
திருச்செந்தூரில் இருந்து தஞ்சை நோக்கி சென்று கொண்டிருந்த மாவட்ட நீதிபதி கார், முன்னால் சென்று கொண்டிருந்த டிப்பர் லாரி மீது மோதிய விபத்தில் நான்கு பேர் சம்பவ இடத்திலேயே பலியாகினர். மேலும் இரண்டு பேர் பலத்த காயமடைந்தனர்.
தஞ்சாவூர் மாவட்ட நீதிபதி பூரண ஜெய ஆனந்த், வழக்குரைஞர் தனஞ்செய் ராமச்சந்திரன், நீதிமன்ற பணியாளர்கள் வாசு ராமநாதன், ஸ்ரீதர் குமார், உதயசூரியன், பாதுகாப்பு போலீஸ்காரர் நவீன் குமார் ஆகிய 6 பேர் இன்னோவா காரில் திருச்செந்தூரில் இருந்து புதன்கிழமை காலை தஞ்சை நோக்கி சென்று கொண்டிருந்தனர்.
தூத்துக்குடி - மதுரை தேசிய நெடுஞ்சாலையில் மேலகரந்தை விலக்கு பகுதியில் சென்று கொண்டிருந்தபோது இன்னோவா கார் ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்து முன்னால் சென்று கொண்டிருந்த டிப்பர் லாரி மீது மோதிய விபத்துக்குள்ளானது. இதில், காரில் பயணித்த வழக்குரைறிஞர் தனஞ்செய் ராமச்சந்திரன், போலீஸ்காரர் நவீன் குமார், நீதிமன்ற பணியாளர்கள் ஸ்ரீதர் குமார், வாசு ராமநாதன் ஆகிய நான்கு பேரும் சம்பவ இடத்திலேயே பலியாகினர். மாவட்ட நீதிபதி பூரண ஜெய ஆனந்த் மற்றும் நீதிமன்ற நீதிமன்ற பணியாளர் உதயசூரியன் ஆகியோர் பலத்த காயமடைந்தனர்.
தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த போலீசார், விபத்தில் காயமடைந்த நீதிபதி பூரண ஜெய ஆனந்த் மற்றும் நீதிமன்ற பணியாளரை மீட்டு தூத்துக்குடி மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். பலியானவர்களின் உடலை மீட்டு உடல்கூறாய்வுக்காக அருப்புக்கோட்டை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
இந்த விபத்து தொடர்பாக விளாத்திகுளம் டிஎஸ்பி அசோகன், விளாத்திகுளம் மாவட்ட உரிமையியல் மற்றும் நீதித்துறை நடுவர் நீதிபதி ஞான ஜெரீதா பிளவர், கோவில்பட்டி ஆர்.டி.ஓ. கிரிஜா, மோட்டார் இன்ஸ்பெக்டர் பெலிக்ஸ் மாசிலாமணி மற்றும் அதிகாரிகள் சம்பவ இடத்தை நேரில் பார்வையிட்டு விசாரணை மேற்கொண்டனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.