
கும்பகோணம் அருகே பம்பபடையூர் கிராமத்தில் தேசியமயமாக்கப்பட்ட வங்கி ஏடிஎம் முன்பு திடீரென அதிக சத்தத்துடன் மர்ம பொருள் வெடித்ததால் பரபரப்பு ஏற்பட்டது.
தஞ்சாவூர் மாவட்டம், கும்பகோணம் அருகே பம்பபடையூர் கிராமத்தில் தேசிய மயமாக்கப்பட்ட வங்கி மற்றும் அதனுடன் இணைக்கப்பட்ட ஏடிஎம் மையம் செயல்பட்டு வருகிறது.
இந்நிலையில், புதன்கிழமை காலை அந்த வங்கி ஏடிஎம் மையத்தில் பணம் எடுப்பதற்காக வந்த முலையூர் பகுதியைச் சேர்ந்த சுரேஷ் வங்கி ஏடிஎம் வாசல் முன்பு கத்தையாக சுருட்டப்பட்ட பேப்பர் பண்டலை கையில் எடுத்து ஓரமாக தூக்கி போட்டுள்ளார். அப்போது திடீரென அந்த பேப்பர் பண்டல் அதிக சத்தத்துடன் வெடித்துள்ளது. இதன் காரணமாக ஏடிஎம் மையத்தின் தரையில் போடப்பட்டிருந்த டைல்ஸ்கள் உடைந்து சிதறின.
இதனால் அதிர்ச்சி அடைந்தவர் இதுகுறித்து போலீசாருக்கு தகவல் தெரிவித்துள்ளார். தகவலை அடுத்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த போலீசார், இது தொடர்பாக வங்கி முன்பு பொருத்தப்பட்டுள்ள சிசிடிவி கேமராவில் பதிவாகியிருக்கும் காட்சிகளை ஆய்வு செய்து வருகின்றனர்.
வங்கி ஏடிஎம் முன்பு மர்ம பொருள் அதிக சத்தத்துடன் வெடித்ததால் ஏடிஎம் மையத்தில் வெடிகுண்டு வீசி கொள்ளை சம்பவம் நடந்ததாக அந்த பகுதி முழுவதும் தகவல் காட்டுத்தீயாக பரவியதால் பரபரப்பு ஏற்பட்டது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.