டியன்
Published on
Updated on
2 min read

சென்னை: மக்கள்தொகை அடிப்படையில் மக்களவை தொகுதிகளை மறுவரையறை செய்வதன் மூலம் தமிழகத்தின் அரசியல் பிரதிநிதித்துவத்தைக் குறைக்க மத்திய பாஜக அரசு சதி செய்வதாக தென்சென்னை மக்களவை தொகுதி திமுக உறுப்பினா் தமிழச்சி தங்கபாண்டியன் குற்றம்சாட்டியுள்ளாா்.

இது தொடா்பாக அவா் வெளியிட்ட அறிக்கை:

மத்திய பாஜக அரசு மக்களாட்சி என்ற மகத்தான அரணை புல்டோசர்களைக் கொண்டு இடித்து தள்ளி நாசம் செய்யும் செயல்களைத் தொடர்ந்து செய்து வருகிறது. எந்தவித விவாதங்களுமின்றி மக்களைப் பாதிக்கும் சட்டங்களைக் கொண்டு வருவது, சர்வாதிகார போக்கோடு மாநிலங்களை வஞ்சிப்பது தொடர்கதையாகி வருகிறது. அதன் உச்சமாக அவர்கள் நிறைவேற்றத் துடிப்பதுதான் 2027 மக்கள்தொகை அடிப்படையில் மேற்கொள்ள இருக்கும் மக்களவைத் தொகுதி மறுவரையறை.

84-ஆவது அரசியலமைப்புச் சட்டத் திருத்தத்தின்படி 2026-க்கு பின் எடுக்கப்படும் மக்கள்தொகை கணக்கெடுப்பு அடிப்படையில் தொகுதி மறுவரையறையை மேற்கொள்ள வேண்டும். இதை நிறைவேற்றி மக்கள்தொகையை கட்டுப்படுத்தாத பாஜக ஆளும் மாநிலங்களின் எம்.பி,க்களின் எண்ணிக்கையை அதிகரித்து தமிழ்நாடு உள்ளிட்ட மக்கள் தொகையைக் கட்டுப்படுத்தி நாட்டின் வளர்ச்சிக்கு வித்திட்ட மாநிலங்களின் அரசியல் பிரதிநிதித்துவத்தைக் குறைக்க சதி செய்கிறது மத்திய பாஜக அரசு.

இச்சதியை ஆரம்பத்திலேயே அம்பலப்படுத்தி , பாதிக்கப்படப் போகும் மாநிலங்களை ஓரணியில் திரட்டி நியாயமான தொகுதி மறைவரையறை மேற்கொள்ள வலியுறுத்தினார் முதல்வர்.அப்போதெல்லாம் அதனை வீண் பயத்தை உண்டாக்குகிறார் என்று மூடி மறைக்க நினைத்தவர்கள் இப்போது 2027-இல் மக்கள்தொகை கணக்கெடுப்பு மேற்கொள்ளப்படும் என அறிவித்தது மூலம் சாயம் வெளுத்து போய் நிற்கிறார்கள்.

கரோனா காரணமாக 2021-இல் எடுக்காமல் விட்ட மக்கள்தொகை கணக்கெடுப்பை 2023-இல் எடுத்திருக்கலாம், 2024, 2025-இல் எடுத்திருக்கலாம். ஆனால் வேண்டுமென்றே காலம் தாழ்த்தி 2027-இல் எடுப்பதன் நோக்கம் ஒன்றே ஒன்றுதான், அது 2027 மக்கள் தொகை அடிப்படையில் உறுப்பினர்களின் எண்ணிக்கையை அதிகரிப்பது மட்டுமே.

இதற்கு என்ன சொல்ல போகிறது மத்திய பாஜக அரசு? மோடியும் அமித்ஷாவும் என்ன சொல்ல போகிறார்கள்? தமிழ்நாட்டின் எம்.பி,க்களின் எண்ணிக்கை குறையாது என்ற பழைய ஏமாற்று பல்லவியைப் பாடப் போகிறீர்களா? இல்லை கதையளந்து ஏமாற்றலாம் என எண்ணுகிறீர்களா.?

தமிழ்நாட்டு மக்கள் ஒன்றும் முட்டாள்கள் அல்ல. தமிழ்நாட்டின் குரல்வளையை நசுக்கி அரசியல் உரிமைகளற்ற அடிமைகளாக மாற்றும் மத்திய பாஜக அரசின் சதி திட்டத்தை எல்லாம் அறியாதவர்கள் அல்ல. தமிழ்நாட்டு மக்கள் கேட்பது ஒன்றே ஒன்றுதான், திராணி இருந்தால் நாவில் 1 விழுக்காடேனும் உண்மை இருந்தால் நேர்மையாக பதில் அளியுங்கள்…

2027 மக்கள் தொகை கணக்கெடுப்பு படி தொகுதி மறுவரையறை நடைபெற்றால் நாடாளுமன்றத்தில் 7.18% என்ற தமிழ்நாட்டின் அரசியல் பிரதிநிதித்துவம் குறையுமா? குறையாதா?

இல்லை, தொகுதி மறுவரையறை மேற்கொள்ளப் போவதில்லை என்றால் 2026-இல் காலாவாதியாகும் சட்டத்திருத்தத்திற்கு மாற்றாக மக்கள்தொகை அடிப்படையிலான தொகுதி மறுவரையறையைத் தள்ளிவைக்கும் சட்டத்திருத்தம் எப்போது கொண்டுவரப்படும்?

பதில் சொல்லுங்கள் அமித்ஷா எனத் தெரிவித்துள்ளாா் அவா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com