
மதுரையில் அமித் ஷாவின் பேச்சுக்கு கடும் கண்டனம் தெரிவித்துள்ள திமுக துணைப் பொதுச்செயலாளர் ஆ. இராசா, தேர்தல் வாக்குறுதிகள் தொடர்பான விவாதத்திற்கு அமித் ஷா தயாரா? என கேள்வி எழுப்பியுள்ளார்.
சென்னை அண்ணா அறிவாலயத்தில் செய்தியாளர்களுடன் பேசிய ஆ. இராசா,
"மத்திய உள்துறை அமைச்சர் என்பதை மறந்து அமித் ஷா பேசியிருக்கிறார். அவரது பேச்சு அப்பட்டமான பொய், அருவருப்பான வஞ்சகம், பிளவு நோக்கம் கொண்ட சூதுரை. அவருடைய பொறுப்பு, கடமை பற்றி கவலைப்படாமல் அவதூறுகளை அள்ளிவீசுவதும் ஒரு மாநிலத்தில் மாற்றுக்கட்சி ஆட்சி இருந்தால் ஆதாரமற்ற குற்றச்சாட்டுகளை அள்ளிவீசுவதும் சட்டம்-ஒழுங்கு பிரச்னையைத் தூண்டும் வகையிலும் பேசுவது கூட்டாட்சி தத்துவத்திற்கு நல்லதல்ல. இத்தகைய அரசியல் போக்கை அவர் இத்தோடு நிறுத்திக்கொள்வது நல்லது.
மத்திய அரசுக்கு நேரடி வரி வருவாய் தற்போது அதிகமாக வருகிறது. ஆனால் நிதி கொடுக்க மறுக்கிறார்கள்.
திமுகவைப் பார்த்து ஷாக் அடித்துதான் பாஜகவினர் இங்கு வருகிறார்கள். அவர்களின் பிளவுவாதமும் மத அரசியலும் தமிழ்நாட்டில் எடுபடவில்லை. தமிழக மக்கள் முதல்வரின் பின்னால் இருக்கிறார்கள். இதனை ஜீரணிக்க முடியாமல்தான் பாஜகவினர் இங்கு வந்து பேசுகிறார்கள். எங்களுக்கு என்ன பயம்? அவர்களைப் பார்க்கும்போது சிரிப்பாகத்தான் வருகிறது.
இதையும் படிக்க | 2026 பேரவைத் தேர்தலில் பாஜக - அதிமுக கூட்டணி ஆட்சி அமையும்: அமித் ஷா
மக்களவை தேர்தலின்போது பிரதமர் மோடி 5 முறை வந்தார். சுதந்திர இந்தியாவில் இதுபோன்று பிரதமர் 5 முறை ஒரு மாநிலத்திற்கு வந்த வரலாறு உள்ளதா?
மோடியும், அமித் ஷாவும் தமிழ்நாட்டிற்கு அடிக்கடி வர வேண்டும். அப்போதுதான் திமுகவிற்கான வாக்குகளும் அதிகரிக்கும். கடந்த மக்களவைத் தேர்தலில் எத்தனை முறை மோடி இங்கு வந்தாரோ நீலகிரி தொகுதியில் அவ்வளவுக்கு வாக்குகள் அதிகரித்தது.
தேர்தல் வாக்குறுதிகள் தொடர்பான விவாதத்திற்கு நான் கூப்பிடுகிறேன், அமித் ஷா தயாரா? தில்லியிலா? சென்னையிலா? புவனேஸ்வரத்திலா? எங்கு வேண்டுமானாலும் நான் வருகிறேன். ஆனால், ஹிந்தியில் மட்டும் பேசாதீர்கள்.
அமித் ஷாவையும் மோடியையும் பார்த்து நாங்கள் பயப்படவில்லை, அவர்கள் சாதாரணமான ஆள்கள். அவர்களுக்கு பின்னால் உள்ள ஒரு அரசியல் சித்தாந்தம் எல்லா இடங்களிலும் படையெடுத்து ஜெயிக்கிறது. ஆனால் இங்கு ஏன் ஜெயிக்க முடியவில்லை? ஏனென்றால் எங்களிடம் இங்கு மாற்று சித்தாந்தம் உள்ளது.
திராவிட இயக்க சித்தாந்தம் இருக்கும்வரை அவர்களால் இங்கு காலூன்ற முடியாது. நாங்கள் தில்லி அல்ல, நாங்கள் ஹரியாணாவோ மகாராஷ்டிரமோ அல்ல, நாங்கள் தமிழ்நாடு, நாங்கள் திராவிடம், அவர்கள் இங்கு வர முடியாது.
தொகுதி மறுசீரமைப்பு கொண்டுவரப்பட முன்னதாக முடிவு செய்துவிட்டதால்தான் 800க்கும் மேற்பட்ட எம்.பி.க்கள் இருக்கும் வகையில் புதிய நாடாளுமன்றம் கட்டப்பட்டுள்ளது. அப்படியெனில் அது மக்கள்தொகை அடிப்படையில் நடக்கும். தமிழ்நாடு வஞ்சிக்கப்படும். தென் மாநிலங்களின் ஆதரவு இன்றி அவர்களால் இப்போது நாடாளுமன்றத்தில் மசோதா நிறைவேற்ற முடியும். இதைத்தான் முதல்வர் சொல்கிறார்.
இந்து மத ஒற்றுமைக்காகவோ முருகருக்காகவோ அவர்கள் முருகர் மாநாடு நடத்தவில்லை, மதவாதத்தை தூண்டிவிடும் வகையில் சிறுபான்மை மக்களை ஒதுக்கும் வகையில் மாநாடு நடத்த முயற்சிக்கின்றனர். தமிழ்நாடு அமைதி பூங்காவாக இருப்பதை அமித் ஷா விரும்பவில்லை.
இல்லாத சரஸ்வதி நாகரிகத்திற்கும் பேசாத சமஸ்கிருத மொழிக்கும் மத்திய அரசு நிதி ஒதுக்குகிறது. ஆனால், எங்கள் கீழடிக்கு எங்கள் நாகரிகத்திற்கு எங்கள் இரும்பு பயன்பாட்டிற்கு எந்த அங்கீகாரமும் கொடுக்க மறுக்கிறார்கள். நாங்கள் இந்தியாவுடன்தான் இருக்கிறோமா என்று கேட்க வேண்டியிருக்கிறது. இதற்கான தண்டனையை அவர்கள் 2026 தேர்தலில் பெறுவார்கள்" என்று பேசினார்.
இதையும் படிக்க | 2026 தேர்தலில் தமிழ்நாட்டில் ஆட்சி மாற்றம் வந்தே தீரும்: ராமதாஸ்
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.